http://www.indiaeducation.net/indiaedudestination/policy/education-policy.aspx
==================================
கடந்த சில நாட்களாக இதை பற்றிய வாதம் விவாதம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. ஆனால் எதிர்ப்பாளர்களும் ஆதரவாளர்களும் முழுமையான கொள்கையை குறித்து விவாதிக்கிறார்களா என்று இந்த பதிவை படித்தவுடன் நீங்களே புரிந்து கொள்வீர்கள்.
கொஞ்சம் பெரிய பதிவு பொறுமையாக படித்தால் இந்த அரசியல்வாதிகள் உங்களை எவ்வளவு முட்டாள்களாக்கி உள்ளனர் என்று புரியும். இது குறித்து நியாயமான கேள்விகள் இருந்தால் கேளுங்கள். தெரிந்தவரை பதில் சொல்கிறேன்.
National Education Policy (NEP) புதிய கல்வி கொள்கை
NEP முதல் முறையாக உருவாக்கப்படுகிறதா?
இல்லை, இதுவரை 3 முறை சுதந்திரத்திற்கு பின் கல்வி கொள்கை மாற்றப்பட்டுள்ளது. இது 4வது முயற்சி. 2015லிருந்து இதற்கான முயற்சி எடுக்கப்பட்டு வல்லுனர்களை தேர்ந்தெடுக்கும் பணி நடைபெற்றது.
1968 – இலவச கட்டாய கல்வி, கல்வி கற்ற ஆசிரியர்கள், மும்மொழிக் கொள்கை, 10+2+3 கல்வி முறை
1986 – 1968 முறையை சீராய்வு செய்தல், கணினி அறுமுகம், அரசு சாரா நிறுவனங்களுக்கு கல்வி அளிக்கும் உரிமை
1992 – 1986 திட்டங்களை சீராய்வு செய்தல் மற்றும் மேம்படுத்தல்
2017 – உலக மாற்றங்கள், உள்ளூர் முன்னேற்றங்களுக்கேற்ப நவீன கல்வி முறைக்கு மாறுதல்
http://www.indiaeducation.net/indiaedudestination/policy/education-policy.aspx
2017 NEP தயாரிக்கும் குழுவினர் யார்?
கஸ்தூரி ரங்கன். (தலைவர்)
9 வருடம் ISRO சேர்மேனாக இருந்தவர், இராஜஸ்தான், கர்நாடகா மற்றும் JNU யுனிவர்சிடியின் சான்சிலராக இருந்தவர். பத்மஸ்ரீ 1982, பத்ம பூஷன் 1992, பத்ம விபூஷன் 2000 என மூன்று விருதுகளை வாங்கியவர். 16 பல்கலை கழகங்களில் பல்வேறு ஆராய்ச்சிகளுக்காக டாக்டர் பட்டம் பெற்றவர். கல்வி, ஆராய்ச்சி, விண்வெளி பற்றி பல்வேறு கட்டுரைகளை எழுதி உலக அளவில் புகழ் பெற்றவர்.
Dr அல்போன்ஸ் – கோட்டயம் மற்றும் எர்ணாகுளம் பகுதியில் 100% கல்வியறிவு பெற காரணமாயிருந்தவர்.
Dr மஞ்சுள் பார்கவ் – ப்ரின்ஸ்டன் USA பல்கலைகழக கணித ஆராய்ச்சியாளர். Gauss Number theory 26 வயதில் கண்டுபிடித்தவர்.
Dr ராம்ஷங்கர் குறேல் – அம்பேதகர் பல்கலைகழக சேன்சிலர். இவருடைய கல்வி ஆராய்ச்சி கட்டுரைகள் உலக புகழ் பெற்றவை
Dr டி வி கட்டிமணி - பல்மொழி வல்லுனர்- சுமார் 40 புத்தகங்கள் வெவ்வேறு மொழியில் கல்விதுறைக்காக எழுதியவர்.
Dr மஜார் ஆசிஃப் – குவஹாட்டி மற்றும் பல பல்கலைகழக சேன்சிலர், பெர்ஷியன்-அஸாமி-ஹிந்தி-ஆங்கில டிக்ஷனரி உருவாக்கியவர்.
Dr ஸ்ரீதர் – உடல் ஊனமுற்றோர் மற்றும் கண்பார்வை இழந்தவர்களுக்காக புத்தகங்கள் தயாரிப்பவர்.
கிருஷ்ண மோகன் – 2002ல் சர்வ சிக்ஷ அபியானை வடிவமைக்க காரணமாக இருந்தவர்.
https://www.iaspreparationonline.com/kasturi-rangan-committee-national-education-policy/
https://timesofindia.indiatimes.com/india/weve-been-careful-radical-with-nep-kasturirangan/articleshow/69625962.cms
2017 NEP எவ்வாறு தயாரிக்கப்பட்டது?
சுமார் 2 ஆண்டுகாலம் பல மாநில கல்வியாளர்கள், அதிகாரிகள், வல்லுனர்கள், பள்ளிகள், பள்ளி ஆசிரியர்கள், வெவ்வேறு வகுப்பு குழந்தைகள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் முதலியவற்றை தொடர்பு கொண்டு விவரங்கள் அவர்களின் எதிர்பார்ப்புகள் திரட்டப்பட்டன. அவற்றின் மூலம் அரசு என்ன செய்யவேண்டும் என்ற ஒரு திட்டஅறிக்கை அல்லது பரிந்துரை தயாரிக்கப்பட்டு சமர்பிக்கப் பட்டது.
வரும் 20-30 ஆண்டுகள் அரசின் கல்வி கொள்கை செல்வதற்கான இலக்கு முன்வரைவு என்று சொல்லலாம். சுமார் 2 ஆண்டுகள் தொடர்ந்து நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் இந்த குழு உறுப்பினர்கள் தொடர்பு கொண்டு கேட்டறிந்தனர். இவை அனைத்தும் சரிபார்க்கப்பட்டு, நாடு முழுவதுக்குமான பொது நிர்வாகம் மற்றும் இலக்குகள் கண்டறியப்பட்டு, தொகுக்கப்பட்டன. நாடு முழுவதுமிருந்து சுமார் 1,40,000 பரிந்துரைகள் பெறப்பட்டு, இவை தயாரிக்கப்பட்டன.
இது உடனடியாக அமலுக்கு வருமா?
இல்லை. இது ஒரு பரிந்துரை, இதனை அரசு குறிப்பிட்ட இலாகாக்களுடன், மந்திரிகளுடனும் விவாதிக்கும். பிறகு மீண்டும் ஒரு வரைவு தயாரிக்கப்பட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் விவாதிக்கப்படும். ஒருமித்த கருத்து ஏற்படும் வரை திருத்தம் மற்றும் விவாதம் தொடரும்.
பிறகு இவை மாநிலங்களின் பரிசீலனைக்கு அனுப்பப் படும். மாநிலங்கள் கூறும் பரிந்துரைகள் மீண்டும் இரு அவைகளுக்கும் சமர்பிக்கப்படும். ஒப்புதல் கிடைத்தப்பின்னர் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப் படும். பிறகு சட்டமாக நிறைவற்றப்பட்டு, கண்கானிக்கப்படும். மேலும் திருத்தங்கள் தேவைப்படும்போது மீண்டும் இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டு, திருத்தங்கள் நிறைவேற்றப்படும்.
2017 NEP பரிந்துரைகள் என்ன?
1) MHRD எனும் அமைச்சகம் இனி MoE கல்வி துறை அமைச்சகம் என்றழைக்கப்பட வேண்டும்.
2) பள்ளிகள் ப்ரீகேஜி எனப்படும் வகுப்புகள் துவங்கப்பட வேண்டும்.
3) கல்வி பெறும் உரிமை 3 வயது கடந்த 18 வயதுக்குள்ளான அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாயமாக்கப் படவேண்டும்.
4) 10+2+3 என்பதை மாற்றி அமைத்து 5+3+3+4 என்ற முறையில் அமைக்கப்பட வேண்டும்.
5) பாடங்கள் குறித்த சுமை குறைக்கப் படவேண்டும்.
6) வாழ்வியல் சார் பாடங்கள், துணை பாடங்கள், மற்ற பாடங்கள் என்பதில்லாமல் அனைத்துமே பாடதிட்டங்களாக கருதப்படவேண்டும். உதாரணமாக ஓவியம், இசை, விளையாட்டு என்பதையும் ஒருவர் பாடதிட்டமாக கொண்டு மதிப்பெண் பெற வழிவகை செய்யவேண்டும்.
7) தனியா ஆசிரியர் பயிற்சி நிலையங்கள் போன்றவை நிரந்தரமாக மூடிவிடுதல், இனி ஆசிரியர் கல்லூரியில் பயிற்சி பெற்றவர்களுக்கே ஆசிரியர் வேலை வாய்ப்பு. ஆசிரியர் பயிற்சி பல்கலை கழகங்கள் மாநிலம் தோறும் அமைத்தல்.
8) ஆசிரியர் பணியில் வாழ்க்கை கல்வி, வருங்கால உலகத்திற்கான கல்வி தரத்திற்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
9) 4 வருட B.Ed. ஆசிரியர் பணிக்கான அடிப்படை தகுதியாக அறிவித்தல்.
10) உயர்கல்வி ஆராய்ச்சி, புதிய முயற்சிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் மாற்றி அமைத்தல்.
11) ராஷ்ட்ரீய சிக்ஷா ஆயோக் என்ற அமைப்பை நிறுவி மாநில மத்ய கல்வி தரத்திற்கு இடையிலான வேறுபாடுகளை களைதல், ஒருங்கிணைத்தல்
12) தேசிய கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தை அமைத்து காலத்திற்கேற்ப கல்வி முறைகளை மாற்றியமைத்தல்.
13) தேசிய உயர்கல்வி ஒழுங்குமுறை ஆணையம் அமைத்து நிதி பங்கீடு, அனுமதியளித்தல், கட்டுபடுத்தல், அரசின் கட்டுபாடின்றி, தன்னிச்சையாக செயல்படும் ஆணையமாக இயங்குதல்.
14) தனியார் மற்றும் அரசு பள்ளி, கல்லூரிகளை இணையாக மதித்தல்
15) தனியார் நடத்தும் கல்லூரி, பள்ளிகள் இலாபத்திற்க்காக இல்லாததை உறுதி செய்தல்.
16) மொழி, இன, பாலின வேறுபாடின்றி அனைவருக்கும் தரமான கல்வி வழங்குவதை உறுதி செய்தல்
17) இந்திய மொழிகளை ஊக்கிவித்தல், பாலி, பெர்சியன், ப்ராக்ரித் மொழிகளுக்காக புதிய கல்வி ஆராய்ச்சி நிறுவனங்கள் அமைத்தல்.
18) மொழிபெயர்ப்பு, மற்றும் அனைத்து மொழிகளுக்கான விளக்க உரைகள் தயாரிக்க தனி நிறுவனம் அமைத்தல்.
மேலே குறிப்பிட்டுள்ளவற்றில் இப்போது நடைபெறும் இந்தி எதிர்ப்பு போராட்டம் சம்மந்தமாக எதுவும் இல்லையே. பிறகு எதற்கு இத்தனை அனல் பறக்கிறது?
பாயிண்ட் நெ 17 இதற்கு காரணம். இதன் விளக்கத்தில் இந்தியா முழுவதும் மும்மொழி கொள்கையை அமலாக்கம் செய்வது தொடர்பாக ஒரு திட்டம் வருகிறது.
அதன்படி, எல்லா குழந்தைகளும் 8ஆம் வகுப்பு வரை தாய்மொழி, ஆங்கிலம் மற்றுமோர் இந்திய மொழியை கற்க வசதிகள் கொடுக்கும் திட்டம் உள்ளது. இதனை தவறாக இந்தி திணிப்பு என்று சிலர் படித்திருக்கலாம்.
ஆனால் மும்மொழி கொள்கை என்பது குழந்தைகளுக்கு மேலும் துன்பம இல்லையா?
1) அறிவியல் ஆராய்ச்சிகளின் படி 3-8 வயது குழந்தை எந்த மொழியையும் சிரமமின்றி விளையாட்டாக புரிந்து கொள்ளும். இது இந்தியா மட்டுமல்ல உலக அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. மேலும் இதில் பாஸாகியே ஆகவேண்டும் என்ற கட்டாயமில்லை.
2) உதாரணமாக தமிழ்நாட்டை எடுத்து கொள்வோம். இங்கு தமிழர்கள் மட்டும் வசிக்கவில்லை. தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, குஜராத்தி என பல்வேறு மக்கள் வசிக்கின்றனர். இன்னொரு மொழியை அறிமுகப் படுத்துவதால் இவர்கள் பெரும்பாலும் தங்கள் தாய்மொழியை தேர்ந்தெடுப்பார்கள். இதற்க்காக எல்லா இடத்திலும் மிகச் சிறந்த ஆசிரியர்கள் தேவை இருக்காது. இவர்கள் பெற்றோர்களே இந்த பணியை செவ்வென செய்துவிடுவார்கள்.
3) இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் வட இந்தியாவில் வசிக்கும் உண்மையான தமிழர்கள் 3வது மொழியாக தமிழை எடுத்து படிக்க முடியும். இப்போதும் தமிழ் சங்கங்கள் இந்த பணியை செய்கின்றன. இவர்களே பள்ளிகளில் ஆசிரியர்கள் கொடுத்து உதவ முடியும். மேலும் இன்று தமிழே அல்லது தாய்மோழி தெரியாமல் (அதிகபட்சம் பேச மட்டும்) வட இந்தியாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளக் குழந்தைகள் வளர்கின்றனர். இதுவும் மாறும்.
4) இன்னொரு மொழி சேர்வதால் தமிழகத்தில் மட்டும் வெவ்வேறு மொழி தெரிந்த ஆசிரியர்கள் சுமார் 1,00,000 பேருக்கு அதிகமானோர்க்கு வாய்ப்பு கிடைக்கும். நாடு முழுவதும் யோசித்து பாருங்கள்.
5) இந்த மொழிகளுக்கான சிறுவர் புத்தகங்கள், கவிதைகள் இப்போது அந்தந்த மாநிலத்தில் மட்டுமே விற்பனையாகிறது. இனி அது பரவலாக நாடு முழுவதும் விற்பனையாகும்.
6) திருக்குறள் போன்ற பல நல்ல புத்தகங்களை தமிழரை தவிர மற்றவரும் அறிவர். குறிப்பாக தமிழகத்துக்கு வெளியே உள்ள தமிழர்களும் அறிவார்கள்.
7) ஒரு உதாரணமாக கர்நாடக எல்லையோர கிராமத்தில் வசிப்பவர்கள் கன்னடம் படிப்பதன் மூலம் அருகில் உள்ள கர்நாடக மாநில தொழிற்சாலைகளில் எளிதாக வேலை செய்யலாம். மும்பையில் விற்பனை துறையில் செல்லும் இளைஞன் சிறு வயதில் குஜராத்தியோ இராஜஸ்தானியோ கற்பதன் மூலம் தன்னுடைய விற்பனையை அதிகரிக்கலாம்.
8) இன்று தமிழகத்தில் உட்கார்ந்து கொண்டு வட இந்தியர்கள் முட்டாள்கள், படிக்காதவர்கள் என்று நாமும், தமிழர்கள் மூர்க்கர்கள், அறிவில்லாமல் தேசத்திற்கு எதிராக உள்ளனர் என்று அவர்களும் நினைக்கும் இந்த எண்ணங்கள் மறையும்.
9) முக்கியமாக இதை வைத்து ஏமாற்றி கபட நாடகம் ஆடி முன்னேறாமல் தடுக்கும் கட்சிகளின் சாயம் வெளுக்கும்.
யோசித்து பாருங்கள்.








