TNTET- ஆசிரியர் தகுதித் தேர்வுக்குத் தயாராகுங்க!
பல்வேறு வழக்குகளால் தள்ளிக்கொண்டே போன ஆசிரியர் தகுதித் தேர்வு, விரைவில்
வரவிருக்கிறது. இது ஆசிரியப் பட்டம் படித்தவர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய
செய்தி.ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு முதல் இரண்டு தேர்வுகளும்
கடினமாக இருந்ததாகப் பரவலான கருத்து இருந்தபோதும் 2013 ஆம் ஆண்டு தகுதித்
தேர்வில் பலர் தேர்ச்சி பெற்றனர்.இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு ஐந்து சதவீத மதிப்பெண் சலுகை அளிக்கப்பட்டது.
இது
தொடர்பாக நடைபெற்றுவந்த வழக்குகள் தற்போது முடிவுக்கு வந்துவிட்டதால்,
தேர்வர்கள் இனி நிம்மதியாக அடுத்த தேர்வுக்குத் தயாராகலாம். கூடிய விரைவில்
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாக அதிக வாய்ப்பு உள்ளது.
ஆசிரியர்
தகுதித் தேர்வு மூன்று பிரிவுகளில் நடைபெறும். ஆசிரியர் பயிற்சி
பட்டயம்(D.T.Ed.) படித்தவர்கள் தாள் ஒன்றை எழுத வேண்டும். கலைப்பட்டதாரி
ஆசிரியர்கள் (B.A.+B.Ed.) தாள் இரண்டு எழுத வேண்டும். அறிவியல் பட்டதாரி
ஆசிரியர்கள் (B.Sc. + B.Ed.) தாள் இரண்டு “A”எழுத வேண்டும். மூன்று
தாள்களுமே 150 கேள்விகள் கொண்டதாக இருக்கும்.
ஒவ்வொரு கேள்விக்கும்
ஒரு மதிப்பெண். தேர்ச்சி பெறுவதற்கு தற்போதுள்ள விதிமுறைப்படி
பொதுப்பிரிவினர் 90 மதிப்பெண்கள் பெற வேண்டும். இட ஒதுக்கீட்டுப்
பிரிவினருக்கு இந்தத் தகுதி மதிப்பெண்களில் இருந்து 5 சதவீதம் சலுகை
அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் 82 மதிப்பெண்கள்
பெற்றால் போதும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள்.
முதல் தாள்
5 பிரிவுகள் கொண்டதாக இருக்கும்தமிழ் - 30 மதிப்பெண்கள், ஆங்கிலம்- 30
மதிப்பெண்கள், குழந்தை வளர்ப்பு உளவியல் - 30 மதிப்பெண்கள், கணிதம்- 30
மதிப்பெண்கள், சூழ்நிலையியல் - 30 மதிப்பெண்கள். ஆக மொத்தம் = 150
மதிப்பெண்கள்.
இரண்டாம் தாள் கலைப்பிரிவு, நான்கு பிரிவுகள்
கொண்டதாக இருக்கும் தமிழ் - 30 மதிப்பெண்கள், ஆங்கிலம்- 30 மதிப்பெண்கள்,
குழந்தை வளர்ப்பு உளவியல் - 30 மதிப்பெண்கள், சமூக அறிவியல்- 60
மதிப்பெண்கள். ஆக மொத்தம் = 150 மதிப்பெண்கள்.
இரண்டாம் தாள்
அறிவியல் பிரிவு, நான்கு பிரிவுகள் கொண்டதாக இருக்கும் தமிழ் - 30
மதிப்பெண்கள், ஆங்கிலம்- 30 மதிப்பெண்கள், குழந்தை வளர்ப்பு உளவியல் - 30
மதிப்பெண்கள், கணிதம் மற்றும் அறிவியல் - 60 மதிப்பெண்கள். ஆக மொத்தம் =
150 மதிப்பெண்கள்.
வெறுமனே ‘ஜஸ்ட் பாஸ்’என்பது வேலை பெறுவதற்கு உதவி
செய்யாது என்பதைத் தேர்வர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.ஆசிரியர் தகுதித்
தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு வேலை வாய்ப்பு பெறுவதற்கு
‘வெயிட்டேஜ்’முறையைத் தமிழக அரசு பின்பற்றுகிறது.
முதல் தாளில்
வெற்றி பெற்று, இடைநிலை ஆசிரியராக விரும்புபவர்களுக்கு, அவர்கள்
பன்னிரண்டாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களில் இருந்து 15 சதவீதமும்,
பட்டயப்படிப்பு மதிப்பெண்களில் இருந்து 25 சதவீதமும், தகுதித் தேர்வு
மதிப்பெண்களில் இருந்து 60 சதவீதமும் ‘வெயிட்டேஜ்’முறையில்
மதிப்பெண்களின்படி வேலைக்கான தரவரிசைப்பட்டியல் தயாரிக்கப்படும்.
இரண்டாம்
தாளில் வெற்றி பெற்று பட்டதாரி ஆசிரியராக விரும்புபவர்களுக்கு அவர்கள்
பன்னிரண்டாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களில் இருந்து 10 சதவீதமும், டிகிரி
மதிப்பெண்களில் இருந்து 15 சதவீதமும், பி.எட்.மதிப்பெண்கள் 15 சதவீதமும்,
தகுதித் தேர்வு மதிப்பெண்களில் இருந்து 60 சதவீதமும் என்ற அளவில்
‘வெயிட்டேஜ்’ முறையில் மதிப்பெண்களின்படி வேலைக்கான தரவரிசைப்பட்டியல்
தயாரிக்கப்படும்.
+2, டிகிரி மதிப்பெண்கள் எல்லாம் ஏற்கனவே முடிவு
செய்யப்பட்டவை. இனிமேல் அதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. தகுதித்
தேர்வில் நாம் எவ்வளவு அதிகம் மதிப்பெண்கள் பெறுகிறோம் என்பதை வைத்துத்தான்
நம் வேலை வாய்ப்பை உறுதி செய்ய முடியும்.
ஆக, ஆசிரியர் வேலை
தேடுவோர் கையில் உள்ள ஒரே மந்திரக்கோல், தகுதித் தேர்வு மட்டுமே!
மொத்தமுள்ள 150 கேள்விகளுக்கு 130 மதிப்பெண்களையாவது தாண்டினால்தான் அரசுப்
பள்ளி ஆசிரியர் பணியை நோக்கி நெருங்க முடியும். எனவே, தகுதித் தேர்வுக்கு
திட்டமிட்டுச் சரியாக நிறைவாகத் தயாராக வேண்டும்.
மூன்று
தாள்களுக்கும், தமிழ், ஆங்கிலம், உளவியல் ஆகியவை பொதுவானவை. தமிழ்ப்
பாடத்திற்கு ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பாடங்களை முழுமையாகப்
படிக்க வேண்டும். இலக்கண அறிவோடு, பாடப்பகுதியில் உள்ள முழுமையான இலக்கிய,
உரைநடைச் செய்திகளையும் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஆங்கிலப்
பாடத்திற்கு அடிப்படை இலக்கணம் அவசியம். 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம்
வகுப்பு வரை உள்ள சமச்சீர் பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களின் பயிற்சிகளை
முறையாக ‘ஒர்க் அவுட்’செய்து பார்த்தால் போதும்.குழந்தை வளர்ப்பு உளவியல்
என்பது கொஞ்சம் புதிய பகுதி, இதற்கான பாடத்திட்டத்தை ஆசிரியர் தேர்வு
வாரியம் ஏற்கனவே வெளியிட்டுள்ளது. ஆனாலும் தேர்வர்கள், தங்களது D.T.Ed.
அல்லது B.Ed படிப்பில் படித்திருப்பீர்கள்.
மனவெழுச்சி, சமூக
உணர்வு, ஒப்பார் குழு, அறிவு வளர்ச்சி, உளவியல் முறைகள், தனி ஆள் ஆய்வு,
பல்வேறு உளவியல் அறிஞர்களின் கொள்கைகள், வளர்ச்சி, முன்னேற்றம்,
முதிர்ச்சி, சிந்தனை மற்றும் மொழி, கவனித்தல், மன நோய்கள், வழி காட்டுதல்
மற்றும் அறிவுரை பகர்தல், மீத்திறக் குழந்தைகள், கற்றல் கோட்பாடுகள் ஆகியவை
இந்த குழந்தை வளர்ப்பு உளவியலில் அடங்கியிருக்கும்.
முதல் தாளுக்கான
சூழ்நிலையியல் பாடத்திற்கு அரசு வெளியிட்ட (பழைய) சூழ்நிலையியல்
பாடங்களைப் படிக்க வேண்டும்.அறிவியல், கணிதம் மற்றும் சமூக அறிவியல்
பாடத்திற்கு ஆறு முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள சமூக அறிவியல், அறிவியல்,
கணிதப் பாடங்களை முழுமையாகப் படித்துக்கொள்ள வேண்டும்.
பாடங்களைப்
படிக்கும்போது, ஒவ்வொரு பாடத்திற்கும் பின்னால் உள்ள பயிற்சி வினாக்களை
மட்டும் படிக்காமல், பாடம் முழுவதையும் புரிந்துகொண்டு படிக்க
வேண்டும்.தேர்வுக்குத் தயாராகும், ஆசிரியப் பட்டதாரிகள் முழுமையான
அர்ப்பணிப்பு உணர்வுடன் தயாராக வேண்டும்.
ஏனெனில் நீங்கள் ஆசிரியர்
ஆக வேண்டும் என்பதைத் தேர்வுகள் மட்டும் தீர்மானிப்பதில்லை. உங்களுடைய
மனப்பான்மைகளும், குணநலன்களும் சேர்ந்தே தீர்மானிக்கின்றன. உற்சாகத்தோடு
தயாராகுங்கள்! வாழ்த்துகள்!
ஆக்கம்:
முனைவர். ஆதலையூர் சூரியகுமார்
எம்.ஏ., எம்.ஏ., எம்.ஃபில்., எம்.எட்., பி.எச்.டி.,