
வேலூர் சாயிநாதபுரத்தில் உள்ள தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் மகளிர்
கல்லூரியின் 44-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில், மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி மயில்சாமி அண்ணாதுரை பேசியது:
நாட்டின் உயர்கல்வி வளர்ச்சி 75 சதவீதமாக உள்ளது.
அதில், தமிழகத்தின் பங்களிப்பு 45 சதவீதமாக உள்ளது. நாட்டின்
முன்னேற்றத்துக்கு பெண் கல்வி மிக அவசியம். ஒரு பெண் கல்வி கற்றால் அவர்
சார்ந்த குடும்பமும் வளர்ச்சி பெறும். எண்ணம், சொல், செயல் ஆகியவற்றை
முன்னிறுத்தி உழைக்க வேண்டும். விரும்பியது கிடைப்பது மட்டுமே வெற்றி அல்ல.
கிடைத்ததை வைத்து விரும்பியதை அடைவதே வெற்றி. எனவே, கிடைத்த வாய்ப்புகளை
நல்லமுறையில் பயன்படுத்தி வெற்றிக்கு உழைக்க வேண்டும்.
தற்போது மக்களின் அன்றாட வாழ்க்கையில் தொழில்நுட்பம் முக்கியத்துவம்
பெற்றுள்ளது. இதையொட்டி, இந்தியாவும் அதிக அளவில் செயற்கைக்கோள் ஏவி
தொழில்நுட்பத் துறையில் வளர்ச்சி பெற்று வருகிறது. இதனால், ஆராய்ச்சித்
துறையில் அதிக அளவில் வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. மாணவர்களும்
படிக்கும் காலத்திலேயே ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து படிக்க
வேண்டும். ஆராய்ச்சி என்பது வாழ்வில் புதிய அனுபவங்களைத் தரக்கூடியது.
தற்போது உலக அளவில் ஆராய்ச்சித் துறையில் பெண்கள் அதிக அளவில் பங்காற்றி
வருகின்றனர். அவ்வாறு பெண்கள் அதிக அளவில் ஆராய்ச்சித் துறையில் ஈடுபட்டு
தங்களுக்கும், நாட்டுக்கும் பயனளிக்க வேண்டும் என்றார் அவர்.
விழாவில், 68 மாணவிகளுக்கு எம்.ஃபில். பட்டமும், 205 மாணவிகளுக்கு முதுநிலை
பட்டமும், 870 மாணவிகளுக்கு இளநிலை பட்டமும் வழங்கப்பட்டன. மேலும், 100
சதவீத தேர்ச்சி பெற்ற துறைகளுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் ரூ. 3
லட்சத்து 89 ஆயிரம் ரொக்கப் பரிசும் அளிக்கப்பட்டது.
மத்திய அரசிடம் இருந்து இக்கல்லூரிக்கு அறிவியல், தொழில்நுட்பத்துக்கான
கட்டமைப்பு, மேம்பாட்டுக்கான நிதி ரூ. 95 லட்சம் வழங்கப்பட்டுள்ளதை அடுத்து
டிகேஎம் கல்லூரியில் கட்டப்பட்டுள்ள அறிவியல் ஆய்வகத்தை மயில்சாமி
அண்ணாதுரை திறந்து வைத்தார்.
கல்லூரித் தலைவர் த.சிவக்குமார் தலைமை வகித்தார். செயலர் டி.மணிநாதன்
முன்னிலை வகித்தார். முதல்வர் பி.என்.சுதா வரவேற்றார். பேராசிரியை
ஆர்.பத்மஜா நன்றி கூறினார்.