சென்னை : மேற்கு மத்திய வங்கக் கடலில் வளிமண்டல
மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மழை
நீடிக்கும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேற்கு
மத்திய வங்கக் கடல் பகுதியில், ஆந்திர கடற்கரைக்கு அருகிலும், தென்
தமிழகத்தில், கன்னியாகுமரி அருகிலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, இரு
நாட்களுக்கு முன் உருவானது. இதனால், தமிழகத்தில் கடந்த இரு நாட்களாக,
பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னை வானிலை
ஆய்வு மையம் அறிவித்துள்ளதாவது: மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில்
நீடிப்பதால், தமிழகம், புதுச்சேரியில், அனேக இடங்களில் மழை தொடரும்;
தமிழகம், புதுச்சேரி கடல் பகுதியில், தென்மேற்கு திசையில் இருந்து,
மணிக்கு, 45 முதல், 55 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும்; மீனவர்கள்
கடலுக்குள் செல்ல வேண்டாம். சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன்
காணப்படும். நகரில் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.