நாடு முழுவதும் உள்ள 35 பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழககங்களின் தொலைக்கல்வி திட்டங்களின் அங்கீகாரத்தை பல்கலைக்கழக மானியக்குழு ரத்து செய்து விட்டதாக டைம்ஸ் ஆப் இந்தியா இன்று (ஆகஸ்ட்12,2018)செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த நாளிதழில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
வெள்ளியன்று இது தொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு அறிவிப்பாணை ஒன்றை வெளியிட்டது. அதில், மாநிலங்களிலுள்ள 35 பல்கலைக்கழங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களின் தொலைக்கல்வி திட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்கள் கடந்த 5 வருட காலமாக ஒரே மாதிரியான கல்வித்திட்டங்களை கொண்டிருக்காவிட்டால் அவர்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். எம்பிஏ,எம்சிஏ,பிஎட், மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் போன்ற தொழில் சார்ந்த படிப்புகளுக்கு உரிய ஒழுங்குமுறை நிறுவனங்களிலிருந்து ஒப்புதல் பெறாமல் இருந்தால் அங்கீகாரம் வழங்கப்பட மாட்டாது.
பல்கலைக்கழக மானியக்குழுவின் இம்முடிவால் தொலை துாரக்கல்வியை நம்பி இருக்கும் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். பல்கலைக்கழக மானியக்குழுவின் முடிவை மறுபரிசிலீனை செய்ய வேண்டி மனுக்கள் அளிப்பதற்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.