அப்துல்கலாம் விஷன் இந்தியா அறக்கட்டளையின் அறங்காவலர் குமார். இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-
தேர்வு
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால், தமிழகத்தில் கனமழை பொழிந்து, பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் இன்றும் மின்சார இணைப்பு இல்லாமல் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகம், வருகிற 15-ந் தேதி முதல், என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ‘செமஸ்டர்’ தேர்வுகள் நடத்தப்படும் என்று கடந்த 10-ந் தேதி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கல்விக்கடன்
ஏற்கனவே மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த சூழ்நிலையில், தேர்வு எழுத மாணவர்களை நிர்பந்தம் செய்தால், அது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், செமஸ்டர் தேர்வில் தோல்வியடைந்தால், மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக்கடனும் நிறுத்தப்படும். இதுகுறித்து, எங்கள் அறக்கட்டளையின் தலைமை ஆலோசகராக இருக்கும், அப்துல்கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர் வி.பொன்ராஜூக்கு இ-மெயில் மூலம் மாணவர்கள் பலர் புகார்கள் செய்தனர்.
இதையடுத்து கடந்த 11-ந் தேதி தமிழக கவர்னருக்கும், 13-ந் தேதி தமிழக அரசுக்கும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் செமஸ்டர் தேர்வை தள்ளிவைக்கவேண்டும் என்று வி.பொன்ராஜ் கோரிக்கை மனுக்களை அனுப்பியும் இதுவரை எந்த பதிலும் இல்லை.
தள்ளிவைக்க வேண்டும்
எனவே, வருகிற 15-ந் தேதி முதல், முதலாம் ஆண்டு என்ஜினீயரிங் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு நடைபெறும் என்று தன்னுடைய இணைய தளத்தில் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பை ரத்து செய்யவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்கவேண்டும் என்று தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் முன்பு மனுதாரர் தரப்பு வக்கீல் ஆஜராகி கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழகத்தின் கருத்தை கேட்டு தெரிவிக்கும்படி அரசு பிளீடருக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தேதி மாற்றம்
இந்த நிலையில், நேற்று பிற்பகலில் தலைமை நீதிபதி தலைமையிலான முதன்மை அமர்வில், அரசு பிளீடர் எஸ்.டி.எஸ். மூர்த்தி ஆஜராகி, ‘மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த முதலாம் ஆண்டு என்ஜினீயரிங் மாணவர்களுக்கு, டிசம்பர் 15-ந் தேதி (இன்று) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட செமஸ்டர் தேர்வு வருகிற 28-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அழகப்பா என்ஜினீயரிங் கல்லூரி உள்ளிட்ட 4 தன்னாட்சி கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஜனவரி 2-ந் தேதி முதல் தேர்வு நடத்தப்படும்’ என்று கூறினார். இதற்கு நீதிபதிகள், ‘இந்த தகவலை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிட்டு, நாளை (செவ்வாய்க்கிழமை) அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும்’ என்று கூறினார்கள்.








