அடுத்த ஒலிம்பிக் போட்டியில் தமிழக வீரர்கள் பதக்கம் வெல்வார்கள் என்று சட்டசபையில் அமைச்சர் பாண்டியராஜன் நம்பிக்கை தெரிவித்தார்.
எந்த காங்கிரஸ்?
தமிழக சட்டசபையில் இந்து சமய அறநிலைய துறை, தமிழ் வளர்ச்சி ஆகிய
மானிய கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் நேற்று விவாதித்தனர். அதில் கலந்து
கொண்டு நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ. வசந்தகுமார் (காங்கிரஸ்) பேசினார்.
அப்போது நடந்த விவாதம் வருமாறு:–
வசந்தகுமார்: ஐ.நா. சபை உட்பட உலகின் பல்வேறு இடங்களில் தமிழைப் பரவச் செய்தது, செம்மொழி அந்தஸ்து வழங்கியது காங்கிரஸ் அரசு.
அமைச்சர்
செல்லூர் ராஜூ: இவர் எந்த காங்கிரசைப் பற்றி பேசுகிறார். சோனியா
காங்கிரசா? இந்திரா காங்கிரசா? அப்போது இருந்தது ஒன்றுபட்ட காங்கிரஸ்.
தமிழில் பட்ஜெட் தாக்கல்
அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்: டெல்லியில் ஜவஹர்லால்
பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு இருக்கை அமைப்பதற்கு ரூ.10 லட்சம் தொகையை
முழுமையாக காங்கிரஸ் செலுத்தவில்லை. அந்தத் தொகையை முழுமையாக செலுத்த
உத்தரவிட்டவர் முதல்–அமைச்சர் ஜெயலலிதா.
வசந்தகுமார்: இங்கு
செலுத்திய ரூ.10 லட்சம் பற்றி பேசுகிறீர்கள். தமிழை உலகம் முழுவதும்
பரப்பிய சம்பவம் பற்றி குறிப்பிடுகிறேன். தமிழகத்தில் கல்வியை பரவச்
செய்தவர் பெருந்தலைவர் காமராஜ்.
1956–ம் ஆண்டில் சட்டசபையில் வரவு– செலவு திட்ட அறிக்கையை தமிழில் தாக்கல் செய்தது காமராஜர்தான்.
சிந்திக்க முடியாத திட்டம்
அமைச்சர் வீரமணி: காமராஜர் காலத்தில் சிந்திக்க முடியாத திட்டங்களை
முதல்–அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்து தமிழகத்தில் நிறைவேற்றி இருக்கிறார்.
வசந்தகுமார்: காமராஜரைப் இப்படி பேசியிருப்பதை அவைக்குறிப்பில் வைக்கலாமா?
அமைச்சர்
வீரமணி: கல்வியை மக்கள் பெற்றால் போதும் என்று அப்போது
திட்டமிட்டிருக்கலாம். ஆனால் இப்போது அனைவருமே உயர் கல்வி நிலையை அடைய
வேண்டும் என்பதை முதல்–அமைச்சர் திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறார்.
அடுத்த ஒலிம்பிக்
அமைச்சர் பாண்டியராஜன்: நாங்குநேரி தொகுதியில் ஸ்போர்ட்ஸ் சிட்டி
வரவில்லை என்றும் அதனால் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெறும் வாய்ப்பை
தமிழக வீரர்கள் இழந்துவிட்டனர் என்றும் வசந்தகுமார் கூறினார்.
அதைவிட
உயர்ந்த ஸ்போர்ட்ஸ் பல்கலைக்கழகத்தின் மூலம் ஒலிம்பிக் வீரர்களை உருவாக்க
முதல்–அமைச்சர் ஜெயலலிதா திட்டம் வகுத்துள்ளார். ஒரு வீரருக்கு
ஆண்டொன்றுக்கு ரூ.25 லட்சம் வரை செலவு செய்யும் ஒரே அரசு தமிழக அரசுதான்.
இந்த
முறை ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தில் இருந்து 8 பேர் சென்றனர். அடுத்த
ஒலிம்பிக் போட்டியில் இங்கிருந்து 24 வீரர்கள் பங்கு பெற திட்டம்
தீட்டப்பட்டுள்ளது. அதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு
வருகின்றன.
அடுத்த ஒலிம்பிக் போட்டியும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா
ஆட்சி காலத்தில் நடக்க இருக்கிறது. அதில் தமிழகத்துக்கு 20 பதக்கங்கள்
கிடைக்கும். இவ்வாறு விவாதம் நடந்தது.