முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமுக்கு ‘தினமணி’ நாளிதழ் நினைவு அஞ்சலி
கூட்டத்தை நேற்று நடத்தியது. அதில் கலந்துக் கொண்ட அப்துல்கலாமின் முன்னாள்
அறிவியல் ஆலோசகர் வெ.பொன்ராஜ், ‘அப்துல்கலாம் நாட்டின் வரலாறு அல்ல,
இந்தியாவின் எதிர்காலம்‘ என்று பேசினார்.
நினைவு அஞ்சலி
இந்திய முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாம் கடந்த மாதம் 27–ந்
தேதி மேகாலயா மாநிலத்தில் மரணமடைந்தார். அவருக்கு நினைவு அஞ்சலி செலுத்தும்
வகையில், ‘தினமணி’ நாளிதழும், சென்னை பல்கலைக்கழகமும் இணைந்து ‘கனவல்ல...
எழுச்சி!‘ என்ற நிகழ்ச்சியை நேற்று நடத்தின.
சென்னை பல்கலைக்கழக
வளாகத்தில் உள்ள நூற்றாண்டு அரங்கத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது.
அரங்கத்தின் நுழைவு வாயிலில் இருபுறமும் அப்துல்கலாமின் பெரிய
புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன. நிகழ்ச்சிக்கு வந்த அனைவரும், அந்த
படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி விட்டு, அரங்கத்துக்குள் சென்றனர்.
அரங்கத்தின் வலதுபுறம் அப்துல்கலாமின் அரிய வகைப் புகைப்படங்கள்
கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
புகைப்பட கண்காட்சி
அதில், அப்துல்கலாம் தன் பெற்றோர், சகோதரர், சகோதரியுடன் சிறு
வயதில் எடுத்துக் கொண்ட புகைப்படம் முதல் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்,
முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய், மன்மோகன்சிங், பிரதமர் நரேந்திரமோடி, தமிழக
முதல்–அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட பல தலைவர்களுடன் இருக்கும் புகைப்படங்கள்
இடம் பெற்றிருந்தன.
நினைவு அஞ்சலி கூட்டம் மாலை 5.30 மணிக்கு
தொடங்கியது. அப்போது, ‘கனவல்ல... எழுச்சி!‘ என்ற தலைப்பில் அரை மணிநேரம்
ஓடக்கூடிய ஆவணப்படம் திரையிடப்பட்டது.
அதில், அப்துல்கலாம்
வெளிநாடுகளில் நடத்திய முக்கிய உரைகள் ஒளிபரப்பப்பட்டது. இந்த
நிகழ்ச்சியில் சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் இரா.தாண்டவன்,
அப்துல்கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர் வெ.பொன்ராஜ், ‘தினமணி’ ஆசிரியர்
கே.வைத்தியநாதன், மருத்துவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சுதா சேஷய்யன்,
கவிக்கோ அப்துல்ரகுமான், அப்துல்கலாமின் அண்ணனுடைய பேரன் ஷேக் சலிம்
ஆகியோர் ‘கலாமின் பன்முக ஆளுமை‘ என்ற தலைப்பில் பேசினார்கள்.
மரபுகள்
இந்த நிகழ்ச்சியில், மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்,
ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன், பழ.நெடுமாறன் உள்ளிட்டோர்
பார்வையாளர்களுடன் உட்கார்ந்து, நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் வெ.பொன்ராஜ் பேசியதாவது:–
அப்துல்கலாம்
ஜனாதிபதியாக இருந்தபோது, மரபுகள், சம்பிரதாயங்களை எல்லாம்
உடைத்தெறிந்தார். பாராளுமன்றத்தில் பேசவேண்டிய உரையை மத்திய அரசு தயாரித்து
அனுப்பும். அதைத்தான் ஜனாதிபதி வாசிப்பது மரபாக இருந்தது. ஆனால்,
அப்துல்கலாம் ஜனாதிபதியாக இருந்தபோது, மத்திய அரசு அனுப்பிய உரையின் முதல்
பகுதியில், நாட்டின் வளர்ச்சி குறித்தும் தன்னுடைய லட்சியத்தை குறித்தும்
கவிதை எழுதி, அதை வாசித்தார். பின்னர் மத்திய அரசின் உரையை வாசித்தார்.
எதிர்காலம்
அப்துல்கலாம் நாட்டின் வளர்ச்சிக்கு 10 கட்டளைகளை உருவாக்கினார்.
நகரத்தில் கிடைக்கும் அனைத்து வசதிகளும் கிராமத்திலும் கிடைக்கவேண்டும்.
சுத்தமான தண்ணீர் மற்றும் எரிசக்தி மக்களுக்கு கிடைக்கவேண்டும். விவசாயத்தை
முன்னேற்ற வேண்டும் என்பது உள்பட 10 கட்டளைகளை அவர் அறிவித்தார்.
அவரது
அறிவுரையின்படி பீகாரில் 2,500 ஹெக்டேரில் விவசாயம் செய்யப்பட்டது. முன்பு
ஒரு ஹெக்டேருக்கு 2 டன் நெல் விளைந்த இடத்தில் 5 டன்னாகவும், 2 டன் கோதுமை
விளைந்த இடத்தில் 7 டன்னாகவும் விளைச்சல் அதிகரித்தது.
மாணவர்களும்,
இளைஞர்களும்தான் அப்துல்கலாமின் நம்பிக்கை நட்சத்திரங்கள். ‘‘ஊழலுக்கு
எதிராக போராடுவேன். என் பெற்றோர் ஊழல் செய்தால், அவர்களை அன்பால்
திருத்துவேன்’’ என்று 2.50 கோடி மாணவர்களை அப்துல்கலாம் சபதம் ஏற்கச்
செய்தார்.
மாணவர்களின் ஆரம்பக்கல்வி சரியாக இருந்தால்தான், உயர்கல்வி
சரியாக அமையும் என்பதை வலியுறுத்தினார். அப்துல்கலாம் இந்த நாட்டின்
வரலாறு அல்ல. இந்தியாவின் எதிர்காலம். அவர் விதைக்கப்பட்டுள்ளார். அவரது
கனவை நினைவாக்குவது இளைஞர்களின் கையில்தான் உள்ளது.
இவ்வாறு பொன்ராஜ் பேசினார்.
பதவி தேவையில்லை
இதையடுத்து ‘தினமணி’ ஆசிரியர் கே.வைத்தியநாதன் பேசியவதாவது:–
மக்களுக்கு
நல்லது செய்ய வேண்டும் என்றால், எம்.எல்.ஏ., எம்.பி. முதல்–அமைச்சர்,
பிரதமர் என்ற பதவிகள் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மத்தியில், சமூக
சேவைக்கு பதவிகள் தேவையில்லை என்பதை அப்துல்கலாம் நிரூபித்துக்
காட்டியுள்ளார்.
ஏதோ அவர் ஜனாதிபதி பதவிக்கு வந்த பிறகுதான்,
அவருக்கு சமூக அக்கறை வந்தது என்று யாரும் நினைத்து விடக்கூடாது. சிறுவயது
முதலே அவர் அடிமனதில் சமூக அக்கறை இருந்துள்ளது. உதாரணத்துக்கு, 1980–ம்
ஆண்டுகளில் ரோகிணி செயற்கைகோள் ஏவி இந்தியாவுக்கு வெற்றியை
பெற்றுத்தந்தார். அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தி, ‘உங்களுக்கு என்ன
வேண்டும்?’ என்று அப்துல்கலாமிடம் கேட்டார். அவர் பதவியோ, பதக்கமோ
கேட்கவில்லை. நாடு முழுவதும் 50 லட்சம் மரங்களை நடுவதற்கு நடவடிக்கை
எடுங்கள் என்றுதான் கோரிக்கை வைத்தார்.
குறைகூற முடியாத மனிதர்
ஒரு தடவை இதுகுறித்து நான் அப்துல்கலாமிடம் கேட்டேன். நம்
முன்னோர்கள் நமக்கு சுத்தமான தண்ணீர், பூமி உள்ளிட்டவைகளை தந்துள்ளனர்.
அதுபோல வருங்கால சந்ததியினருக்கு நாமும் கொடுத்துச் செல்லவேண்டாமா? என்று
கேட்டார். அந்த அளவுக்கு சமுதாயத்தின் மீது பற்றுடன் அவர் திகழ்ந்தார்.
ஒரு
தலைவன் என்றால், அவனது சொந்த ஊரில் அவனைப் பற்றி தவறாக பேசுவதற்கு 2 பேர்
எப்போதும் இருப்பார்கள். ஆனால், அப்துல்கலாம் மறைந்தபோது, அவரது சொந்த ஊர்
மட்டுமல்ல, ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும், தங்களது குடும்பத்தில் ஒருவர்
இறந்து விட்டதாக நினைத்து வேதனையுடன் நினைவு அஞ்சலி செலுத்தினார்கள்.
இதன்மூலம், ஒரு மனிதன் கூட குறை கூற முடியாத அளவு ஒருவன் வாழ முடியும்
என்பதை அப்துல்கலாம் நிரூபித்து சென்றுள்ளார்.
தமிழில் படித்து முன்னேறியவர்
பெருநகரங்களில் உள்ள பள்ளிக்கூடத்தில் ஆங்கில வழியில் படித்தால்தான்
முன்னேற முடியும் என்று நினைத்து, எல்லாரும் தங்களது பிள்ளைகளை அதுபோன்ற
பள்ளிகளுக்கு அனுப்பி வருகின்றனர்.
ஆனால், தாய்மொழியில், தமிழில்,
அதுவும் அரசு பள்ளியில் படித்து உயர்ந்த இடத்துக்கு வர முடியும் என்பதை
அப்துல்கலாம் நிரூபித்துள்ளார். அவர், இளைஞர்களால் சாதிக்க முடியும் என்று
அவர்களிடம் சொல்லி ஊக்கப்படுத்தியது மட்டுமல்ல, ஊக்கப்படுத்தும் விதமாக
வாழ்ந்தும் காட்டினார். இவ்வாறு அவர் பேசினார்.