சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்த விவரம்:தமிழகத்தில்
முழு மது விலக்கு கோரி பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும், புரட்சிகர
மாணவர்-இளைஞர் முன்னணி இயக்கத்தினரும் சில நாள்களுக்கு முன்
சேத்துப்பட்டில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை முற்றுகையிட்டு போராட்டம்
நடத்தினர். அப்போது, மாணவர்கள் திடீரென அந்த மதுபானக் கடையை சூறையாடினர்.
இதையடுத்து போலீஸார், மாணவர்கள் மீது தடியடி நடத்தினர்.
மேலும்,
இதுதொடர்பாக போலீஸார் 15 பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்த
நிலையில், கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்கக் கோரியும், தமிழத்தில்
முழு மது விலக்கை அமல்படுத்த வலியுறுத்தியும் பச்சையப்பன் கல்லூரி
மாணவர்கள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்தப் போராட்டத்தில் சுமார் 200 மாணவர்கள் பங்கேற்றனர். போராட்டத்தின் முடிவில் சில மாணவர்கள், கல்லூரிக்கு வெளியே பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த போலீஸார் மீது கற்களை வீசினர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இருப்பினும் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.