குதறிய நாய்கள்... கதறிய கர்ப்பிணி குரங்கு... ஆசிரியரின் 4 மணி நேர போராட்டம் : - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2019| HEALTH TIPS |TNTET 2019:

Home Top Ad
Post Top Ad

Join Our Kalvikural Telegram Group - Click Here

Monday, 14 October 2019

குதறிய நாய்கள்... கதறிய கர்ப்பிணி குரங்கு... ஆசிரியரின் 4 மணி நேர போராட்டம் :


சகமனிதர்கள் சாலையில் அடிபட்டுக் கிடந்தால்கூட முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டு விரைந்து ஓடும் சமூகம் இது. இச்சூழலில் நாய்கள் கடித்துக் குதறிய ஒரு கர்ப்பிணிக் குரங்கை நான்கு மணி நேரம் கடும் போராட்டத்துக்குப்பின் மீட்டு அதை ஒருவர் மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்த சம்பவம் புதுக்கோட்டையில் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.
புதுக்கோட்டை எல்.ஐ.சி அலுவலகத்துக்குப் பின்புறம் அமைந்துள்ளது அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளி. இப்பள்ளியின் எதிரே உள்ள மரங்களில் எப்போதும் குரங்குகள் கூட்டமாய் அமர்ந்திருப்பது வழக்கம். அப்படித்தான் அக்டோபர் 10-ம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் ஏராளமான குரங்குகள் மரங்களில் உட்கார்ந்திருக்கின்றன. அப்போது அங்குள்ள மூன்று நாய்கள் ஒன்றுகூடி கர்ப்பம் சுமந்த பெண் குரங்கு ஒன்றை கடித்துக் குதறி இருக்கின்றன. அடிவயிறு முழுவதும் ரத்தம் சொட்டச் சொட்ட உயிருக்கு ஆபத்தான நிலையில், அந்தக் குரங்கு மரத்தில் ஏறி ஓடி ஒளிந்திருக்கிறது. சக குரங்குகள் அந்தக் குரங்கைச் சுற்றி பரிதாபத்துடன் பார்த்துக் கொண்டிருந்திருக்கின்றன. கடிபட்ட குரங்கோ வலியில் துடியாய் துடித்திருக்கிறது.
இதைக்கண்ட அப்பள்ளி மாணவர்கள் தங்களுடைய உடற்கல்வி ஆசிரியர் முத்துராமலிங்கத்திடம் ஓடிப்போய்த் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். அவரும் இத்தகவலைக் கேட்டு ஓடி வந்திருக்கிறார். கடிபட்ட பெண் குரங்கின் நிலைமை மிகவும் பரிதாபமாய் இருந்திருக்கிறது. கடிபட்ட குரங்கைச் சுற்றிலும் 30-க்கும் மேற்பட்ட குரங்குகள் சூழ்ந்து இருந்திருக்கின்றன. இருந்தும் எப்படியாவது அந்தக் குரங்கைக் காப்பாற்றி சிகிச்சை அளித்தே தீருவது என்ற முடிவுடன் களத்தில் இறங்கி இருக்கிறார் முத்துராமலிங்கம். அவர் அடுத்து நடந்தவைகளை அந்த படபடப்பு நிமிடங்கள் குறையாமல் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

``எங்க ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸ் ஓடிவந்து இந்தத் தகவலைச் சொன்னாங்க. நானும் உடனே ஓடிவந்து பார்த்தேன். அந்தக் குரங்கோட அடிவயிறை நாய்கள் கடிச்சதுல ரத்தம் கொட்டுச்சு. அந்தக் குரங்கைச் சுத்தி முப்பது நாற்பது குரங்குகள் வேற. நான் அதுக்கிட்டே போகவே பயம். இருந்தும் இந்த ஜீவனை எப்படியாவது காப்பாத்தி ட்ரீட்மென்ட் கொடுக்கணும்னு ஒரு வைராக்கியம். எனக்கு இந்த மாதிரியான வாயில்லா ஜீவன்கள் மீது எப்போதுமே தனிப்பட்ட பிரியம் உண்டு. இந்த மாதிரி மிருகங்கள் வாகனங்களில் அடிபட்டும், மத்த மிருகங்களால் கடிபட்டும் இதுக படுற கஷ்டத்தை ஒரு தடவை நான் வாட்ஸ்அப்பிலே பார்த்தேன். அதிலே இருந்து இந்த மாதிரி நிலைமையிலே உள்ள உயிரினங்களை எப்படியும் காப்பாத்தணுங்கிற ஒரு வேட்கை என்னோட மனசிலே ரொம்ப நாளா இருந்துச்சு.
மனசிலே இருந்த அந்த புரிதலும் உணர்வும்தான் என்னை இதுலே தீவிரமா இயங்க வைச்சுச்சு. இந்த மனநிலையோட நான் மெதுவா அந்தக் குரங்கு இருந்த மரத்திலே ஏறி அது பக்கத்துலே போனேன். எல்லாக் குரங்குகளும் முறைச்சுப் பார்த்துட்டு தள்ளி ஓடிபோச்சுங்க. இதுமட்டும் நடக்கக்கூட தெம்பில்லாம பரிதாபமா என்னைப் பார்த்துச்சு. இருந்தும் அதுக்கிட்டே போக எனக்குப் பயம். நான் எதுக்கு வந்திருக்கேன்னு அதுக்கு தெரியாது. அதோட கடிச்சது ஒருவேளை வெறி நாய்களா இருந்தா என்ன செய்யுறதுனு எனக்கு கூடுதல் பயம் வேற.

சரி என்ன நடந்தாலும் அதைக் காப்பாத்தாம விடக்கூடாதுனு ஒரு முடிவோட இருந்தேன். ஒருத்தரை ஓடிப்போய் வாழைப்பழமும், தண்ணீர் பாட்டிலும் வாங்கிட்டு வரச்சொன்னேன். மொதல்லே வாழைப்பழத்தைக் கொடுத்தேன். வாங்கிக்கிச்சு. இப்போ அதுக்கு பக்கமா நெருங்கிட்டேன். அடுத்து ஒரு கிளாஸ்லே தண்ணீ ஊத்திக் கொடுத்தேன். அதையும் குடிச்சிச்சு. நான் அதோட முதுகை மெதுவா தடவிக் கொடுத்தேன். என்னைப் பரிதாபமா பார்த்துச்சு.. தொடர்ந்து நாலைஞ்சு வாழைப்பழம் சாப்பிட்டுச்சு. தண்ணியும் குடிச்சிச்சு. மத்த குரங்குகள் எல்லாம் என்னை உத்துப் பார்த்துதுங்க..
என்ன செய்யப்போறேன்னு அதுகளுக்கு ஆச்சர்யம். அந்தக் கடிபட்ட குரங்கை காப்பத்துறதுக்காக கால்நடைத்துறை டாக்டர்கள்கிட்டே கொண்டு போகலாம்னு முடிவு செஞ்சேன். கால்நடைத்துறை டாக்டரும் ஸ்பாட்டுக்கு வந்து பார்த்திட்டுப் போனாரு. இதுக்குள்ளே நிறைய பேர் இங்கே கூடிட்டாங்க. என்னோட நண்பர்களுக்கும் தகவல் கொடுத்தேன்,
ஆனால், இதை எப்படி பிடிச்சுக் கொண்டு போறதுனு பயம். இதுக்கிடையிலே மத்த எல்லாக் குரங்குகளும் பக்கத்துலே வர ஆரம்பிச்சிடுச்சு. நான் உடனே மரத்தைவிட்டு இறங்கி கீழே வந்துட்டேன். மத்த எல்லாக் குரங்குகளும் அது பக்கத்துலே போய் உட்கார்ந்திருச்சுங்க. ஒரு பெரிய குரங்கு மட்டும் கடிபட்ட குரங்குக்கு அனுசரணையா வந்து முத்தம் கொடுத்துச்சு. நேரம் ஆக ஆக அந்தக் குரங்கு ரொம்ப சோர்வடைஞ்சிருச்சு. ரத்தம் வேற கொட்டிக்கிட்டு இருக்கு. சரின்னு மறுபடியும் மரத்துலே ஏறி அதுக்கு பக்கத்துலே போனேன். அப்பவும் மத்த குரங்குங்க எல்லாம் என்னை முறைச்சுப் பார்த்து சீறுச்சுங்க. இருந்தும் நான் அதுங்களை விரட்டிட்டு பக்கத்துலே போனேன். மறுபடியும் தண்ணீர் கொடுத்து குடிக்க வைச்சேன். பிடிச்சி சாக்குப் பையிலே போடலாம்னு நினைச்சா இது என்னை கடிக்க வந்திடுச்சு. நான் கொஞ்சம் தள்ளி வந்து மறுபடியும் வாழைப்பழம் கொடுத்தேன். கொஞ்சம் அமைதியா என்னைப் பார்த்துச்சு.
இதை நம்ம கை வைச்சு பிடிக்க முடியாதுனு முடிவுக்கு வந்துட்டேன். அப்புறம் வனத்துறையிலே இருக்கிற என்னோட நண்பர் ராஜ்குமாருக்கு தகவல் கொடுத்தேன். அவரும் அவங்க டிபார்ட்மென்ட் சங்கரும் இதைப் பிடிக்கக்கூடிய உபகரணங்கள், வலை, சாக்குப் பை எல்லாம் கொண்டு வந்தாங்க. அதை வைச்சு லாவகமா பிடிச்சோம். சாக்குப் பையிலே போட்டு கால்நடைத்துறை மருத்துவர்க்கிட்டே கொண்டுபோய் ஊசி மருந்து எல்லாம் போட வைச்சோம். இப்போ அந்த குரங்கு தெளிவா இருக்கு. இந்த வேலை உடனே முடிஞ்சிடலை. கிட்டத்தட்ட நாலு மணி நேரம் ஆச்சு. இதைக் காப்பாத்தின பிறகுதான் எனக்கு நிம்மதியே வந்துச்சு. உயிருக்குப் போராடிய ஒரு வாயில்லா ஜீவனைக் காப்பாத்துன சந்தோஷத்தோட இன்னைக்கு நான் தூங்குவேன்.

என் வாழ்க்கையிலே இன்னைக்கு எனக்குப் பெரிய மகிழ்ச்சியான நாள். நாம காடுகளை அழிச்சதாலே காட்டிலிருந்த விலங்குகள் எல்லாம் நம்மை தேடி வந்திருச்சுங்க.. அதுங்களுக்கு இந்த மாதிரி துன்பம் வரும்போது நாம காப்பாத்தாமல் வேற யார் அதுங்களை காப்பத்துறது..?” என பெருமிதத்துடன் கூறுகிறார் உடற்கல்வி ஆசிரியர் முத்துராமலிங்கம்.
பளுதூக்கும் போட்டிகளுக்கும் பயிற்சி அளித்து வரும் முத்துராமலிங்கம் தமிழக காவல் துறையில் காவலர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் தேர்வுக்கு ஆண்டுதோறும் ஏராளமானோருக்கு இலவசப் பயிற்சியும் அளித்து வருகிறார். தற்போதுகூட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் இவரிடம் காவலர் தேர்வுக்காக இலவசப் பயிற்சி பெற்று வருகின்றனர். கடந்தாண்டு நடைபெற்ற தமிழக காவல் துறை தேர்வில் இவரிடம் பயிற்சி பெற்ற 24 பேர் காவலர்களாக தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் 2019-ம் ஆண்டின் காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனையான காவல்துறை உதவி ஆய்வாளர் அனுராதாவுக்கு பளுதூக்கும் பயிற்சி அளித்தவரும் இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ராமாயணத்தில் ராமருக்கு குரங்குகள் உதவின என்று கதையில் சொல்லப்படுகிறது. ஆனால், நாய்களிடம் கடிபட்ட குரங்கின் உயிரை முத்துராமலிங்கம் மீட்டுக் காப்பாற்றினார் என்பது நிஜம். மானுடம் வெல்லட்டும்…!
-பழ.அசோக்குமார்

No comments:

Post a comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.