அரசுப் பள்ளிகளை தனியார் நிறுவனங்களுக்கு தத்துக் கொடுக்கலாமா?- ஓர் அலசல் - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


அரசுப் பள்ளிகளை தனியார் நிறுவனங்களுக்கு தத்துக் கொடுக்கலாமா?- ஓர் அலசல்

கல்வி என்பது இந்திய மக்கள் அனைவருக்கும் கிடைக்கக்கூடியதாக இருக்க வேண்டும். கல்வித் துறையில் கைமாறு எதிர்பார்க்க முடியாது. அதை வியாபாரமயமாக்கக் கூடாது. கல்வி எல்லா வகையிலும் எல்லோர்க்கும் மலிவாகக் கிட்டுவதாக இருக்க வேண்டும். கல்வியைப் போதிக்கும் வழிமுறைகளானது பின்தங்கிய வகுப்பு மக்களை எழுச்சி பெறச் செய்வதாக இருக்க வேண்டும்"
மும்பை சட்டப்பேரவை கவுன்சில் கூட்டத்தில் 1927 மார்ச் 12-ல் அம்பேத்கர் இவ்வாறு பேசினார்.

இதை இங்கே இந்தக் கட்டுரையின் தொடக்கப்புள்ளியாக வைக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியிருக்கிறது தமிழக அரசின் ஒரு வேண்டுகோள்.
அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முன்னாள் மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள் உதவ வேண்டும். உட்கட்டமைப்பு, சுற்றுச்சுவர், நூலகம், கழிப்பறை, இணையதள வசதிகள், ஆய்வகம், வர்ணம் பூசுதல் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த முன்வர வேண்டும். அரசுப் பள்ளிகளைத் தத்தெடுக்க விரும்புபவர்களுக்கு உடனே பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதுதான் அரசாங்கம் முன்வைத்துள்ள கோரிக்கை.
அரசாங்கத்தின் இந்தக் கோரிக்கை பரவலாக பலதரப்பட்ட விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது. இது மக்களின் சமூகப் பொறுப்பைத் தூண்டும் முயற்சி என்ற பாராட்டையும் அரசாங்கம் தன் பொறுப்புகளில் இருந்து நழுவும் உத்தி எனவும் கலவையான விமர்சனங்கள் வருகின்றன. இந்த விமர்சனங்களே இக்கட்டுரைக்கான அச்சாணி.
நான் என் பிள்ளையை அரசுப் பள்ளியில் படிக்க வைக்காததற்குக் காரணங்கள் என பெரும்பாலான பெற்றோர் அடுக்கும் காரணங்கள்
* வீட்டருக்கே இருந்த பள்ளியின் மோசமான கட்டமைப்பு,
* தண்ணீர்  பற்றாக்குறை
* கழிவறை வசதியின்மை
* விளையாட்டுத் திடல்
என பட்டியலிடலாம்.
ஒரு பள்ளிக்கூடம் என்பது ஆசிரியர், கட்டிடம், அடிப்படை வசதிகள் எல்லாம் இணைந்ததே. தனியார் பள்ளிக்கூடத்தில் இந்த வசதிகள் எல்லாம் இருந்தது என்றால் அந்த விதிமுறைகளை விதித்தது அரசாங்கம் தானே. தனியார் பள்ளிகள் எல்லாம் அதனைத் தவறாமல் பின்பற்றும்போது அரசாங்கமும் அதனைப் பின்பற்ற வேண்டாமா? அரசாங்கம் அப்படிப் பின்பற்றியிருந்தால் தனியார் பள்ளிகளின் தேவையே இல்லாமல் போகுமல்லவா?
ஆனால், அரசாங்கம் இதற்கு என்ன காரணம் கூறுகிறது?
தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிக்கின்றன அதனால் சேவைத்தரம் இருக்கிறது என்று சொல்லும். இதைத்தான் அம்பேத்கர் "கல்வித் துறையில் கைமாறு எதிர்பார்க்க முடியாது. அதை வியாபாரமயமாக்கக் கூடாது" எனக் கூறுகிறார். கல்விக்கான நிதியைத் திரட்ட வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துடையது தானே. இப்போது நிர்வாகத்தில் தலையிட முடியாத அளவில் உதவிகள் என்று ஆரம்பித்தால் எதிர்காலத்தில் தொழில் நிறுவனங்களிடம் வளைந்து கொடுத்துப் போக வேண்டிய சூழல் வரலாம்.
மாணவர்கள் இல்லாததால் ஆசிரியர்கள் போதிய அளவில் நியமிக்கவில்லை. ஆசிரியர் பற்றாக்குறையால் பள்ளி மூடப்படுகிறது என்பதும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. அரசாங்கத்துக்கு நெருக்கடி ஏற்படுகிறது என்றால் நெருக்கடியைத்தானே சரி செய்ய வேண்டும். அதற்குப் பதிலாக பொறுப்புகளைத் தாரை வார்ப்பது எப்படி சரியாக இருக்கும்? இப்படி அரசின் இந்த முடிவுகள் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன.
இது குறித்து அரசுப் பள்ளி ஆசிரியர், முன்னாள் மாணவர், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், சமூகச் செயற்பாட்டாளர் என பலரிடமும் கருத்துகளைப் பெற்றோம்.
தங்கம் தென்னரசு: முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
''கடந்த சில நாட்களாக இதன் மீதான வாத விவாதங்கள் நடைபெறுவதைக் கவனித்தேன். என்னைப் பொறுத்தவரை இது மிகை மிஞ்சிய அளவில் பூதாகரமாக்கப்படுகிறது என்றே சொல்வேன். ஒரு எதிர்க்கட்சிப் பிரமுகராக இருந்து கொண்டு நான் இவ்வாறு சொல்வதால் ஆளும் கட்சியின் திட்டங்களை நான் ஆதரிக்கிறேன் என்று அர்த்தமில்லை. குறிப்பிட்ட இந்த விவகாரத்தில், பள்ளியில் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக முன்னாள் மாணவர்களிடம் தனியார் நிறுவனங்களிடமும் உதவி பெறுவதில் தவறில்லை என்பேன். ஒருவேளை இந்த அரசாங்கம் ஆசிரியர் நியமனத்திலோ, பாடத்திட்டத்திலோ மற்றவர்கள் தலையிடும் அளவுக்கு உதவிகளைக் கோரியிருந்தால் நாங்கள்தான் முதல் எதிர்ப்பைப் பதிவு செய்திருப்போம். ஆனால், இது வெறும் பொருள் உதவி என்றளவில் இருப்பதால் இத்திட்டத்தில் தவறில்லை என்பேன்.
திமுக ஆட்சி காலத்தில்கூட பள்ளி சீரமைப்பு மாநாடு நடத்தியிருக்கிறோம். நாங்கள் பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு என்று ஒதுக்கிய நிதியில் கணிசமான தொகை ஆசிரியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்துக்குச் சென்றுவிடுகிறது. ஆனால், ஒரு பள்ளிக்கு ஆசிரியர்கள் தாண்டி நிறைய தேவை இருக்கிறது. கட்டிட வசதி, கழிப்பறை வசதி, மின்னணு சாதனங்களின் தேவை, மைதானம், விளையாட்டு உபகரணங்கள், நூலகம், புத்தகங்கள், ஆய்வுக்கூடம் அதற்கான உபகரணங்கள் என நிறைய தேவை இருக்கிறது.
தங்கம் தென்னரசு: கோப்புப்படம்
ஆனால், பள்ளி என்றால் முதலில் ஆசிரியர்கள் அப்புறம் அடிப்படைத் தேவைகள் என்றிருப்பதால் ஆசிரியர்களுக்கு அதிகமான தொகை பட்ஜெட்டில் ஒதுக்கப்படுகிறது. மற்ற தேவைகளுக்கு நபார்டு வங்கிகளின் உதவியைப் பெறுகிறோம். பதினான்கு வயது வரையுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி வழங்குவதற்கான செயல்திட்டமான சர்வ சிக்‌ஷா அபியான் திட்டம் இப்போது சமக்ர சிக்‌ஷா என்ற திட்டமாகச் செயல்படுகிறது.
இது 12-ம் வகுப்பு வரை கல்வி வழங்குவதை உறுதி செய்வதாக இருக்கிறது. ஆனால் நம் மாநிலத்தில் இருக்கும் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையை நாம் கணக்கில் கொள்ள வேண்டும். மலை கிராமம் தொடங்கி கடற்கரை கிராமம் வரை அரசுப் பள்ளிகள் உள்ளன. அத்தனைப் பள்ளிகளுக்கும் ஆசிரியர்கள் தேவை. ஆசிரியர்கள் நியமனத்தைத் தாண்டி உட்கட்டமைப்பு வசதிகளைச் செய்ய நிதி தேவைப்படுகிறதுதானே. அதற்காக இது போன்ற அழைப்புகள் தவறில்லை. ஆனால் அது தலையீடாக மாறக்கூடாது'' என்றார் தங்கம் தென்னரசு.
அரசுப் பள்ளி முன்னாள் மாணவர் இளங்கோவன்
பெரியகுளம் விக்டோரியா அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று தற்போது பணிபுரிந்து வரும் இளைஞர் இளங்கோவன் கூறும்போது, " நான் படித்த பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசை எப்போதும் உண்டு. தனியார் பள்ளி ஆசிரியர்களைவிட அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அர்ப்பணிப்போடு மாணவர்களைப் படிக்க வைப்பதை அனுபவித்தவன் என்ற முறையில் அரசுப் பள்ளிகளின் வளர்ச்சியில் எனக்கு அக்கறை அதிகம். ஆனால், ஒரு அரசாங்கமே தனியாரிடமும் முன்னாள் மாணவர்களிடமும் இப்படியாக கோரிக்கை வைப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உதவி கோருகிறது என்றால் அரசாங்கத்திடம் நிதி இல்லையா?
ஒவ்வொரு பட்ஜெட்டிலும் பள்ளிக் கல்வித்துறைக்கு இவ்வளவு நிதி ஒதுக்குகிறோம் என்று சொல்லும் அரசாங்கம் ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் மாதந்தோறும் ஆசிரியர் ஊதியம், துப்புரவுத் தொழிலாளர்கள் ஊதியம், பராமரிப்புச் செலவு இவ்வளவு ஆகிறது என வெளிப்படையாகத் தெரிவிக்குமா? எனக்குத் தெரிந்து நிறைய அரசுப் பள்ளிகளில் தோட்டக்காரர், துப்புரவுத் தொழிலாளி நியமிக்கப்பட்டிருப்பதாக சம்பளம் மட்டும் கணக்கில் காட்டப்படுகிறது.
அரசாங்கம் வெளிப்படையாக நிதி மேலாண்மையைத் தெரிவித்தால் நாங்களும் உதவத் தயார். லாபம் இல்லாததால் பள்ளிகள் வசதியை மேம்படுத்த இயலவில்லை என்றால் நவோதயா பள்ளிகள் அமைக்க ஏன் கெடுபிடி காட்ட வேண்டும். அவர்களாவது அனைத்து வசதியுடனும் அதிகப் பள்ளிகளை அமைத்துக் கொடுக்கட்டுமே" என்றார் இளங்கோவன்.
அரசுப் பள்ளி ஆசிரியை சித்ரா
''அரசாங்கத்தின் இந்த அழைப்பு பெற்ற பிள்ளையை தத்துக்கொடுப்பது போன்றது. ஏற்கெனவே ஓர் அரசாணை இருக்கிறது. G.O. No.211. இந்த அரசாணையானது நிபந்தனைகளுக்கு உட்பட்டு தனியார் நிறுவனங்கள் அரசுப் பள்ளிகளுக்கு உதவி செய்ய வழி வகுக்கிறது. நானே எனது பள்ளிக்கு இந்த அரசாணையின் கீழ் உதவி பெற்றிருக்கிறேன். இதை முறைப்படுத்தினாலே போதுமானது. அதைவிடுத்து பகிரங்கமாக இப்படி முன்னாள் மாணவர்களுக்கு, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கத் தேவையில்லை என்றே நினைக்கிறேன். நாம் பெற்ற குழந்தையை கவனிக்க முடியாவிட்டாலும்கூட தத்துக் கொடுக்கமாட்டோம் அல்லவா அப்படித்தான் இதுவும்.
இந்தியா ஒரு வளரும் நாடு. இங்கு மக்கள் வளம் இருக்கிறது. மக்களின் புத்திக்கூர்மையை வலுப்படுத்த அறிவொளி வேண்டும். பள்ளிகள்தான் அதனைச் செய்ய முடியும். அதுவும் அரசுப் பள்ளிகள்தான் அதைச் செய்ய வேண்டும். கல்வி அனைவருக்கும் கிடைப்பதை அரசாங்கம்தான் உறுதி செய்ய வேண்டும். தனியார் பள்ளிகளை நாடுவதற்கு அவற்றின் பிராண்டிங் அடையாளமாக இருக்கிறது என்றால் அரசுப் பள்ளிகளும் அதே பிராண்டிங்குக்குள் வர வேண்டும். அதற்கான செலவினங்களை அரசுதான் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
அதைவிடுத்து தனியாரை நாடுவது உடனே இல்லாவிட்டாலும்கூட நீண்டகாலப் போக்கில் பள்ளியில் நிர்வாகத்தில் பாடத்திட்டத்தில் தனியார் தலையீட்டை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை'' என்றார் சித்ரா.
கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு
''1949-ல் கல்வியை அடிப்படை உரிமையாக்க போதிய நிதி இல்லை என கைவிரித்த அரசாங்கம்தான் இந்திய அரசாங்கம். அதன் பின்னர் சட்டப்பிரிவு 41 அமலுக்கு வந்தது.  நாட்டின் பொருளாதார வசதி மேம்படுவதற்கு ஏற்ப கல்வித் தரத்தை அதிகரிப்பது அரசின் கடமை என அச்சட்டம் கூறுகிறது.
காமராஜர் காலத்தில் தனவான்களிடம் நிலமும் நிதியும் கோரப்பட்டது. அதேபோன்றதொரு பொருளாதார நெருக்கடி சூழலில்தான் இப்போதும் அரசு இருக்கிறதா? பொருளாதார நிலைமை குறித்து அரசு ஏன் வெள்ளை அறிக்கை வெளியிடக் கூடாது? உண்மையிலேயே நிதி நிலைமை மோசமாக இருந்தால் தனியார் நிறுவனங்களிடம் உதவி பெறட்டும்.
பிரின்ஸ் கஜேந்திர பாபு   -  BBC
தனியார் நிறுவனங்கள், கார்ப்பரேட்டுகள் ரிட்டர்ன்ஸ் எதிர்பார்க்காமல் உதவிகள் செய்வார்களா என்ன? கை நீட்டி உதவி கேட்பதைக் காட்டிலும் கார்ப்பரேட்டுகளும் கல்வி செஸ் வரியை இன்னும் அதிகரிக்கலாமே? கல்வித் துறை லாப நட்ட கணக்குப் பார்த்து நடத்த வேண்டிய துறையா என்ன? கல்வி அரசுடைமை. அரசின் பொறுப்பு. அந்தப் பொறுப்பை துறக்க நினைப்பது பேராபத்துக்கு இட்டுச் செல்லும்'' என்றார் பிரின்ஸ் கஜேந்திர பாபு.
கல்வி பாதிக்கும்; ஆசிரியர்களின் மாண்பு குறையும்: எச்சரிக்கும் கல்வியாளர்
மூத்த கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன் கூறும்போது,  "அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த தனியார் நிறுவனங்களின் உதவியை நாடுவது என்பது காலப்போக்கில் மாணவர்களின் கல்வியைப் பாதிக்கும். ஏற்கெனவே இந்த அரசாங்கம் ஆசிரியர்களின் மாண்பைக் குறைத்துள்ள நிலையில் அவர்களைக் கையேந்த வைப்பது இன்னும் இழி செயலாகிவிடும்.
இந்த அரசாங்கம் அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி அளிக்கும் கடமையைக் கைகழுவி காலங்கள் கடந்துவிட்டன. எப்போது தனியார் பள்ளிகளின் வணிகம் பெருகியதோ அப்போதே அரசு கடமையைத் துறந்தது அம்பலமாகிவிட்டது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. அந்தக் குறைவான எண்ணிக்கையில் உள்ள குழந்தைகளுக்குக்கூட அரசாங்கம் போதிய வசதியைச் செய்து தர முடியாது என்று எப்படிச் சொல்ல முடிகிறது? இது அவர்களின் அரசியல் உறுதியின்மையையே காட்டுகிறது.
அரசாங்கம் 10 லட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் கொடுப்பதாகச் சொல்கிறது. பள்ளிக்கு எதிர் வீட்டில் இருக்கும் குழந்தை, சைக்கிளே ஓட்டத் தெரியாத குழந்தைக்கு எல்லாம் சைக்கிள் எதற்கு? இதில் சிக்கனம் செய்யலாமே? அரசாங்கம் திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கனம் காட்டினாலே தேவைக்கு அதிகமாக நிதியிருக்கும். ஆனால், எந்தக் கட்சியானாலும் வாக்கு அரசியல் செய்கிறது. இங்கே மக்கள் சேவைக்கான அரசாங்கம் இல்லை. அப்போது தனியாரிடம் கையேந்தும் ஆபத்துதான் ஏற்படும்.
எஸ்.எஸ்.ராஜகோபாலன்
சரி, தனியார் நிறுவனங்களிடம் நிதி கோரச் சொல்லும் அரசாங்கம் அமைச்சரையும், செயலரையும், இயக்குநரையும், மாவட்டக் கல்வி அதிகாரியையுமா அதற்கு அனுப்பும் ஆசிரியர்களைத் தான் அனுப்பும். ஆசிரியர்கள் பணம் திரட்டச் சென்றால் வகுப்பறையில் யார் கல்வி புகட்டுவார்கள்?
ஆசிரியர்களின் கண்ணியத்தைக் குறைப்பதைவிட வருவாய்த் துறை தனியார் நிறுவனங்களுக்கு கூடுதலாக ஒரு சதவீதம் செஸ் விதித்தாலே போதுமானது. ஆனால், பெரும் முதலாளிகளுக்கு எந்த அரசும் வரி விதிக்காது.
இரண்டாவதாக அரசாங்கம் கூறும் வசதிகளைப் பெருக்க எவ்வளவு தேவைப்படும் என்று ஏதாவது வரைவு இருக்கிறதா? பெற்றோரிடம் இவ்வளவுதான் வாங்கலாம், தனியாரிடம் இவ்வளவுதான் வாங்கலாம் என்றெல்லாம் ஏதாவது வரைமுறை இருக்கிறது. வெறும் அறிக்கை குளறுபடிகளை ஏற்படுத்தாதா?
இப்படி தனியார் நிறுவனங்களிடம் நிதி வாங்கித்தான் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டுமென்றால் ஆசிரியர்களின் மாண்பு குறையும், மாணவர்களின் கல்வி பாதிக்கும். அதன் நீட்சியாக தனியார் பள்ளிகள் இன்னும் இன்னும் பெருகுமே தவிர அரசுப் பள்ளிகள் தரம் உயர்ந்து மாணவர் சேர்க்கை அதிகரிக்க உதவாது" என்றார் ராஜகோபாலன்.
ஆசிரியர்களை கையேந்த வைப்பதா?- கல்வியாளர் வசந்திதேவி
''நோபல் வென்ற பொருளாதார மேதை அமர்த்தியா சென், "ஒரு மாநிலம் கல்விக்கு ஒதுக்க போதுமான நிதியில்லை என்று கூறுவது அடிமுட்டாள்தனம்" என்று சொல்லியிருக்கிறார். அரசுப் பள்ளிகளை தத்தெடுக்க தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கும் தமிழக அரசு அப்படியொரு முட்டாள்தனத்தைத்தான் செய்கிறது.
டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியின் கீழ் அரசுப் பள்ளிகள் மிகச் சிறப்பாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. அங்கிருக்கும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக உட்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்திருக்கிறது. தேர்ச்சி விகிதம் தனியார் பள்ளிகளைக் காட்டிலும் அதிகம். இதனால் அங்கு அரசுப் பள்ளியில் சேர மாணவர்கள் குவிகின்றனர். இத்தனைக்கும் அங்கு துணை நிலை ஆளுநருடனான மோதலுக்கு இடையேதான் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.
கேரளாவில் கடந்த ஆண்டு மட்டும் லட்சக்கணக்கான குழந்தைகள் தனியார் பள்ளியிலிருந்து அரசுப் பள்ளிக்குச் சென்றிருக்கிறார்கள்.
 
டெல்லி, கேரள மாநிலங்கள் எல்லாம் அரசுப் பள்ளிகளை தனது பெருமித அடையாளமாக மாற்றியிருக்கிறது. தமிழகம் மட்டும்தான் அரசுப் பள்ளிகளை தனியார் நிறுவனங்களை தத்தெடுக்க அழைக்கும் அவல நிலையில் இருக்கிறது. ஆசிரியர்களையும் தலைமை ஆசிரியர்களையும் நிதி உதவிக்காக கையேந்த வைக்கிறது. இது முழுக்க முழுக்க அரசாங்கத்தின் திறனின்மையே.
கல்விச் சீரை கட்டாயமாக்குகிறது. அரசாங்கம் ஆணை பிறப்பித்துவிட்டு ஒதுங்கிவிடும்; ஆனால் களத்தில் யார் செயல்படுவது? தலைமை ஆசிரியருக்கும் ஆசிரியருக்கும் இதுதான் வேலையா?  தனியார் நிறுவனங்கள் தாமாக முன்வந்து தொண்டுள்ளத்தோடு உதவி செய்வது வேறு. அவர்களிடம் உதவி செய்யுங்கள் என்று மன்றாடுவது வேறு. அரசாங்கம் மன்றாட வேண்டிய அவசியம் என்னவிருக்கிறது? நிர்வாகத்தில் கோட்டைவிட்டுவிட்டு பிச்சையெடுப்பது கல்வித் தரத்தை கல்விக்கூடத்தின் தரத்தை உயர்த்தவே உயர்த்தாது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் அடித்தட்டு வகுப்பைச் சேர்ந்த பிள்ளைகள் இன்னும் இன்னும் அதிகமாகப் பாதிக்கப்படுவார்கள்'' என்று கல்வியாளரும், மனோன்மணியம்  சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான வசந்திதேவி கூறியுள்ளார்.
தீர்வை நோக்கி நகர்வோம்
பொருள் உள்ளோர்க்கு ஒரு வகை கல்வி அடித்தட்டுக் குழந்தைகளுக்கு ஒரு வகை கல்வி. இந்தப்போக்குதான் கல்வியை தனியார் மயம், வணிகமயம் என வேறு பாதைகளுக்கு இட்டுச் சென்றிருக்கிறது. இந்த அவலத்தைத் தீர்த்தால் மட்டுமே நாம் முன்னேறிச் செல்ல முடியும்.
வளர்ந்த நாடுகளின் பலமே ஏழை - பணக்காரர் பேதமின்றி, தாய்மொழி வழியில், முழுக்க முழுக்க அரசு நிதியில் பள்ளிகளை நடத்தி இலவசக் கல்வியை வழங்குவதில் தான் இருக்கிறது. இத்தகைய தீர்வை நோக்கி நகர வேண்டிய சூழலில் தனியாரிடமும் தனிநபரிடமும் தர்மம் கேட்கும் நிலை நம்மை பின்னோக்கி இழுத்துச் செல்லும்.
கல்வி மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும். இது போன்ற அதிகாரப் பகிர்தலை நோக்கி பயணிப்போம். கல்வி என்பது இந்திய மக்கள் அனைவருக்கும் கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டுமானால் அது அரசாங்கத்தின் பொறுப்பில் மட்டுமே இருக்க வேண்டும்.
அரசாங்கம் அனைவருக்கும் கல்வியை தன் நிதியில் இருந்தே உறுதி செய்யட்டும். ஏனெனில் கடமைகளை தட்டிக் கழிப்பது மக்களாட்சி ஆகாது.
தொடர்புக்கு: bharathi.p@thehindutamil.co.in
நன்றி .இந்து

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H