அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப
தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன்
வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள்
உள்பட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இப்போது மழைக்காலமாக
இருப்பதால், டெங்கு, வைரஸ் உள்ளிட்ட காய்ச்சல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனால், அரசு மருத்துவர்களை விடுமுறை எடுக்காமல் பணியாற்ற தமிழக அரசு ஆணை
பிறப்பித்துள்ளது. இதனால் அவர்களுக்கு பணிச்சுமை ஏற்படும். எனவே, காலிப்
பணியிடங்களை உடனே நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை
ஒப்பந்த அடிப்படையிலாவது பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வாசன்
கூறியுள்ளார்.