வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 28-ந்தேதி தொடங்கியது. ஆரம்பத்தில் பெய்த தொடர்மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்பட வட மாவட்டங்கள் வெள்ளக்காடானது. இதையடுத்து நவம்பர் 8-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்தநிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலையால் பலத்த மழை பெய்தது. செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஏரிகள் நிரம்பி உபரிநீர் திறக்கப்பட்டதால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மீண்டும் வெள்ளத்தில் தத்தளித்தன.
பள்ளிகள்-கல்லூரிகளுக் கும் வெள்ளநீர் புகுந்ததையடுத்து நவம்பர் 29-ந் தேதி முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது.
மழை வெள்ளம்
மழை ஓய்ந்து இயல்பு நிலை திரும்பி வந்ததால் டிசம்பர் 9-ந்தேதி பள்ளி-கல்லூரிகள் திறக்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான பள்ளி-கல்லூரிகளில் மழை தண்ணீர் வடியாமல் இருந்ததால் விடுமுறை டிசம்பர் 13-ந்தேதி வரை நீடிக்கப்பட்டது.
பள்ளி-கல்லூரிகள் 14-ந்தேதி(நேற்று) முதல் வழக்கம் போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து அரசு மற்றும் மாநகராட்சி பள்ளி-கல்லூரிகளில் தேங்கிய வெள்ளநீரை மோட்டார் பம்பு மூலம் வெளியேற்றும் பணியில் பள்ளிக்கல்வி துறை, மாநகராட்சி அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டனர். தனியார் பள்ளி-கல்லூரிகளில் தேங்கிய தண்ணீரை பள்ளி நிர்வாகத்தினர் வெளியேற்றினர்.
சென்னையில் தண்ணீர் முற்றிலும் வடியாமலும், முகாம்களாக செயல்படும் 29 பள்ளிகளுக்கு மட்டும் நேற்றும் விடுமுறை அளிக்கப்பட்டது.
மழைநீரை வெளியேற்றி தூய்மை பணி முடிவடைந்ததையடுத்து 15 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி-கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன.
மாணவ-மாணவிகள் இரங்கல்
பள்ளி, கல்லூரி தோழர்களை நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திக்கும் ஆர்வத்தில் பல மாணவ-மாணவிகள் மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் சென்றனர்.
நீண்ட நாட்கள் வீட்டில் ஜாலியாக விளையாடிய தொடக்கப்பள்ளியை சேர்ந்த சில மாணவ-மாணவிகள் அழுகையும், சோகமுமாக காணப்பட்டனர். பள்ளிக்கு செல்ல அடம் பிடித்த சிறுவர்களை பெற்றோர்கள் சமாதானம் செய்து அழைத்து சென்றனர்.
பள்ளிகள் காலையில் திறக்கப்பட்டவுடன் இறை வணக்க கூட்டம் நடைபெற்றது. அப்போது மழை வெள்ளத்தால் பலியானவர்களுக்கு பல பள்ளிகளில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கொரட்டூர் பக்தவச்சலம் வித்யாஷரம் பள்ளி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி 1 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். மழை வெள்ளத்தால் பள்ளி சீருடைகள், பாடப்புத்தகங்களை இழந்த மாணவ- மாணவிகளுக்கு ஒரு செட் புதிய சீருடை, பாடப்புத்தகங்கள், நோட்டுக்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழங்கினர்.
சான்றிதழ்களை பெற சிறப்பு முகாம்
தொடர் விடுமுறையால் பொது தேர்வுக்கு முழுமையாக தயாராக முடியுமா? என்று மனக்குழப்பம், பதற்றத்துடன் இருக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு மனநல ஆலோசகர்கள், கல்வியாளர்களை கொண்டு ‘கவுன்சிலிங்’ அளிக்கப்பட்டது. தொடர்ந்து அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கவுன்சிலிங் அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மழை வெள்ளத்தால் 10-ம் வகுப்பு 12-ம் வகுப்பு பொது தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களை இழந்தவர்கள் புதிய சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பிக்க சென்னையில் 54 பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. அதேபோன்று மதிப்பெண் சான்றிதழ்களை இழந்த கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
மருத்துவ முகாம்
தொடர் விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டதையொட்டி பள்ளி மாணவ- மாணவிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டிருந்தது.
இதன் தொடக்க நிகழ்ச்சி, சென்னை எழும்பூரில் உள்ள மாநில பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மருத்துவ முகாமை அமைச்சர்கள் டாக்டர் சி.விஜய பாஸ்கர், கே.சி.வீரமணி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில், பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதா, சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் கீதாலட்சுமி, பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி முடிவில், பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதா நிருபர்களிடம் கூறியதாவது:-
சான்றிதழ் பெற சிறப்பு முகாம்
பள்ளிகளில் நடத்தப்படும் முகாமில், மாணவ-மாணவிகளுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுவதுடன், வயிற்றுப்போக்கு, இருமல், சளி போன்றவற்றிற் கான மருந்துகளும் வழங்கப்படும். தமிழ்நாட்டில் 1½ கோடி மாணவர்கள் படிக்கிறார்கள். இவர்களுக்கு அளிக்கப்படும் சுகாதார விழிப்புணர்வு மூலம், அதன் பயன் 4½ கோடி பொதுமக்களை சென்றடையும்.
பள்ளி தொடங்கிய முதல் நாளான இன்று, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் மற்றும் பாடபுத்தகத்துடன் சீருடையும் வழங்கப்படுகிறது. மேலும், வெள்ளத்தில் சேதம் அடைந்த மாணவர்கள் கல்வி சான்றிதழ் பெற சிறப்பு முகாம் நாளை(இன்று) முதல் 2 வாரம் நடைபெறுகிறது. இந்த முகாம்களில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஒரு வார காலத்திற்குள் அவர்களுக்கு தேவையான சான்றிதழ்கள் கிடைக்கப்பெறும்.
தேர்வில் வெற்றிபெற சிறப்பு கையேடு
மேலும், 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தேர்வை எண்ணி பயப்பட வேண்டாம்.
தேர்வில் மாணவர்கள் எளிதில் வெற்றி பெற அனைத்து மாணவர்களுக்கும் ‘குறைந்தபட்ச தேர்ச்சி சிறப்பு கையேடு’ வழங்கப்படும்.
இதனை படித்தாலே அனைத்து மாணவர்களும் குறைந்தபட்ச வெற்றிக்கான மதிப்பெண்ணை பெற முடியும். இந்த கையேடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டும் இலவசமாக வழங்கப்படும்.
சிறப்பு வகுப்புகள்
இது தவிர விடுமுறை காலம் அதிகமானதால் அதனை ஈடுசெய்யும் வகையில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை சம்பந்தபட்ட பள்ளிகள் நடத்திக் கொள்ளலாம். தேவைப்பட்டால் வகுப்பு நேரத்தை அதிகரித்துக் கொள்ளலாம். மேலும், சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்துவது குறித்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.








