அரசுக்
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,800 -க்கு மேற்பட்ட
உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவது எப்போது என்று பாமக இளைஞரணித்
தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில்
புதிதாகத் தொடங்கப்பட்டவை உள்பட மொத்தம் 80 அரசுக் கலை மற்றும் அறிவியல்
கல்லூரிகள் உள்ளன. இவைதவிர 7 கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன. இந்தக்
கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் அரசு
அலட்சியம் காட்டுகிறது.
அதிமுக அரசு கடந்த 2011 -ஆம் ஆண்டு பதவியேற்ற பின்னர் இதுவரை 1,010 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன.
அரசு
கல்லூரிகளில் 1,883 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் விரைவில்
நிரப்பப்படும் என்று கடந்த 2015 -ஆம் ஆண்டே தமிழக அரசு அறிவித்தது. ஆனால்,
அந்த அறிவிப்பு அறிவிப்பாகவே நின்றுவிட்டது. ஆசிரியர்கள் தேர்வு வாரியம்
நடப்பாண்டு தொடக்கத்தில் வெளியிட்ட செயல் திட்டத்தில் 1,883 உதவிப்
பேராசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை ஜூலை 4 -ஆவது வாரத்தில்
வெளியிடப்படும், செப்டம்பர் முதல் வாரத்தில் நேர்காணல்கள் நடத்தப்பட்டு
அக்டோபர் மாதத்தில் முடிவுகள் வெளியிடப்படும் என்று
தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அக்டோபர் மாதம் தொடங்கிவிட்ட நிலையில் இதுவரை அறிவிக்கைக்கூட வெளியிடப்படவில்லை.
உதவிப்
பேராசிரியர்கள் நியமிக்கப்படாததால் மாணவர்களுக்கு முறையாக கல்வி
கற்பிக்கப்படுவதில்லை. எனவே, மாணவர்களின் உயர்கல்வி விஷயத்தில் அலட்சியம்
காட்டாமல் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 1,883 பணியிடங்கள் மற்றும் புதிதாக
உருவாக்கப்பட்ட உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு விரைந்து
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.