அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் என்ஜினீயரிங் கலந்தாய்வின் போது ஏதாவது
கல்லூரியின் பெயரை கூறி மாணவ-மாணவிகளிடம் வெளியாட்கள் சிபாரிசு செய்தால்
அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணைவேந்தர் பேராசிரியர்
மு.ராஜாராம் தெரிவித்தார்.
கலந்தாய்வு விளக்கம்
சென்னை அண்ணாபல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு ஜூலை 1-ந்தேதி தொடங்குகிறது. கலந்தாய்வை தமிழக அரசு சார்பில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் மாணவ-மாணவிகள் கலந்து கொள்வதற்காக அவர்கள் விண்ணப்பம் செய்வது முதல், கலந்தாய்வு முடிக்கும் வரை உள்ள சம்பவத்தை விவரமாக நேற்று மாணவர் சேர்க்கை தலைவரும் துணைவேந்தருமான பேராசிரியர் மு.ராஜாராம், செயலாளர் பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் ஆகியோர் விளக்கினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு பதிவாளர் கணேசன் முன்னிலை வகித்தார்.
கலந்தாய்வு விளக்கம்
சென்னை அண்ணாபல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு ஜூலை 1-ந்தேதி தொடங்குகிறது. கலந்தாய்வை தமிழக அரசு சார்பில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் மாணவ-மாணவிகள் கலந்து கொள்வதற்காக அவர்கள் விண்ணப்பம் செய்வது முதல், கலந்தாய்வு முடிக்கும் வரை உள்ள சம்பவத்தை விவரமாக நேற்று மாணவர் சேர்க்கை தலைவரும் துணைவேந்தருமான பேராசிரியர் மு.ராஜாராம், செயலாளர் பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் ஆகியோர் விளக்கினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு பதிவாளர் கணேசன் முன்னிலை வகித்தார்.
துணைவேந்தர் மு.ராஜாராம்
துணைவேந்தர் மு.ராஜாராம் நிருபர்களிடம் கூறியதாவது:-
என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஏற்கனவே 18 முறை முடிந்துவிட்டது. இந்த வருடம் 19-வது கலந்தாய்வாக நடத்த உள்ளோம். அதற்கான ஆயத்த பணிகள் செவ்வனே நடத்தப்பட்டு வருகின்றன. மாணவர்கள் கல்விக்கடன் தொடர்பான சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்யவும், கடன் பெறுவதற்கான தொடக்க நிலையையும் அறிந்து கொள்ள கலந்தாய்வு நடக்கும் இடம் அருகே வங்கிகள் அரங்குகளை அமைக்க இருக்கின்றன.
என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு மொத்தம் 1 லட்சத்து 54 ஆயிரத்து 238 பேர் விண்ணப்பித்து உள்ளார்.
அவர்களின் விண்ணப்பம் வந்து சேர்ந்ததா என்பதை அறிய அப்ளிகேசன் நம்பரை அண்ணாபல்கலைக்கழக இணையதளத்தில் போட்டு பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இட ஒதுக்கீடு
ஒரே மதிப்பெண்ணை ஆயிரம் பேர் பெற்றிருக்கிறார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் தனது பள்ளி வாழ்க்கையில் ஏதாவது ஒரு வருடம் அல்லது அதற்கு மேற்பட்டு வெளி மாநிலத்தில் படித்தால் அவர்களுக்கு பூர்வீகச் சான்று (நேட்டிவிட்டி சர்டிபிகேட்) தேவை. அவர்கள் எந்த சமூகத்தை சேர்ந்தவரோ அந்த சமூகத்திற்கான இட ஒதுக்கீட்டை பெறலாம்.
ஆனால் வெளிமாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் தமிழ்நாட்டில் படித்தால் அவர்கள் பொதுப்பிரிவினராகத்தான் கருதப்படுவார்.
அவர்களுக்கு வகுப்பு வாரியான இட ஒதுக்கீடு கிடையாது. சாதிச்சான்று சமர்பிக்க தவறினால் ரேங்க் போடும்போது அவர்கள் பொதுப்பிரிவினராகத்தான் கருதப்பட்டு வெளியிடப்படும்.
கலந்தாய்வுக்கு வருவதற்கு 2 நாட்களுக்கு முன்பாக சாதிச்சான்றை அண்ணா பல்கலைக்கழகத்தில் சமர்பித்தால் அவர்கள் எந்த வகுப்பை சார்ந்தவரோ அந்த வகுப்புக்கு உரிய இட ஒதுக்கீடு கிடைக்கும்.
கலந்தாய்வுக்கு வரும் மாணவர் அல்லது மாணவியுடன் ஒருவர் மட்டும் கலந்தாய்வு அறைக்கு அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் கலந்தாய்வு பந்தலுக்கு பெற்றோர் அல்லது உறவினர்கள் வரலாம். அவ்வாறு அவர்கள் ஊர்களில் இருந்த பஸ்சில் வருவதற்கும், ஊர்போய்ச் சேருவதற்கும் மாணவருடன் ஒருவரை அழைத்து வரலாம். இருவருக்கும் 50 சதவீத பஸ் கட்டண சலுகை பெறலாம்.
எந்த தேதியில் கலந்தாய்வு என்று அனைவருக்கும் கடிதம் வரும். கடிதம் வராதவர்கள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் கலந்தாய்வு அட்டவணையை பார்த்து அதை பதிவிறக்கம் செய்து கொண்டு கலந்தாய்வு நடக்கும் அன்று வரவேண்டும். அதை கலந்தாய்வுக்கான கவுண்ட்டரில் காண்பித்து டூப்ளிகேட் ஹால்டிக்கெட் கொடுக்கப்படும்.
கடும் நடவடிக்கை
கலந்தாய்வு நேரத்திற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாக கண்டிப்பாக வரவேண்டும். கலந்தாய்வுக்கு முன்பாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆயிரம் பேர் உட்காரக்கூடிய வசதி கொண்ட கலந்தாய்வு டிஸ்பிளே ஹாலுக்கு செல்லலாம். அங்கு திரையில் எந்த கல்லூரியில் எந்த இடம் காலியாக உள்ளது என்ற விவரம் அவ்வப்போது காண்பிக்கப்படும்.
அந்த இடத்தில் யாராவது தனியார் கல்லூரியைச்சேர்ந்தவர்கள் இந்த கல்லூரியை தேர்ந்து எடுங்கள் என்று வெளி ஆட்கள் சிபாரிசு செய்யக்கூடாது. துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கக்கூடாது. அவ்வாறு யாராவது சிபாரிசு செய்தாலோ அல்லது துண்டு பிரசுரங்கள் கொடுத்தாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கல்லூரியை தேர்ந்து எடுங்கள்
கலந்தாய்வுக்கு முன்பாக எந்த கல்லூரியில் சேர விரும்புகிறீர்களோ அந்த கல்லூரிக்கு நேரில் சென்று பாருங்கள். கட்டமைப்பு வசதி உள்ளதா? சீனியர் மாணவர்களிடம் இந்த கல்லூரியில் கேம்பஸ் இண்டர்வியூவில் மாணவர்கள் சென்றுள்ளனரா? என்ற விவரத்தை கேட்டறியுங்கள் அதன் பின்னர் கல்லூரியை தேர்ந்து எடுத்து படியுங்கள்.
மொத்தத்தில் எல்லா மாணவர்களும் அவர்களின் கட்ஆப் மதிப்பெண்ணுக்கு ஏற்ப சிறந்த கல்லூரியை தேர்ந்து எடுத்து படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.
இவ்வாறு துணைவேந்தர் பேராசிரியர் மு.ராஜாராம் தெரிவித்தார்.