ஆரோக்கியத்தின் மிக முக்கியமான பகுதி உணவு என்பது அனைவரும் அறிந்ததுதான்.
அத்தகைய உணவு தரமானதாக இருக்கும்பட்சத்தில்தான் அதன் முழு சத்துக்களும்
கிடைக்கும். சரி... தரமான உணவு என்பதை எப்படி கண்டறிவது?இந்தக் கேள்விக்கான
பதிலைச் சொல்கிறது
அகச்சிவப்புக் கதிர் ஸ்கேனர் என்ற புதிய கருவி.
உணவு ஆய்வுக் கூடங்களில் ஒரு பொருள் கெட்டுவிட்டதா என்பதைக்
கண்டுபிடிக்கும் கருவிகள் பல உண்டு. ஆனால் அன்றாட வாழ்வில் நாம்
பயன்படுத்தும் காய்கள், கனிகள், இறைச்சிகளை விற்கும் கடைகள் மற்றும்
நுகர்வோரால் அந்த பெரிய கருவிகளை கையாள முடியாது. எனவே, அவர்கள் எளிதில்
கையாளும் விதத்தில் இந்த புதிய கையடக்க அகச்சிவப்புக் கதிர் ஸ்கேனரை
விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
மின்னணு உதிரி பாகங்கள் தயாரிப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைப்
பயன்படுத்தி உருவாக்கி இருப்பதால் இந்தக் கருவியை எவரும் எளிதில் கையாள
முடியும்.
இந்தக் கருவி உணவின் மீது அகச்சிவப்புக் கதிரை பாய்ச்சுகிறது. உடனே அந்தக்
கதிரின் பிரதிபலிப்பை திரும்ப வாங்கி அலைவரிசை மாற்றத்தை ஒப்பிடுகிறது.
இதன் மூலம் அந்த உணவு உண்ணும் தரத்தில் உள்ளதா என்பதை உடனே காட்டிவிடும்.
தக்காளி, மாட்டிறைச்சி ஆகியவை கெட்டுவிட்டனவா இல்லையா என்பதை இந்த ஸ்கேனர்
மூலம் துல்லியமாக சொல்ல முடிந்ததாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். மேலும்
எல்லா வகை உணவையும் சோதிக்கும்படி இந்த ஸ்கேனரை மேம்படுத்த ஆய்வுகள்
நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கையடக்க அகச்சிவப்புக் கதிர் ஸ்கேனரைப்
பயன்படுத்தி தக்காளி, மாட்டிறைச்சி போன்றவை கெட்டுவிட்டதா என்பதை
கண்டறிந்துள்ளனர், ஜெர்மனி யிலுள்ள பிரான்ஹோபர் ஆராய்ச்சி நிலையத்தைச்
சேர்ந்த விஞ்ஞானிகள். ஓர் உணவுப் பொருள் கெட்டுவிட்டதா இல்லையா என்பதை
உறுதி செய்ய முடியாததால், 1.3 பில்லியன் டன் அளவுக்கு உணவுப் பொருட்களை
மக்கள் ஆண்டுதோறும் குப்பையில் கொட்டுகின்றனர்.
இக்கருவி மக்களின் பயன்பாட்டுக்கு வரும்போது தரமான உணவு ஒருவருக்குக்
கிடைப்பதுடன், உணவுப்பொருள் வீணாவதும் தடுக்கப்படும் என்று நம்பிக்கை
தெரிவிக்கிறார்கள் ஆய்வாளர்கள்.