திருக்குறளை கொரிய மொழியில் மொழிபெயர்ப்பது இரு நாட்டு
கலாசார உறவை வலுப்படுத்த உதவும் என சென்னைக்கான தென் கொரியத் துணைத் தூதர்
கிம் கியாங்சூ கூறினார்.
தென் கொரிய துணைத் தூதரகமும், சர்வதேச தமிழ் கல்வி
நிறுவனமும் இணைந்து இந்திய - கொரிய கலாசார பரிமாற்றம் என்ற தலைப்பிலான
சர்வதேச கருத்தரங்கை சென்னையில் அண்மையில் நடத்தின.
கருத்தரங்கில் தென் கொரிய துணைத் தூதர் கிம் கியாங்சூ பேசியது:
கொரிய மொழிக்கும் தமிழுக்கும் உள்ள உறவை ஆய்வு
செய்யவும், மேலும் வலுப்படுத்தும் நோக்கத்திலேயே இந்த சர்வதேச கருத்தரங்கம்
நடத்தப்படுகிறது. அதே நேரம், திருக்குறளை கொரிய மொழியில் மொழி பெயர்க்கும்
தமிழக அரசின் பணி, இரு நாடுகளின் கலாசார, பண்பாட்டு உறவை மேலும்
வலுப்படுத்த உதவும் என்றார்.
தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் சேகர்: திருக்குறளை
கொரிய மொழியிலும் மொழிபெயர்க்க வேண்டும் என்ற கொரிய மக்கள், தமிழறிஞர்களின்
கனவை நனவாக்கும் வகையில் விதி எண் 110-இன் கீழ் தமிழக அரசு உத்தரவு ஒன்றை
பிறப்பித்தது.
அதன்படி, திருக்குறளை கொரிய மொழியில் மொழிபெயர்க்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
தமிழில் உள்ள மெய்யெழுத்துக்களைப் போன்றே, கொரிய
மொழியிலும் பல மெய்யெழுத்துக்கள் உள்ளன. கொரிய மொழியோடு மட்டுமின்றி,
தெற்காசிய மொழிகளுடனும் தமிழக்கு உறவு உள்ளது.
எனவே, பண்பாட்டை ஆய்வு செய்வதைப் போல, மொழி உறவையும்
ஆய்வு செய்து நாம் அனைவரும் ஓரினம், ஒரே குலம் என்பதை தீர்மானிக்க இந்தக்
கருத்தரங்கம் உதவும் என்பதில் சந்தேகமில்லை என்றார்.