தமிழக அரசு மருத்துவமனைகளில் வெறுமையாக உள்ள 2950 பணியிடங்கள் இன்னும் 10 நாள்களில் நிரப்பப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழக அரசு மருத்துவமனைகளில் வெறுமையாக உள்ள 250 சிறப்பு மருத்துவர்கள், 400 மருத்துவர்கள், 500 செவிலியர்கள் மற்றும் ஆயிரத்து 800 கிராம சுகாதார செவிலியர் என மொத்தம் 2950 பணியிடங்கள் இன்னும் 10 நாள்களில் நியமிக்கப்பட உள்ளனர் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டையில் ரூ.250 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரியில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின்போது அவர், மாவட்ட ஆட்சியர் கணேஷ் மற்றும் மருத்துவக் கல்லூரி உயரதிகாரிகளிடம் பணிகள் குறித்துக் கேட்டு அறிந்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
“இந்த மருத்துவக் கல்லூரி பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது.
இன்னும் 2 வாரத்திற்குள் இதன் திறப்பு விழா நடைபெற உள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவக் கல்லூரியை திறந்து வைக்கிறார்.
இந்தாண்டு 150 மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது. தமிழகத்தில் கடந்த ஆறு ஆண்டுகளில் ஆயிரம் மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கான கூடுதல் இடங்களை இந்திய மருத்துவ குழுவிடமிருந்து தமிழக அரசு பெற்றுள்ளது.
இதேப் போன்று இந்தாண்டு 291 உயர் கல்வி மருத்துவ மாணவர்களுக்கான கூடுதல் இடங்கள் பெறப்பட்டு உள்ளது.
சுகாதாரத்துறைச் சார்பில் எம்.ஆர்.பி. மூலம் மருத்துவர்கள், செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இரண்டு ஆண்டுகளில் 9 ஆயிரத்து 990 செவிலியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக அரசு மருத்துவமனைகளில் வெறுமையாக உள்ள 250 சிறப்பு மருத்துவர்கள், 400 மருத்துவர்கள், 500 செவிலியர்கள் மற்றும் ஆயிரத்து 800 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்கள் இன்னும் 10 நாள்களில் நியமிக்கப்பட உள்ளனர்” என்று அவர் கூறினார்.
இந்தப் ஆய்வின்போது தமிழக வீட்டுவசதி வாரிய தலைவர் வைரமுத்து, கந்தர்வக்கோட்டை எம்.எல்.ஏ. ஆறுமுகம் உள்பட பலர் உடன் இருந்தனர்.