அரசு நர்ஸ் பணியிட மாறுதல் : இணையதளத்தில் 'கவுன்சிலிங்'
''அரசு செவிலியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங், இனி, இணையதளத்தில்
நடத்தப்படும்,'' என, சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர் கூறினார்.
சென்னை, அண்ணா நகர், அரசு யோகா மற்றும் இயற்கை கல்லுாரியில், இயற்கை
முறையில், உடல் பருமனை குறைக்கும் சிறப்பு சிகிச்சை துவக்க விழா, நேற்று
நடைபெற்றது.
இதில், பங்கேற்ற அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:
தமிழக மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம், 17 ஆயிரம் பணியிடங்கள்
நிரப்பப்பட்டுள்ளன. மேலும், 280 டாக்டர்கள், 516 செவிலியர்கள், 1,200 கிராம
சுகாதார செவிலியர்கள் உள்ளிட்ட பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும்.
அரசு செவிலியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங், நேர்காணல் மூலம்
நடத்தப்பட்டு வந்தது. இதுதொடர்பாக, பல்வேறு புகார்கள் எழுந்தன. அதனால்,
வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும் வகையில், இணையதளம் மூலம் கவுன்சிலிங்
நடத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
அரசு மருத்துவமனை தற்காலிக செவிலியர்கள், கிராம செவிலியர்கள் உள்ளிட்ட
அனைத்து பணியிடங்களுக்குமான கவுன்சிலிங், இணையதளத்தில் நடத்தப்படும்.
செவிலியர்களும், தங்களுக்கான இடமாறுதல் இடங்களை, இணையதளத்தில்
தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.
இது, ஒரு மாதத்தில் நடைமுறைக்கு வரும். சோதனை திட்டமாக, முதலில் அரசு செவிலியர்களுக்கான கவுன்சிலிங், இணையதளத்தில் நடத்தப்படும்.
தமிழகத்தில், 6.43 கோடி ரூபாய் செலவில், கூடுதலாக, 41 மருத்துவமனைகளில், வாழ்வியல் சிகிச்சை மையங்கள் துவங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.