ஊட்டி: 'கோடநாடு வந்தால், 'டென்ஷன் ப்ரீ'யாக
இருக்கலாம்' என, 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த பேட்டியில் ஜெயலலிதா
கூறியிருந்தார். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்பட்டிருந்த
போது, இப்போதாவது தங்களிடம் வருவார், அமைதி பெற்று செல்வார் என,
பசுந்தேயிலை இலைகளும், பனி படர்ந்த மலைகளும் காத்திருந்தன... இன்னும்
காத்திருக்கின்றன.அவற்றுக்கு தெரியுமா, தங்கள் அருகாமையை மிகவும் விரும்பிய
தங்கள் தலைவி, மீண்டும் திரும்பி வரப்போவதில்லை என்பது! 'மக்களால் நான்;
மக்களுக்காக நான்' என்ற கம்பீர வார்த்தைகளுக்கு சொந்தக்காரரான ஜெயலலிதா,
சென்னைக்கு அடுத்தபடியாக, மிகவும் நேசித்த இடம், நீலகிரி மாவட்டம்.
தவற
விட்டதில்லை : அதிலும், ஊட்டி, கோத்தகிரியில் கோடநாடு, முதுமலை ஆகிய
பகுதிகள் அவருக்கு மிகவும் பிடித்தமானவை. அதனால் தான், அவர், கோடநாடு
எஸ்டேட் வரும் போதெல்லாமல், ஊட்டி, முதுமலையில் நடக்கும் நிகழ்ச்சிகளில்
தவறாமல் பங்கேற்பார். கோடநாடு பகுதியின் அமைதி; ஊட்டியில் நிலவும்
குளிர்ச்சி இவற்றை அவர் ஒவ்வொரு கால கட்டத்திலும், தவற விட்டதில்லை. அங்கு
வரும் போதும் கூட, மக்கள் பணி பாதிக்கப்படக்கூடாது என்பற்காக, பல்வேறு
திட்டங்களை செயல்படுத்தி வந்துள்ளார். கிடைக்கும் இடைவெளியில், கோடநாடு
எஸ்டேட் பகுதியில் நடப்பது, புத்தகங்கள் படிப்பது, அவருக்கு பிடித்தமான
ஒன்றாக இருந்தது. இலை பறித்து கொண்டிருக்கும் ஏழை தொழிலாளர்களிடம்,
முதல்வர் என்ற அதிகாரத்தை மறந்து, அன்பு பாராட்டியதை, அந்த தொழிலாளர்கள்
இன்றும் நினைவுகூர்கின்றனர். இதை, ஒவ்வொரு பண்டிகை, தேர்தல் வெற்றிகளின்
போது, நேரடியாகவும் மறைமுகமாகவும், பரிசு, விருந்துகள் வழங்கி
மகிழ்வித்துள்ளார். கோடநாட்டை சுற்றியுள்ள படுகர் கிராம கோவில்கள்,
தொழிலாளர்களின் கோவில்களுக்கு சில நேரங்களில் அவர் செல்லும் போது,
'சென்னைக்கு அடுத்தபடியாக, எனக்கு பிடித்த இடம், ஊட்டி, கோத்தகிரி' என,
பலமுறை கூறியுள்ளார். ஊட்டியில், 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த பேட்டியில்
கூட, அவர் இதை பகிர்ந்துள்ளார். கடந்த, 2007 செப்டம்பரில், ஊட்டி
ஏ.டி.சி., பகுதியில், பசுந்தேயிலைக்கு, குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய,
மத்திய அரசை வலியுறுத்தி, ஒரு பொதுக்கூட்டம் நடந்தது. அப்போது, தி.மு.க.,
ஆட்சி நடந்தது. எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெ., கோடநாட்டில்
தங்கியிருந்தார்.அப்போது, பொதுக்கூட்டத்துக்கு வந்த அவர், கொட்டும்
மழையிலும், அங்கு கூடியிருந்த, ஆயிரக்கணக்கான மக்களை பார்த்து ஆச்சரியம்
அடைந்தார். அவர் பேச துவங்கிய போது, மழையும் நின்றது. இதை பார்த்து
மகிழ்ச்சி அடைந்த அவர் பேசி முடித்து, மீண்டும் கோடநாடு புறப்பட்டார்.அவர்
காரில் ஏறியவுடன், அவரிடம் பேட்டி எடுக்க நிருபர்கள் முயன்றனர்;
பாதுகாவலர்கள் தடுத்தனர். பாதுகாவலர்களை கண்டித்த ஜெ., நிருபர்களை
அனுமதிக்கும்படி உத்தரவிட்டார்.ரொம்ப பிடிக்கும் : அவரிடம், 'தினமலர்' நாளிதழ் சார்பில், 'செப்டம்பரில், ஊட்டியில் இரண்டாம் சீசன் காலம்; இந்த கால நிலைக்காக கோடநாடு வந்தீர்களா?' என்ற கேள்விக்கு, 'சினிமாவில் நடிக்கும் கால கட்டங்களில் இருந்து எனக்கு, ஊட்டிக்கு வருவது பிடிக்கும்; கோடநாடு பகுதியின் காலநிலை ரொம்ப பிடிக்கும். 'இங்கு வந்தால், 'டென்ஷன் ப்ரீ' ஆக உணர்கிறேன். சென்னைக்கு அடுத்தபடியாக, எனக்கு பிடித்த இடங்களில் கோடநாடும் ஒன்று' என, பதிலளித்தார்.'வரும் பார்லிமென்ட் தேர்தலில், பா.ஜ.,வுடன் கூட்டணி வைப்பீர்களா?' என்ற கேள்விக்கு, பதில் ஏதும் கூறாமல், புன்னகையை மட்டும் பதிலாக அளித்து சென்றார். மறுநாள், 'தினமலர்' நாளிதழ் முதல் பக்கத்தில், 'பா.ஜ.,வுடன் கூட்டணியா?; ஜெ., புன்னகை' என்ற தலைப்பில், செய்தி வெளியானது.
வரவில்லை : பொதுவாக, 1995ம் ஆண்டுக்கு பின், கோடநாடு வந்து சென்ற தருணங்கள், அவருக்கு மகிழ்ச்சியானதாக இருந்துள்ளன. அதில், 2013 ஜன., 17ல், கோத்தகிரியில், தன் அரசியல் ஆசான், எம்.ஜி.ஆர்., சிலை திறந்த தினம், மிகவும் மகிழ்ச்சியான தருணமாக இருந்ததாக, நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலுக்கு பின், ஓய்வெடுக்க வருவதாக கூறப்பட்டது; வரவில்லை; முதல்வர் பதவி ஏற்றவுடன் வருவார் என, கூறப்பட்டது; வரவில்லை. பின், சட்டசபை கூட்டத்தொடருக்கு பின், அவர் கோடநாடுக்கு வந்து, சில நாட்கள் தங்கியிருக்க தேவையான, அனைத்து ஏற்பாடுகளும் நடந்தன. அதற்கு அவரும் தயாராகி வந்த நிலையில், நோய் தாக்குதலுக்கு ஆளாகி, காலனிடம் சிக்கிக் கொண்டார்.எனினும், ஊட்டி, கோடநாடு உட்பட நீலகிரி மக்களின் மனதில், அவரது பசுமையான சுவடுகள் என்றென்றும் அழியாமல் இருக்கும்.
'ஜெ ஜெ' துாண்! : நீலகிரி மாவட்டம், ஊட்டி விஜயநகர பகுதியில், 1996ல், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவில், ரோஜா பூங்கா உருவாக்கப்பட்டது. ஆசியாவிலேயே அதிக ரோஜா ரகங்கள் உள்ள பூங்காவாக திகழ்வதால், சர்வதேச ரோஜா சம்மேளனத்தின் சார்பில், 2006ல், சிறந்த பூங்காவாக தேர்வு செய்யப்பட்டு, ஜப்பானில் நடந்த சர்வதேச ரோஜா கருத்தரங்கில், 'கார்டன் ஆப் தி எக்சலன்ஸ்' என்ற விருது வழங்கப்பட்டது. பூங்காவின் முகப்பில், ஜெயலலிதா பெயரில் ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு, இன்றளவும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
அதே போன்று,
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவின் நுாற்றாண்டு விழா, 1995ல்
கொண்டாடப்பட்டது. பூங்காவின் முகப்பில் உள்ள புல்தரையில், ஜெயலலிதா
பெயரில், 'ஜெ ஜெ' என்ற பெயரில் துாண் நிறுவப்பட்டது. '100' என்று
பொறிக்கப்பட்ட துாணின் மேற் பகுதியில் கிரீடமும், கீழ் பகுதியில் ஆங்கில
எழுத்தான, 'ஜெ'வும் பொறிக்கப்பட்டது.