`எங்கிட்ட படிச்ச பொண்ணு சிவகாம
சுந்தரி, அமெரிக்காவில் இருக்கு. ஊருக்குப் போன் பண்ணினால், டீச்சர் எப்படி
இருக்காங்கனு கேட்குமாம்... உதவி ஏதாச்சும் வேணும்னா செய்ங்கன்னு
சொல்லுமாம்... இன்னொரு பையன் கனடாவுல வேலை பார்த்துட்டு இருக்கான்.
இங்கே இருக்கிற பசங்கள்ல பல பேரு வந்து பார்க்கிறாங்க. இதைவிட வேறென்ன
வேணும் தம்பி" என்று வெள்ளந்தியாகச் சிரிக்கிறார் அலிமா டீச்சர்.
விருத்தாசலம் மாவட்டம் தொழூரில் அலிமா டீச்சர் என்றால் எல்லோருக்கும்
தெரியும். சுமார் 30 ஆண்டுகளாக அந்த ஊர் மாணவர்களுக்குக் கல்வி
அளித்துவருகிறார். ஆனால், படித்தது 12-ம் வகுப்பு வரைதான். அதனால்,
நேரிடையான ஆசிரியராகவும் ஆக முடியவில்லை. பிறகு எப்படித்தான் இத்தனை பேர்
அலிமா டீச்சரை அன்போடு விசாரிக்கிறார்கள்? அவரிடமே கேட்கலாம்.
"எனக்கு வயசு 49 ஆகுது. நான் 12 வது படிச்சு முடிஞ்சதும், இந்த ஊர்ல இருந்த
கலைமகள்னு தனியார் பள்ளிக்கு வேலைக்குப் போனேன்.
அப்புறம், இங்கே உள்ள கிராமத்துத் தலைவர்கள் எல்லாம், இந்த ஊரின்
தொடக்கப்பள்ளிக்கு டீச்சராக இருக்கச் சொன்னாங்க. இங்கிலீஷ் மீடியத்துல வேலை
பார்த்ததால, பசங்களுக்கு இங்கிலீஷ் கத்துகொடுப்பேன்னு ஊர்க்காரங்க
நினைச்சாங்க. அப்படியே பசங்களோடேயே என் வாழ்க்கை போயிட்டு இருக்கு. 30
வருஷமிருக்கும்னு நினைக்கிறேன்" என்று சுருக்கமாகத் தன்னைப் பற்றிச்
சொன்னாலும், அவரைப் பற்றிப் பகிர நிறைய தகவல்கள் இருக்கின்றன.
பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் வழியான ஆசிரியர் என்றாலும், இதுதான் சம்பளம்
என்று எதையும் கேட்காமல், தன் தேவைக்கு எனச் சொற்பமான பணத்தை மட்டுமே
வாங்கிக்கொள்கிறார்.
தனக்கு என எந்தச் சொத்தும் சேர்த்துக்கொள்ளாதவர். திருமணமும்
செய்துகொள்ளவில்லை. அவரின் நினைப்பெல்லாம் மாணவர்களின் நலன் குறித்தே
இருந்து வருகிறது.
"எனக்கு ஒரு அண்ணன், ஒரு தங்கச்சி. அண்ணன் ஒரு கம்பெனியில வேலை
பார்த்திட்டு இருந்தார். திடீர்ன்னு ஒருநாள் வேலை போயிடுச்சு. அவர் வேலை
செஞ்சிட்டு இருந்த கம்பெனி நஷ்டத்துல போவுதுனு, வேலையைவிட்டு
அனுப்பிட்டாங்க. அண்ணனுக்கு உதவியாக இருக்கணும்னு நான் கல்யாணம்
செய்துக்காம, கூடவே இருந்தேன். அண்ணனும் சரி, தங்கச்சியும் சரி எங்க
வீட்டுல யாருமே கல்யாணம் பண்ணிக்கல. ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா
இருந்தோம்.
அண்ணனுக்கு மஞ்சள் காமாலை வந்து, நுரையீரல் பாதிச்சு இறந்திட்டாரு, போன
வருஷம் தங்கச்சியும் உடம்புக்கு முடியாம இறந்துடுச்சு. என்ன செய்யுறது.
இப்ப நான் தனி மரமா இருக்கேன்" என்றவரின் குரல் உடைந்தது. ஓரிரு நிமிடங்கள்
கழித்து தொடர்கிறார்.
"எனக்குன்னு சொந்தம் இனிமே பள்ளிக்கூடத்துப் பசங்கதான். இந்த ஊர்
மக்களுக்கும் என்கூட பாசமா பழகுறாங்க. அரிசி, புளி, காய்கறின்னு எல்லாம்
கொடுக்கிறாங்க. அதை மீறி, எனக்குத் தேவையான பொருள்கள் வாங்கவும், பஸ்க்குப்
போய்ட்டு வரவும் டீச்சர்ங்ககிட்ட 10, 20 ரூபா வாங்கிப்பேன்.
மத்தபடி சம்பளம்னு கேட்டதில்ல. நாமளும் அந்தளவுக்குப் படிக்கல இல்லையா
சார்... நான் 12 வது படிச்சதும் நர்ஸிங் படிக்கணும்னு ஆசைப்பட்டேன். அப்ப
படிக்க வைக்க யாருமில்லை. நானும் யாருகிட்டேயும் போய் நிக்கவும் இல்ல"
என்றவரிடம், "தினமும் எவ்வளவு தூரம் பயணம் செய்து வருகிறீர்கள்?" என்றேன்.
"எத்தனை கிலோமீட்டர் எல்லாம் தெரியலயே! விருத்தாசலம் ஜங்ஷன் பக்கத்துல
குடியிருக்கேன். அங்கேருந்து, ஷேர் ஆட்டோவுல 10 ரூபா கொடுத்து, பஸ்
ஸ்டாண்ட் வந்து, அங்கிருந்து தொழூர் வருவேன்.
பஸ்ஸூக்கு 13 ரூபா. ஒரு நாளைக்கு 50 ரூபா ஆயிடும்" என்கிறார்.
இப்போது, வாடகைக்குக் கூரை வீடு ஒன்றில் வசித்துவருகிறார். அவருடைய
உழைப்பையும் நல்ல மனதையும் பார்த்து சிலர் அவரின் வாழ்வாதாரத்துக்கு
உதவதற்கான முயற்சிகளை எடுத்துவருகிறார்கள்.