2016-ம் ஆண்டு பிறந்ததை தொடர்ந்து கோவில்கள், ஆலயங்களில் சிறப்பு வழிபாடு
நடந்தது. கோவில்களிலும், ஆலயங்களிலும் வழிபாடுகளை மேற்கொண்ட மக்கள், இந்த
ஆண்டு அனைத்து தரப்பு மக்களுக்கும் மகிழ்ச்சி தரும் ஆண்டாக அமைய
பிரார்த்தனை செய்தனர்.
பிறந்தது புத்தாண்டு...
2015-ம் ஆண்டு நிறைவு பெற்று 2016-ம் ஆண்டு நேற்று பிறந்தது. இதையொட்டி அன்றைய தினம் நள்ளிரவு 12 மணி முதல் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகியது.
பெண்கள் தங்கள் வீட்டு வாசலில் வண்ண கோலமிட்டு புத்தாண்டை இனிதாக வரவேற்றனர். செல்போன்கள் மூலம் வாழ்த்துகளை தங்களுடைய நண்பர்கள், உற்றார், உறவினர்களுக்கு அனுப்பி வைத்து மகிழ்ந்த காட்சிகளை பார்க்க முடிந்தது.
புத்தாண்டின் முக்கிய அம்சமாக, கோவில்களிலும், ஆலயங்களிலும் சிறப்பு
தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த புத்தாண்டு மன
நிம்மதியையும், மகிழ்ச்சியையும் தரும் ஆண்டாக அமைய வேண்டும் என்று மக்கள்
பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பலரும் தங்கள் குழந்தைகளுடன் கோவிலுக்கு
வந்திருந்த காட்சிகளை பார்க்க முடிந்தது. பிறந்தது புத்தாண்டு...
2015-ம் ஆண்டு நிறைவு பெற்று 2016-ம் ஆண்டு நேற்று பிறந்தது. இதையொட்டி அன்றைய தினம் நள்ளிரவு 12 மணி முதல் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகியது.
பெண்கள் தங்கள் வீட்டு வாசலில் வண்ண கோலமிட்டு புத்தாண்டை இனிதாக வரவேற்றனர். செல்போன்கள் மூலம் வாழ்த்துகளை தங்களுடைய நண்பர்கள், உற்றார், உறவினர்களுக்கு அனுப்பி வைத்து மகிழ்ந்த காட்சிகளை பார்க்க முடிந்தது.
நேற்று அதிகாலை 3 மணிக்கு சென்னையில் பல கோவில்களில் நடை திறக்கப்பட்டு சிறப்பு தரிசனம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் மார்கழி மாத கடும் குளிரிலும் வந்து, இறைவனை தரிசனம் செய்தனர்.
சிறப்பு பூஜைகள்
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இங்கு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சிவபெருமானை வழிபட்டனர். தியாகராயநகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவில் அதிகாலை 3.30 மணிக்கு திறக்கப்பட்டது. பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பெருமாளை தரிசனம் செய்தனர். பார்த்தசாரதி கோவிலிலும் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
வடபழனி முருகன் கோவிலில் மூலவருக்கு அதிகாலை 3 மணிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேகம் நடந்தது. திருவேற்காடு கருமாரியம்மன் கோவில், மாங்காடு காமாட்சியம்மன், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில், பெசன்ட்நகர் அஷ்டலட்சுமி கோவில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் மற்றும் அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அய்யப்பன் கோவில்
இந்த புத்தாண்டு அய்யப்ப சுவாமியின் நட்சத்திரமான உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்ததால் சென்னையில் உள்ள அய்யப்பன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. மகாலிங்கபுரம் அய்யப்பன் கோவில், அடையாறில் உள்ள அய்யப்பன் கோவில் உள்ளிட்ட பல்வேறு அய்யப்பன் கோவில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும் புத்தாண்டு வெள்ளிக்கிழமை பிறந்திருப்பதால் முண்டககண்ணி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு அம்மன் ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றன.
சென்னை மேற்கு சைதாப்பேட்டை கடும்பாடி சின்னம்மன் கோவிலில் காய்கறி, பழங்கள், மளிகை பொருட்களை தொங்க விட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் பெண்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
உத்திர நட்சத்திரத்தின் அதிதேவதையான சூரியன், சூரியனின் அதிதேவதையான சிவாலயம் என்பதால் சிவன் கோவில்களிலும் சிவ பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டனர். விநாயகரின் நட்சத்திரமான அஷ்ட நட்சத்திரம், நேற்று மதியம் புத்தாண்டை முன்னிட்டு பிறந்ததால் அனைத்து விநாயகர் கோவில்களிலும் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பல்வேறு வகையில் சிறப்பு பெற்ற இந்த புத்தாண்டு அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்கும் ஆண்டாக அமையும் என்று ஜோதிடவியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.
தேவாலயங்களில்...
இதேபோல் கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை மற்றும் ஆராதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சென்னை கதீட்ரல் சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் பாதிரியார் இமானுவேல் தேவகடாட்சம் புத்தாண்டு பிரார்த்தனைகளை நடத்தி வைத்தார். அடையாறு இயேசு அன்பர் சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் பாதிரியார் ஜெகதீஷ் லெக்லர், நுங்கம்பாக்கம் அற்புத சீயோன் ஆலயத்தில் பாதிரியார் சிகாமணி ஆகியோர் சிறப்பு ஆராதனைகளை நடத்தி வைத்தனர்.
சாந்தோம் தேவாலயத்தில் புதுவருட ஆராதனை நடந்தது. தமிழ் ஆராதனையை சென்னை மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமியும், செயின்ட் பீட்ஸ் ஆடிட்டோரியத்தில் நடந்த ஆராதனையை சென்னை மயிலை உயர்மாவட்ட முதன்மை குரு அருட்தந்தை எம்.அருள்ராஜூம் நடத்தி வைத்தனர். பெசன்ட்நகர் புனித வேளாங்கண்ணி மாதா ஆலயம், லஸ் சர்ச் பிரகாச மாதா தேவாலயத்திலும் சிறப்பு ஆராதனை நடந்தது.
நெசப்பாக்கம் புனித அன்னம்மாள் கத்தோலிக்க தேவாலயத்தில் லாரன்ஸ்ராஜ் அடிகளார் தலைமையில் ஆராதனையும், கொளத்தூர் சீனிவாச நகரில் உள்ள இருதய ஆண்டவர் ஆலயத்தில் ஜான் பிரிட்டோ அடிகளாரும் ஆராதனை நடத்தினர்.