பிளஸ் 1 லேயாச்சும் ஃப்ரீயா விடுங்கப்பா: கல்வித்துறைக்கு எதிராக கோர்ட்டுக்கு செல்லும் தி.மு.க..

தமிழக அரசுத்துறை கட்டமைப்பில் செயல்பாடு ரீதியாக தற்போது நம்பர் 1
இடத்திலிருப்பது பள்ளிக் கல்வித்துறை. அமைச்சர் செங்கோட்டையனின்
கையிலிருக்கும் இந்த துறையில் பழைய சிஸ்டங்களுக்கு மூடுவிழா நடத்திவிட்டு
புதிய மற்றும் புரட்சிகர விஷயங்கள் பல அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.
பிளஸ் 2 ரிசல்ட் வெளியிட்டிலிருந்து தனது அதிரடியை துவக்கியது
செங்கோட்டையன் துறை. மாணவ, மாணவிகளின் வீட்டு மொபைலுக்கே எஸ்.எம்.எஸ்.
வடிவில் மதிப்பெண் விபரங்களுடன் ரிசல்ட் அனுப்பி ஆச்சரியப்பட வைத்தவர்கள்,
ரேங்கிங் முறையை மாற்றி கிரேடு சிஸ்டம் கொண்டு வந்தார்கள். ’மாநிலத்திலேய
முதல், இரண்டாம் மற்றும் மூன்றாமிடம் பெறும் மாணவ மாணவிகள் தங்கள்
பள்ளிகளாலும், மீடியாக்களாலும் கொண்டாடப்படுகையில் மற்ற மாணவ மாணவிகளுக்கு
மன அழுத்தம் மற்றும் தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது, இதைத்தவிர்க்கவே இந்த
ஏற்பாடு.’ என்று சொன்னார்கள்.
இதையடுத்து பதினொன்றாம் வகுப்புக்கும் இனி பொதுத்தேர்வுதான் என்று அறிவித்திருக்கிறார்கள்.
‘மெட்ரிக் பள்ளிகளில் பிளஸ் ஒன் பாடங்கள் நடத்தப்படுவதில்லை. பிளஸ் டூவில்
தங்கள் பள்ளி ரேங்க் பெற வேண்டும் என்பதற்காக பிளஸ் ஒன் பாடத்தை
விட்டுவிட்டு இரண்டு வருடங்களும் பிளஸ் டூ பாடத்தையே நடத்துகிறார்கள்.
இதைத்தவிர்க்கவே பிளஸ் 1_க்கும் அரசுத்தேர்வு ஏற்பாடு.’ என்றார்கள்.
இதுபோக கிராமப்புற அரசுப்பள்ளிகளை பராமரிக்கும் பொறுப்பை தனியாரிடம் வழங்கி
தரம் உயர்த்துதல், ஆசிரியர் இடமாற்ற விஷயத்தில் வெளிப்படையான
கவுன்சலிங்...என்று இந்த துறையின் செயல்பாடுகள் சிலிர்க்க வைப்பதாக சொல்லி
புகழப்படுகிறது.
பொதுநல பார்வையாளர்களும், கல்வியாளர்களில் பெரும்பகுதியினரும், மீடியாக்களும் இவற்றை தட்டிக் கொடுத்து வருகின்றன.
இந்நிலையில் செங்கோட்டையன் துறை புகுத்தியிருக்கும் ஒரு விஷயத்துக்கு
எதிராக கோர்ட்டுக்கு போக திட்டமிட்டு வருகிறது தி.மு.க. அதுதான் பிளஸ் ஒன்
வகுப்புக்கும் பொதுத்தேர்வு எனும் திட்டம்.
காரணமாக தி.மு.க. கூறும் விஷயமாவது...’’பள்ளி பயிலும் மாணவ, மாணவிகள் மன
அழுத்தமின்றி புத்துணர்வான மனநிலையுடன் பயில்வதை உறுதி செய்யவே புதிய
திட்டங்களை அமுல் படுத்தியிருப்பதாக செங்கோட்டையன் சொல்லியிருக்கிறார்.
ஆனால் பிளஸ் ஒன் வகுப்புக்கும் பொதுத்தேர்வு என்று சொல்லி அவரே முரண்பட்டு
நிற்கிறார்.
இந்த புது சிஸ்டத்தின் மூலம் பத்தாம் வகுப்பில் ஆரம்பித்து பனிரெண்டாம்
வகுப்பு வரை என தொடர்ந்து மூன்று வருடங்கள் அரசுத்தேர்வை சந்திக்க
வேண்டியிருப்பதால் மாணவர்கள் மிகப்பெரிய மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள்.
கவர்மெண்ட் எக்ஸாம், கவர்மெண்ட் எக்ஸாம் என்று சொல்லி சொல்லி பள்ளிகளும்,
பெற்றோர்களும் குழந்தைகளுக்கு மன ரீதியாக அதிக பிரஷரை தருவார்கள்.
ஆகவே இது தவறான முடிவு. பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு என இரண்டு
பொதுத்தேர்வுகளுக்கு நடுவில் சற்று இளைப்பாறல் மிக அவசியம். தொடர்ந்து
அரசுத்தேர்வுகள் வைத்தால் மாணவர்கள் மனம் நொந்து, படிப்பை கண்டு
அஞ்சிவிடுவார்கள். பலர் டிராப் அவுட் செய்யவும், தப்பான முடிவுகளை நாடவும்
வழிவகுக்கும்.
ரேங்கிங் சிஸ்டத்தை ஒழித்துவிட்டதால் பிள்ஸ் டூவில் மாநிலத்திலேயே முதல்
மதிப்பெண் பெற வேண்டும் எனும் நோக்கில் பள்ளிகள் கண்மூடித்தனமாக செயல்பட
போவதில்லை, ரேங்க் சிஸ்டம் இருந்தால்தானே பிளஸ் ஒன் பாடத்தை நடத்தாமல்
இரண்டு ஆண்டுகளும் பிளஸ் டூ பாடத்தையே நடத்துவார்கள். ஆனால் ரேங்கிங்
சிஸ்டம் ஒழிந்த பிறகு அந்த பிரச்னையே இல்லையே! பின் எதற்காக பிளஸ் ஒன்
தேர்வை அரசுத்தேர்வாக்க வேண்டும். இது மாணவ, மாணவிகள் மீது அரசு வைக்கும்
தாங்கமுடியாத கல்விச்சுமை, தேவையற்றதும் கூட.
மாநில அளவில் முதல் மூன்று இடம் பெறும் மாணவ, மாணவிகள் கொண்டாடப்படுவதால்
ரேங்கிங் சிஸ்டம் ஒழிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். ஆனால் வாழ்க்கையில்
போட்டி இருந்தால்தான் முன்னேற்றம் இருக்கும். போட்டி நடத்தப்படுவதன்
நோக்கமே அபரிமிதமான சாதனையாளர்களை உருவாக்கத்தான். அதிலும் கல்வியில்
போட்டி இருந்தால்தான் மிகப்பெரிய அறிவாளர்கள் உருவாகி நாளைய தமிழகம்
சிறப்பாக கட்டமையும். ஆனால் முதல் மதிப்பெண்கள் வாங்கியவர்கள்
கொண்டாடப்படுவதால் மற்ற குழந்தைகள் மனம் வருந்துவார்கள் என்பது ஏற்றுக்
கொள்ள முடியாத வாதம். இந்த கொண்டாட்டங்கள் அவர்களை உத்வேகப்படுத்தி
உயர்கல்வி துறையில் சாதிக்க தூண்டும். அப்படி பாஸிடீவாகத்தான் இதை எடுக்க
வேண்டும். அதைவிட்டு இப்படி நினைத்தால், தோற்றவன் வருத்தப்படுவான் என்று
நாளைக்கு விளையாட்டுப்போட்டி கூட நடத்த தடைவிதிப்பார்களோ இவர்கள்?
இத்தனை விமர்சனங்கள் இருந்தாலும் கூட பிளஸ் டூவில் ரேங்கிங் சிஸ்டம்
ஒழிக்கப்பட்டதில் நாங்கள் தலையிடப்போவதில்லை. ஆனால் பிளஸ் ஒன் வகுப்புக்கு
அரசுத்தேர்வு என்பதை வன்மையாக கண்டிக்கிறோம். இதற்கு தடை கேட்டு
நீதிமன்றம் செல்ல முடிவு செய்துள்ளோம். மனு பதிவது தொடர்பாக அத்தனை
தகவல்களும் திரட்டப்பட்டு வருகின்றன. இந்த பிரச்னையின் அழுத்தத்தை
நீதிமன்றம் சட்டென புரிந்து கொள்ளும் வகையில் ஒரு பெட்டிஷனை தயாரித்து, அதை
தளபதியின் ஒப்புதலோடு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளோம்.”
என்கின்றனர்.
எதிர்கட்சியான தி.மு.க. சொல்கிறது என்பதற்காக இந்த பாயிண்டை தவிர்த்துவிட முடியாது போலத்தான் இருக்கிறது.
என்ன நடக்கிறதென்று கவனிப்போம்!