
2019-20-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ம் தேதிநடைபெற்றது. இதில் நாடு முழுவதும் 15 லட்சத்து 19 ஆயிரத்து 375 பேர் எழுதினா். இத்தேர்வுக்கான முடிவுகள் ஜூன் 5ஆம் தேதி வெளியானது. அரசு பள்ளியில் படித்த.. தையல் தொழிலாளியின் மகளான ஜீவிதா, இத்தேர்வில் 605 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
சென்னையை அடுத்த அனகாபுத்தூரைச் சேர்ந்த தையல் தொழிலாளியான பன்னீர்செல்வம் என்பவரின் மகள்தான் ஜீவிதா. பன்னீர்செல்வத்துக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் தனது 3 மகள்களையும் அனகாபுத்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கவைத்தார். இதில் ஜீவிதாகடந்த 2015-ம் ஆண்டு, 10-ம்வகுப்பு பொதுத்தேர்வில் 497 மதிப்பெண்கள் பெற்றார். இதைத்தொடர்ந்து பிளஸ் 2 வகுப்பில் 1,161 மதிப்பெண்கள் பெற்றார்.
மருத்துவராக விரும்பிய ஜீவிதா, பிளஸ் 2 படிக்கும்போதே நீட் தேர்வுக்கும் தன்னை தயார் படுத்திக்கொண்டார். இதற்காக சில மாதங்கள் டியூஷனுக்கு சென்ற இவர், அதன்பிறகு ஃபீஸ் கட்ட பணம் இல்லாததால் வீட்டில் இருந்தபடி சொந்த முயற்சியில் நீட் தேர்வுக்கு படித்தார். நூலகத்தில் இருந்தும் நண்பர்களிடம் இருந்தும் புத்தகத்தை இரவல் வாங்கிப் படித்து நீட் தேர்வுக்கு இவர் தயாரானார்.
இந்நிலையில் நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 605 மதிப்பெண் எடுத்துள்ள ஜீவிதா, அகில இந்திய அளவில் 6,678-வது இடத்தையும், ஓபிசி பிரிவில் 2,318-வது இடத்தையும் பிடித்துள்ளார்.
தமிழகத்தில் இவருக்கு அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சீட் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கல்வியாளர்கள் தெரி விக்கின்றனர்..
இதுகுறித்து ஜீவிதா கூறும்போது, “எனது குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளது. எங்கள் அப்பா ஒரு தையல் கடையில் வேலை செய்து வருகிறார். அதில் வரும் வருமானத்தில் படிக்க வைத்தார். ஏழை குடும்பத்தில் பிறந்ததால் மருத்துவராக முடியுமா? என பல நாட்கள் நினைத்துள்ளேன். என் அப்பா, அம்மா மற்றும் ஆசிரியர்கள் எனக்கு ஊக்கம் கொடுத்தனர். இதன் விளைவாக நான் நீட் தேர்வில் தேர்ச்சியடைந்துள்ளேன்” என்றார்.