
சென்னை, தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள, குறைந்த காற்றழுத்த
தாழ்வு பகுதி, புயலாக வலுவடைந்து கரையை கடக்கும் என்பதால், ஏப்., 30
மற்றும், மே, 1ல், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மிக கனமழை பெய்ய
வாய்ப்புள்ளது என, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.தமிழகத்தின்
பெரும்பாலான பகுதிகள், கோடை வெப்பத்தின் தாக்கத்தில், தகிக்கின்றன. இந்த
தாக்கத்தை ஓரளவுக்கு தணிக்கும் வகையில், பல பகுதிகளில் வெப்பச்சலன மழை
பெய்து வருகிறது. இந்த மழையை அதிகரிக்கும் வகையில், வங்கக்கடலில் உருவாகும்
புயல், தமிழகம் நோக்கி வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதுகுறித்து,
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், பாலசந்திரன் கூறியதாவது:
தென்கிழக்கு
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவடைந்த நிலையில்
உள்ளது. இந்த தாழ்வு பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும்.
ஏப்., 27, 28ல், புயலாக வலுப்பெற்று, தமிழக கரையே நோக்கி நெருங்கும்.
இதனால், 26ம் தேதி மீனவர்கள், தென் மேற்கு வங்கக்கடலுக்கு செல்ல
வேண்டாம்.மேலும், வரும், 27, 28 தேதிகளிலும், மீனவர்கள் தமிழகம்,
புதுச்சேரி, இலங்கையை ஒட்டிய வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல்
பகுதிக்கு செல்ல வேண்டாம்.இவ்வாறு அவர் கூறினார்.எச்சரிக்கைஇந்திய வானிலை
ஆய்வு மையம், நேற்று வெளியிட்ட அறிக்கை:வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த
காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில், புயல் சின்னமாக
வலுவடையும். அடுத்த, 72 மணி நேரத்தில், தமிழகம், புதுச்சேரி, இலங்கை கரையை
நெருங்கும். இந்த சமயத்தில், மணிக்கு, 90 முதல், 100 கிலோ மீட்டர்
வேகத்தில் சூறை காற்று வீசும்.இதனால், ஏப்., 30, மே, 1ல், பெரும்பாலான
மாவட்டங்களில், கனமழைக்கு வாய்ப்புள்ளது. சில மாவட்டங்களில், மிக அதிக
கனமழையாக, 25 செ.மீ., வரை பெய்ய வாய்ப்புள்ளது.இவ்வாறு அதில்
கூறப்பட்டுள்ளது.இந்திய வானிலை ஆய்வுத்துறையின் இந்த எச்சரிக்கை, 'ரெட்
அலர்ட்'டாக கருதப்படுகிறது.