ஐஐடி போன்ற உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் படிப்புகளில் சேருவதற்கான
ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வின் (ஜே.இ.இ.) முதன்மைத் தேர்வு முடிவுகள்
வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.www.jeeadv.iitb.ac.in என்ற இணையதளத்தில்
முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். என்ஐடி, ஐஐடி போன்ற உயர்
தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒருங்கிணைந்த
நுழைவுத் தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தி
வருகிறது.
முதலில் பிரதான (மெயின்) தேர்வு நடத்தப்படும். அதைத்
தொடர்ந்து முதன்மைத் (அட்வான்ஸ்டு) தேர்வு என இரண்டு கட்டங்களாக தேர்வு
நடத்தப்படும். இந்தாண்டு பிரதானத் தேர்வு ஏப்ரல் முதல் வாரத்தில்
நடத்தப்பட்டது. பின்னர் முதன்மைத் தேர்வு கடந்த மே 24-ஆம் தேதி
நடத்தப்பட்டது. இதில் நாடு முழுவதிலுமிருந்து 1,17,238 பேர் பங்கேற்றனர். இந்த முதன்மைத் தேர்வு முடிவு இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் 23,407 மாணவர்கள், 3,049 மாணவிகள் உள்பட நாடு முழுவதிலுமிருந்து 26,456 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சாத்வத் ஜாக்வானி 504 மதிப்பெண்களுக்கு 469 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த 451 பேர் தகுதி: ஜே.இ.இ. முதன்மைத் தேர்வில் தமிழகத்திலிருந்து எழுதிய 2,158 பேரில் 451 பேர் தகுதி பெற்றுள்ளனர். இதில் சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த எஸ். ராகவன் என்ற மாணவர் 504-க்கு 364 மதிப்பெண்கள் பெற்று தமிழக அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.
அவருடன் திருவான்மியூரைச் சேர்ந்த ஹர்பித்சிங் (341), கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த ஹரிபிரசாத் (329), அயனாவரத்தைச் சேர்ந்த அனிரூத் (328), சேத்துப்பட்டுவைச் சேர்ந்த காவியா (327), ஆவடியைச் சேர்ந்த விநாயக் (325), காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கவிதா (319), ஈரோட்டைச் சேர்ந்த ஆதவன் நம்பி (318), எழும்பூரைச் சேர்ந்த ஷம்பித் (315), முகப்பேர் மேற்கைச் சேர்ந்த நிஷாக்குமார் (314) ஆகியோர் தமிழக அளவில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளனர்.