
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி 2014-ம்
ஆண்டு முதல் ‘தூய்மையான பாரதம் தூய்மையான பள்ளி’ என்ற திட்டம் செயல்பட்டு
வருகிறது. அந்த வகையில், 2017-18-ம் ஆண்டில் தூய்மை பள்ளிக்கான தேசிய
அளவிலான விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 6 பள்ளிகளுக்கு மத்திய
மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி வழங்கிய தேசிய தூய்மை பள்ளி விருதுகளையும்,
தேசிய அளவில் அதிக எண்ணிக்கையிலான பள்ளிகளுக்கு தேசிய தூய்மை பள்ளி
விருதுகள் பெற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2-ம் இடம் பெற்றதற்காக
வழங்கிய சான்றிதழையும் சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி
பழனிசாமியிடம், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
தேசிய அளவிலான தூய்மை பள்ளிக்கான விருது தமிழ்நாட்டில் கரூர் மாவட்டம்
டி.செல்லாண்டிப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, தேனி மாவட்டம் கொம்பைதொழு
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சிவகங்கை மாவட்டம் எம்.ஆலம்பட்டி ஊராட்சி
ஒன்றிய நடுநிலைப்பள்ளி, திருவள்ளூர் மாவட்டம் அரியப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய
தொடக்கப்பள்ளி, திண்டுக்கல் மாவட்டம் இ.ஆவாரம்பட்டி அரசு கே.ஆர்.
உயர்நிலைப்பள்ளி, அரியலூர் மாவட்டம் சிலுவைசேரி ஊராட்சி ஒன்றிய
தொடக்கப்பள்ளி ஆகிய 6 பள்ளிகளுக்கு கிடைத்து உள்ளது.
முதல்-அமைச்சரின் ஒப்புதலின் அடிப்படையில், வரும் கல்வி ஆண்டில் 1 முதல்
5-ம் வகுப்பு வரையிலும், 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலும் அரசு பள்ளிகளில்
பயிலும் மாணவ, மாணவிகளுக்கு புதிய வண்ண சீருடைகள் மாற்றி அமைக்கப்பட்டது.
புதிய சீருடைகளை அணிந்து வந்த அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் எடப்பாடி
பழனிசாமியை சந்தித்தனர்.
பள்ளிக்கல்வி துறையில் பணிபுரிந்து, பணிக்காலத்தில் இறந்த 42 பணியாளர்களின்
வாரிசுதாரர்களுக்கு, அவர்களது கல்வித்தகுதி மற்றும் பதிவு மூப்பு
அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணியிடத்துக்கு கருணை அடிப்படையில் பணிநியமன
ஆணைகளை வழங்கும் வகையில் 7 வாரிசுதாரர்களுக்கு எடப்பாடி பழனிசாமி கருணை
அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர்
பா.வளர்மதி, தலைமை செயலாளர் கிரிஜா வைத்திய நாதன், பள்ளிக்கல்வி துறை
முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, மாநில திட்ட
இயக்குனர் இரா.சுடலைக்கண்ணன், பள்ளிக்கல்வி துறை இயக்குனர்
வி.சி.ராமேஸ்வரமுருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.