இதனிடையே, நீட் தேர்வுக்கான முடிவுகளை வெளியிட தடை கோரி திருச்சியை சேர்ந்த சக்தி மலர்கொடி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், “நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியான வினாத்தாள்கள் கேட்கப்படவில்லை, மருத்துவ மாணவர்களை நீட் தேர்வு மூலம் தேர்வு செய்யும் முறை ஒரே அளவீடாக இருக்காது” என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மே 24-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என சி.பி.எஸ்.இ.க்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் இரு தினங்களுக்கு முன்பு அனுப்பி இருந்தது.
இந்நிலையில், மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும், சி.பி.எஸ்.இ மற்றும் மருத்துவ கவுன்சில் ஜூன் 7-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.









