பூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன ஆகும்?
பூமி சுற்றுவதால்தான் இரவு, பகல் ஏற்படுகிறது. பூமி சுற்றாமல்
நின்றுவிட்டால், பூமியின் ஒரு பகுதி எப்போதும் சூரியனைப் பார்த்தபடியே
இருக்கும். இன்னொரு பகுதி இருளாகவே காணப்படும். இரவே வராத பகுதியில்
வசிக்கும் உயிரினங்களின் உயிர்க் கடிகாரம் குழப்பமடையும். தொடர்ந்து
சூரியன் இருப்பதால் அந்தப் பகுதியில் வெப்பம் அதிகரிக்கும்.
நீர்நிலைகள் ஆவியாகிவிடும். இரவில் இரை தேடும் உயிரினங்கள் இரவு
வராமல் உணவுக்கு அல்லாடும். இரவு இருக்கும் பகுதியில் சூரிய ஒளி இல்லாததால்
தாவரங்களால் உணவு தயாரிக்க இயலாது. காலப்போக்கில் தாவரங்கள்
மடிந்துவிடும். தாவரங்கள் மடிந்துவிட்டால், அவற்றை நம்பியிருக்கும்
உயிரினங்களும் மடிந்துவிடும். குளிரும் பனியும் அதிகரிக்கும். நீர்நிலைகள்
உறைந்து போகும்.
பகலில் இரை தேடும் உயிரினங்கள் பட்டினி கிடக்கும். ஒரு கட்டத்தில்
பூமியே வாழத் தகுதியற்ற கோளாக மாறிவிடும். சூரியன் இல்லாவிட்டால் பூமி
இல்லை, பூமி சுற்றாவிட்டால் உயிரினங்கள் இல்லை.