புழக்கத்தில் இருந்த, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற
அறிவிப்பைத் தொடர்ந்து, அதிக அளவில், 100 ரூபாய் நோட்டுகள் கிடைப்பதற்கான
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான,
எஸ்.பி.ஐ., எனப்படும், பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. கறுப்புப்
பணத்தை ஒடுக்கும் வகையில், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது
என, நேற்று முன்தினம் இரவு, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்த
நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கு அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது.இந்த
நிலையில், பதற்றமடைந்த மக்கள், இந்த நோட்டுக்களை மாற்றவும், செலவுக்காக,
100 ரூபாய் நோட்டுக்களை எடுக்கவும் நேற்று முன்தினம், ஏ.டி.எம்.,களில்
முண்டியடித்தனர்.நேற்றும், இன்றும், ஏ.டி.எம்.,கள் செயல்படாது என,
அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாற்று ஏற்பாடுகள் குறித்து,
எஸ்.பி.ஐ., நிர்வாக மேலாளர் ரஜ்னீஷ் குமார் கூறியதாவது: பொதுமக்கள்
பீதியடையத் தேவையில்லை. தேவையான அளவுக்கு, 100 ரூபாய் நோட்டுகள் உள்ளிட்டவை
கையில் இருப்பு உள்ளன. நாடு முழுவதும் உள்ள, எஸ்.பி.ஐ., குழுமத்தின், 17
ஆயிரம் கிளைகள், 55 ஆயிரம் ஏ.டி.எம்.,க்கள், 7,000 பணத்தை டெபாசிட்
செய்யும் இயந்திரங்கள் செயல்படுகின்றன. இவற்றுக்கு, 100 ரூபாய் நோட்டுக்களை
அதிக அளவில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு சிரமம்
இல்லாத வகையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதேபோல், செல்லாத, 500
மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்கும், வசதிகள்
செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.மூன்றாவது முறை : இதற்கு முன், இரண்டு முறை, ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷார் காலத்தில், 1946ல் முதல் முறையாக இவ்வாறு அறிவிக்கப்பட்டது. கடந்த, 1978ல், பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சி ஆட்சியின்போது, 1,000; 5,000; 10,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவிக்கப்பட்டன.தற்போது, 500 மற்றும், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவிக்கப்பட்டுள்ளது.