அதிக தேர்ச்சி
சென்னை ஐகோர்ட்டில், எம்.கபிலன் உள்பட பல மாணவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த கல்வியாண்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்தனர். ஆனால், இந்த ஆண்டு நடந்து முடிந்த பொதுத்தேர்வில் கலந்து கொண்டவர்கள் குறைவான மதிப்பெண்களே எடுத்துள்ளோம்.
தடை உத்தரவு
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.சத்தியநாராயணன், ‘மனுவுக்கு பதிலளிக்க மருத்துவ கல்வி இயக்குனருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். மருத்துவ கல்விக்கான கலந்தாய்வு, இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது’ என்றும் உத்தரவில் கூறியிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து மாணவர்கள் பலர் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுக்களை நீதிபதிகள் சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, எம்.வேணுகோபால் ஆகியோர் விசாரித்தனர். அப்போது, மருத்துவ கல்வி கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டாலும், இறுதி தீர்ப்பு வரும் வரை கல்லூரிகளை ஒதுக்கீடு செய்து மாணவர்களுக்கு ஆணை வழங்கக்கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கில், மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி பதில் மனு தாக்கல் செய்தார்.
சட்டப்படி சேர்க்கை
அதில், தமிழ்நாடு தொழில் கல்வி மாணவர்கள் சேர்க்கை சட்டத்தின் அடிப்படையில் தான் தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த விதிகளின்படி, 17 வயது பூர்த்தியடைந்த மாணவர்கள் மருத்துவ கல்விக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். கடந்த கல்வியாண்டில் தேர்ச்சி பெற்றவர்கள் அதிக மதிப்பெண் எடுத்துள்ளனர் என்று மனுதாரர்கள் கூறுவதை ஏற்கமுடியாது. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். நேற்று இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் பிறப்பித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
ஏற்க முடியாது
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., என்ஜினீயரிங் உள்ளிட்ட தொழில் கல்விக்கான மாணவர்கள் சேர்க்கை தமிழ்நாடு தொழில் கல்வி மாணவர்கள் சேர்க்கை சட்டத்தின்படி நடைபெறுகின்றன. இந்த சட்டம், உரிய கல்வி தகுதியுடன், வருகிற டிசம்பர் 31-ந் தேதி 17 வயது பூர்த்தியடையக்கூடிய மாணவர்கள் மருத்துவ கல்விக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளது.
இந்த சட்டத்தில், நடப்பு கல்வியாண்டில் பிளஸ்-2 தேர்ச்சிபெற்ற மாணவர்கள் மட்டுமே கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறப்படவில்லை. மேலும், இந்த சட்டத்தை எதிர்த்து மனுதாரர்கள் வழக்கு தொடரவில்லை. மனுதாரர்கள் தரப்பில், கடந்த கல்வியாண்டில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். இந்த கல்வியாண்டு மாணவர் கள் குறைவான மதிப்பெண்கள் எடுத்துள்ளனர் என்று கூறுவதை ஏற்க முடியாது.
மாணவரின் உரிமை
ஒரு மாணவன் தன் விருப்பப்படி தொழில் கல்வியை தேர்வு செய்ய உரிமை உள்ளது. அதன்மூலம் அவனது எதிர்காலம் அமைகிறது. எனவே, ஒருமுறை தொழில் கல்வியில் தேர்வு செய்யப்படவில்லை என்பதற்காக அவனுக்கு மீண்டும் வாய்ப்புகள் வழங்கக்கூடாது என்று கூற முடியாது.
தமிழ்நாடு தொழில் கல்வி மாணவர்கள் சேர்க்கை சட்டத்தின்படி, கல்வி தகுதி, மதிப்பெண் தகுதி உள்ள மாணவர்கள் படித்த கல்வியாண்டு வித்தியாசம் இல்லாமல் மருத்துவ கல்வியில் சேரலாம் என்று கூறுகிறது. எனவே, கடந்த கல்வியாண்டு மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொண்டால், 50 சதவீத மருத்துவ இடங்கள் அவர்களுக்கு கிடைத்துவிடும் என்று மனுதாரர்கள் கூறுவதையும் ஏற்கமுடியாது.
வழக்கு தள்ளுபடி
மருத்துவ கல்விக்கான மாணவர்கள் சேர்க்கை கையேட்டில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய படிப்புகளில் கடந்த ஆண்டு (தனியார் கல்லூரிகளில்) சேர்ந்தவர்கள் அதே மருத்துவ படிப்புக்கான இந்த ஆண்டு கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியாது என்று மட்டுமே கூறியுள்ளது. ஆனால், பிற தொழில் கல்வி படிப்பில் சேர்ந்தவர்களுக்கு தடை எதுவுமில்லை.
எனவே, மருத்துவம் உள்ளிட்ட தொழில் கல்விக்கான மாணவர்கள் சேர்க்கையை நுழைவுத்தேர்வு மூலம் தேர்வு செய்ய வேண்டும் என்றும் எங்களால் உத்தரவிட முடியாது. இந்த காரணங்களால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று முடிவு செய்து தள்ளுபடி செய்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதன்மூலம் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வு பெற்ற மாணவர்கள் கலந்துகொள்வதில் எந்த தடையும் இல்லை.








