வெளியில் வராதீர்கள். வீட்டிலேயே இருங்கள்- ஒரு நிமிடம் ஒதுக்கி படியிங்கள் மிக முக்கிய பதிவு :நீண்ட பதிவாக இருந்தாலும் ஆழமான உண்மை. - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


வெளியில் வராதீர்கள். வீட்டிலேயே இருங்கள்- ஒரு நிமிடம் ஒதுக்கி படியிங்கள் மிக முக்கிய பதிவு :நீண்ட பதிவாக இருந்தாலும் ஆழமான உண்மை.


வெளியில் வராதீர்கள். வீட்டிலேயே இருங்கள்- ஒரு நிமிடம் ஒதுக்கி படியிங்கள் மிக முக்கிய பதிவு . யாரையும் வீட்டுக்குள் விடாதீர்கள்’ - கற்பனையில் கூட இப்படி ஒரு சூழல் வருமென்று நாம் யாரும் நினைத்திருக்க முடியாது. சார்த்தர் எழுதிய ‘மீள முடியுமா?’ என்ற நூலில் ஒரு வரி வருகிறது - ‘நரகம் என்பது மற்றவர்கள்தான்.’
பொருளாதாரம் வீழ்ந்துவிட்டது. சொந்த நாட்டின் மக்கள் அகதிகள் போல நடந்தே ஊருக்குத் திரும்புகிறார்கள். வழியில் பசியால் நூற்றுக்கு மேற்பட்டோர் இறந்து போகிறார்கள். பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு மிகப்பெரிய இடப்பெயர்வு. உலகத்தையே தலைகீழாகக் கவிழ்த்தியது போல மாற்றங்கள் நிகழ்கின்றன. இன்னும் நாம் கற்பனையே செய்ய முடியாத அரசியல் மாற்றங்கள் உலகில் நிகழப்போகின்றன.
இந்த க‌ஷ்டகாலத்திலும் நிறைய நல்ல விஷயங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. நாயக பிம்பங்கள், வேஷங்கள், பொய்கள் எல்லாம் கலைகின்றன. கங்கை நதி குடிநீராக மாறுகிறது. சூழல் மாசு கட்டுக்குள் வந்திருக்கிறது. மதியம் கிளிகளின் சத்தம் கேட்கிறது. இந்த ஏப்ரல் மாத இரவில் சென்னை லேசாகக் குளிர்கிறது.

தீவிரமான நம்பிக்கைகள் கேள்விக்குள்ளாகின்றன. கடவுள் நம்பிக்கை கொண்ட ஒரு நண்பர் ‘கடவுள் இருக்கிறாரா என்ற சந்தேகம் வருகிறது‘ என்கிறார். ‘நீங்கள் எல்லாருமே திருடர்கள். எனவே யாரும் என்னைப் பார்க்க வராதீர்கள்’ என்று கடவுளே தன் வழிபாட்டுத்தலங்களைப் பூட்டச் சொல்லிவிட்டார் என்கிறார் ஒரு முதியவர்.

இனத்தின் பெயரால், மதத்தின் பெயரால், நாடுகளின் பெயரால், சாதிகளின் பெயரால் நாம் கொண்டிருந்த பெருமைகள் எதுவும் நம்மைக் காப்பாற்றாது. விஞ்ஞானத்திலும், மருத்துவத்திலும் நாம் செய்த கண்டுபிடிப்புகளையெல்லாம் பார்த்து இயற்கை புன்னகைக்கிறது. வல்லரசுகளே தடுமாறுகின்றன. தனித்திருப்பதைத் தவிர தப்பிக்கும் வழிகள் இல்லை.

இந்த வருடம் அமோகமாக இருக்கும் என்ற சோதிடக் கணிப்புகள்தான் இந்த வருடத்தின் சிறந்த நகைச்சுவை. முடியாது என்று நினைத்த விஷயங்களில் ஒன்று டாஸ்மாக்கை மூடுவது. இன்னொன்று தொலைக்காட்சித் தொடர்களை நிறுத்துவது. இரண்டுமே நடந்துவிட்டது. கவனித்துப் பார்த்தால் நம் இயல்புக்குப் பொருந்தாத எல்லாம் விடை பெறுகின்றன.

மண்டபங்கள் வரும் வரை நம் திருமணங்கள் வீட்டில் நடந்தன. இப்போது திருமணங்கள் எந்த புரோகிதமும் இல்லாமல் திரும்பவும் வீட்டுக்கே வந்துவிட்டன. கர்ப்பிணிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அத்தனை டெஸ்ட்டுகள், ஸ்கேன்கள் எடுக்க வேண்டுமென்பது கட்டாயம் என்று வலியுறுத்தும் மருத்துவர்கள் இப்போது அதெல்லாம் தேவையில்லை. வீட்டிலேயே இருங்கள் என்கிறார்கள். தொற்றுக்காகத் தவிர்க்கப்படுகிறது என்றாலும் தவிர்க்கப்படுவதால் ஒன்றும் ஆகாது என்ற உண்மையும் அதில் இருக்கிறது.

கிராமத்திலிருந்து வந்தவர்கள் கிராமத்துக்கே திரும்பிவிட்டார்கள். ‘மகன் வெளிநாட்டில் இருக்கிறான்’ என்று ஒருமாதம் முன்புவரை பெருமையாக இருந்த இந்த விஷயம் இப்போது பெருமையாக இல்லை. மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தீவிரமாகப் பேசிய வாய்கள் அனைத்தையும் மாஸ்க் மூடிவிட்டது. மதம் பற்றிப் பேசியவர்கள் மலேரியா மாத்திரை குறித்தும் கபசுரக் குடிநீர் குறித்தும் பேசுகிறார்கள்.

துறை சார்ந்து அறம் தவறியவர்களாகப் பார்க்கப்பட்ட மருத்துவர்களும் காவலர்களும்தான் உயிரைப்பணயம் வைத்து முன் வரிசையில் நிற்கிறார்கள். அவர்கள் அதிகம் வராத செய்திகளில் இப்போது அவர்கள் மட்டுமே இருக்கிறார்கள். தேசத்தைக் காப்பதாக எப்போதும் பேசும் அரசியல்வாதிகள் அந்தச் செய்திகளைப் பார்த்துக்கொண்டு வீட்டில் இருக்கிறார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்கள் சம்பளத்தில் முப்பது சதவிகிதம் கொடுத்தது செய்தியாகிறது. என்ன சம்பளம் என்று தெரியாத துப்புறவுத் தொழிலாளர்கள் வீடு வீடாகச் சென்று அழைப்பு மணி அடிக்கிறார்கள். வீட்டுக்குள்ளே இருந்து ஒரு குரல் கேட்கிறது. ‘யாரு?’ ‘குப்பை’. சமூக இடைவெளி மட்டும் எப்போதும் போல அப்படியேதான் இருக்கிறது.

ஸ்வீடனில் ஒருவர் தான் சேர்த்துவைத்த பணத்தை எல்லாம் வெளியில் வீசுகிறார். தெரு முழுக்கப் புரளும் பணத்தை எடுப்பதற்கு யாரும் இல்லை. உங்கள் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது? உங்களுக்கு எவ்வளவு பெரிய வீடு இருக்கிறது? நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருங்கள். பிரிட்டிஷ் பிரதமராக... ஹாலிவுட் நடிகராக... மருத்துவராகக் கூட இருங்கள். எதுவும் முக்கியம் இல்லை. உங்கள் உடலில் எவ்வளவு எதிர்ப்பு சக்தி இருக்கிறது என்பதுதான் முக்கியம்.

மதிப்புகள் அனைத்தும் மாறுகின்றன. பிரான்ஸில் 92 வயது மூதாட்டி நான் நன்றாக வாழ்ந்து விட்டேன்.போதும், அவரை வாழவையுங்கள் என்று தனக்குக் கொடுத்த வெண்டிலேட்டரை முப்பது வயது இளைஞருக்கு கொடுக்கச் சொல்லிவிட்டு நோயுடன் வீடு திரும்புகிறார். கண்கள் கலங்குகின்றன. வெண்டிலேட்டர் இல்லாத தேசத்தில் சொந்த மக்களைக் காப்பாற்றுவதற்காக எத்தனை அணு ஆயுதங்கள் யுத்த விமானங்கள்.

கைகளைச் சோப்புப் போட்டுக் கை கழுவுங்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம். நைஜீரியாவின் மக்கள் நெருக்கம் மிகுந்த லாகோஸ் நகரில் ஒருமுறை சோப்பு போட்டுக் கைகழுவுவதுகூட ஆடம்பரம் என்கிறது செய்தி.

1,400 கிலோமீட்டர் தனியாக இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து ஒரு தாய் நகரத்தில் இருக்கும் தன் மகனை சொந்த ஊருக்கு அழைத்து வருகிறார். 65 வயதுக் கணவர் வலியால் துடிக்கும் தன் மனைவியை சைக்கிளில் வைத்து அழுத்தி கும்பகோணத்திலிருந்து புதுச்சேரிக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார். ஒரு தாய் நல்லதங்காள் போல தன் ஐந்து குழந்தைகளை கங்கையில் வீசுகிறாள். இவையெல்லாம் வெறும் காட்சிகள் அல்ல. வரும் ஆண்டுகளுக்கான குறியீடுகள்.

பெரும்பாலான நாடுகள் மூத்த குடிமக்களை கைவிட்டு விட்டது. உடல் நலம் சரியில்லை என்றால் எங்களால் ஒன்றும் செய்ய இயலாது என்ற நிலைக்கு அரசுகள் வந்துவிட்டது என்றால் இனி என்ன நடக்கும். அழுத்தம் தாளாமல் குக்கர் வெடிப்பது போல பல நாடுகளில் புரட்சி வெடிக்கப்போகிறது என்கிறது ஓர் ஆங்கிலக் கட்டுரை. திருக்குறளின் 56ஆவது அத்தியாயத்தை ஒருமுறை படித்துப் பாருங்கள்.

“உணவுப் பொருட்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களை ஒழுங்காக உரிய நேரத்துக்குள் கையாளாமல் விட்டால் நாட்டில் பெரும் உணவுப்பஞ்சம் ஏற்படும். பஞ்சாபில் ஆயிரக்கணக்கான டன் கோதுமை அறுவடை செய்யப்படாமல் இருக்கிறது. அறுவடை செய்ய வேண்டுமெனில் பிகாரில் இருந்து தொழிலாளர்கள் வர வேண்டும். அறுவடை செய்ததை நிரப்ப மேற்கு வங்கத்தில் கோணிப்பை தொழிற்சாலை திறக்கப்பட வேண்டும். கோதுமை மூட்டைகளை நாடு எங்கும் கொண்டு செல்ல டிரக்குகள் வேண்டும். ஒரு டிரக் டிரைவர் நூறு ஊர்களைக் கடந்து செல்ல வேண்டும். எங்கெல்லாம் இறங்குவார்? தொற்று இருந்தால் என்ன நடக்கும்? ‘ஒன்றை ஒன்று வெகுவாகச் சார்ந்திருக்கும் இந்தியப் பொருளாதாரத்தில் உணவுப் பொருட்களைப் பாதுகாப்பாக அனுப்புவதுதான் எங்கள் முன் இருக்கும் மிகப்பெரிய சவால்’ என்கிறார் இந்தியக் குடிமையியல் அதிகாரி ஒருவர்.

உங்கள் வாழ்வில் நித்தியமானது மரணம் ஒன்றுதான். அதற்கு தயாராகாமல் நீங்கள் எதெதற்கோ தயாராகிறீர்களே ஏன்?’ என்று புத்தர் கேட்டதையே நோம் சாம்ஸ்கி ’பல வருடங்களாக கிருமி இருந்தும் மருந்து கண்டுபிடிக்காமல் அழகு க்ரீம்களைக் கண்டுபிடிப்பதில் ஏன் கவனம் செலுத்தினீர்கள்?’ என்று கேட்கிறார்.

இந்தக் கிருமியின் வளர்ச்சியைப் பற்றி உலகின் நவீன விஞ்ஞானமும், நவீன மருத்துவமும் யோசிக்காததன் காரணம் பல துறைகள் தனியார்வசம் போனதுதான் என்கிறது புள்ளிவிவரம். வாழ்வாதாரங்கள் இழந்து எல்லைகளில் நுழைகிற அகதிகளைக் கொன்று கொண்டிருந்தோம். இன்று எல்லைகள் அனைத்தும் கேலிக்குரியவனாகி விட்டன. அமெரிக்காவுக்கு வியட்நாம் மருந்து அனுப்புகிறது.

கதவில் இருக்கலாம். கைப்பிடியில் இருக்கலாம். செய்தித் தாளில் இருக்கலாம். பால் பாக்கெட்டில் இருக்கலாம். தும்மினால் மூன்று மணி நேரம் காற்றில் இருக்கலாம். ஒருமுறை இதன் சுற்று முடிந்தாலும் ஆறு மாதங்களில் இதன் மறு சுற்று ஆரம்பிக்கலாம். வதந்திகளும் செய்திகளும் கிருமியைவிட வேகமாகப் பரவுகின்றன. தொலைக்காட்சிக்கு நாள் முழுக்க பிரேக்கிங் நியூஸ். திகில் படத்துக்கான இசையுடன் மனிதர்கள் இறந்த செய்திகள்.

நல்ல வேளையாக இது பறவைகள் மூலம் பரவவில்லை. பறவைகள் மூலம் பரவினால் மனித குலம் பிழைத்திருப்பது கடினம் என்கிறார் ஒரு மருத்துவர். இப்போது வௌவால் மூலமும் பரவும் என்கிறார்கள். அமேசான் காட்டில் வசிக்கும் யனோமாமி பழங்குடியினருக்கும் தொற்று பரவிவிட்டது என்கிறது ஒரு செய்தி.

மருந்தில்லா கிருமிக்குப் பயந்து ஒட்டுமொத்த மனிதகுலமும் பயத்தில் இருக்கிறது. இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்? வீட்டில் இருக்க வேண்டும். சீன அரசு எல்லாமே தந்தது. வீட்டுக்குள் இருந்தார்கள். இங்கு கூட்டம் கூட்டமாக வெளியில் வருகிறார்களே ஏன்? கிருமியை விடவும் பசியும் வேலையின்மையும் கொடுமையானது. கட்டுப்பாடுகளைக் கடுமையாகப் பின்பற்றிய சீனாவில் டிசம்பரில் தொடங்கிய ஊரடங்கை ஏப்ரலில்தான் தளர்த்தினார்கள். எனில் கடைவீதிகளில் கூட்டம் கூட்டமாக மக்கள் அலைமோதும் நம் தேசத்தில் இந்தத் தொற்று கட்டுக்குள் வர எத்தனை மாதங்கள் ஆகும்?

ஒரு நாள். பிறகு 21. பிறகு 19. பிறகு? இது தொடரும் நிலையில் என்னென்ன நூல்கள் படிக்கலாம், என்னென்ன திரைப்படம் பார்க்கலாம் என்று சமூக ஊடகங்களில் வருகிற பொழுதுபோக்குத் திட்டங்கள் எல்லாம் அர்த்தமற்றுப்போகும். முதல் வாரத்தில் கணவர்கள் படும் அவஸ்தைகள் குறித்து வந்த மீம்ஸ்கள் இப்போது குறைந்து விட்டன. குடும்ப வன்முறையும், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையும் குறித்த செய்திகள் அதிகம் வரத் தொடங்குகின்றன.

அடுத்த அத்தியாயத்தை இயற்கை எழுதிக் கொண்டிருக்கிறது. ‘ஆட்கள் வேலை செய்கிறார்கள். மாற்றுப் பாதையில் செல்க’ என்ற அறிவிப்பு சாலையில் இருப்பதைப்போல ‘இயற்கை வேலை செய்கிறது. நாம் மாற்று வழிகளை யோசிக்க வேண்டும். பரிணாம விதிகளில் பொருந்திப் பிழைத்திருக்கும் விதமாக வரும் ஆண்டுகளில் எல்லாமே மாறப்போகிறது என்பது மட்டும் சூசகமாகத் தெரிகிறது.

அச்சு ஊடகங்கள் விடை பெறலாம். மக்கள் கூடுகிற வழிபாட்டுத்தலங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் இன்னும் பல மாதங்களுக்கு மூடி இருக்கும் நிலை வரலாம்.

இதெல்லாம் முடிவுக்கு வரும்போது முதல் இரண்டு இடங்களுக்கு மக்கள் ஆர்வமாகத் திரும்புவார்கள். ஏனெனில் இந்த இரண்டு இடங்களிலும் மனித இடைவெளி சாத்தியம். மூன்றாவதான திரையரங்கு என்னாகும்? யாருமே காப்பாற்ற முடியாது என்ற நிலையில் பயத்துடன் இருந்தவர்களுக்கு அனைவரையும் காப்பாற்றும் நாயகர்களின் படங்கள் என்ன பொருள் தரும்? இணைய தளங்கள் வழியாக இத்தனை வாரங்கள் படங்கள் பார்த்துப் பழகியவர்கள் திரையரங்குக்குத் திரும்புவார்களா?

இரண்டாம் உலகப்போர் பற்றிய திரைப்படங்களைப் பார்க்கும்போது ‘அத்தியாவசியமான பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து உடனே வெளியேறுங்கள்’ என்று ஒரு அறிவிப்பு வரும். அதற்கு இணையான சூழல்தான் இப்போதும். முரண் என்னவெனில் அத்தியாவசியத்தோடு வீட்டுக்குள் இருங்கள் என்பதுதான். அன்றாட வாழ்க்கைக்கு எது தேவை, எது தேவையில்லை என்பதை இயற்கை முன் மொழிந்துவிட்டது. தொழில்நுட்பம் அதை வழிமொழியப்போகிறது.

சமீப வருடங்களில் நுகர்வுக் கலாச்சாரத்துக்கு எதிராக மினிமலிஸம் என்ற ஒரு கருத்து உலகம் முழுக்கப் பரவி வருகிறது. ‘கடந்த ஒரு வருடத்தில் எதை நீங்கள் பயன்படுத்தவில்லையோ அது உங்களுக்கு எப்போதும் பயன்படாது. எனவே அதைத் தூக்கி எறியுங்கள். பொருட்களைத் துடைக்க, பொருட்களை ஒழுங்கு செய்ய என்று உங்கள் ஆயுளை பொருட்களிடம் செலவழிக்காதீர்கள்’ என்பதுதான் அந்தக் கோட்பாடு. ‘சிறுகக் கட்டி பெருக வாழ்’ என்று தமிழில் சொல்லப்பட்ட விஷயம்தான்.

இந்த மாதத்தில் எங்கள் வீட்டில் ஒரு பிறந்தநாள் வந்தது. நண்பர்களை அழைத்து, கேக் வெட்டி கொண்டாட்டமாக நடத்துவது சாத்தியமில்லை என்பதால் குழந்தைகள் வாழ்த்து அட்டையைக் கைகளால் வரைந்தார்கள். கேக் இல்லை. கூடி அமர்ந்து கைதட்டி வாழ்த்துச் சொன்னோம். முந்தைய பிறந்தநாட்கள் எல்லாம் நிழற்படங்களாக ஹார்டு டிரைவில் இருக்கின்றன. இந்தப் பிறந்தநாள் முழு வாழ்க்கைக்கும் மனத்தில் இருக்கும்.

பிறரைப் பார்த்து பிரதியெடுத்த போலியான கொண்டாட்டங்கள் அனைத்தும் விடை பெறுகின்றன. குப்பை உணவுகள் போய் வீட்டுச் சமையலில் கீரையும், மிளகு ரசமும் வந்துவிட்டது. நாகரிகம் என்ற பெயரில் நாம் மறந்த மரபுகள் அனைத்தையும் ஒரு கிருமி நமக்குத் திருப்பித் தந்துவிட்டது.

இத்தனை நாளும் பணத்தின் பின்னால், அதிகாரத்தின் பின்னால் பெருமைகளின் பின்னால் நீங்கள் ஓடிக்கொண்டிருந்தால் உங்கள் சக்கரங்களை நிறுத்துங்கள். உங்கள் அருகில் ஒரு குடும்பம் இருக்கிறது. அதில் குழந்தைகள் இருக்கிறார்கள். உங்கள் ஓட்டம் இவர்களுக்காகத்தான் எனில் அவர்களின் உண்மையான தேவை என்ன?

வெளியேறுவது என்பது கதவின் வழியாக மட்டும் அல்ல ஒரு நூலின் வழியாக, சமூக ஊடகம் வழியாக, திரைப்படத்தின் வழியாகவும் வெளியேற முடியும். எனவே தனித்திரு என்பதை வள்ளலாரின் பொருளில், விழிப்புடன் இருங்கள் என்பதை ஜே.கிருஷ்ணமூர்த்தியின் பொருளில், விலகி இருங்கள் என்பதை ஓஷோவின் அர்த்தத்தில் யோசிக்கும்போது இந்தத் தனிமையின் அர்த்தம் என்ன?

எதிர்மறை உணர்வுகளும், பயமும், அவ நம்பிக்கையும் சூழ்ந்த இந்தக் கடினமான நாட்கள் சீக்கிரமே முடிந்துவிடும். இதுபோல பல நூறு தொற்றுக்களைப் பார்த்த மனிதகுலம் ஆரோக்கியமாக மீண்டு எழுந்து வரும். எனவே இது மாதிரியான தனிமை உங்கள் வாழ் நாளில் திரும்பவரப் போவதில்லை. எனவே தனித்திருங்கள். பல வருடங்கள் கழித்து இதையெல்லாம் நம் சந்ததியினருக்கு ஒரு கதையாகச் சொல்ல முடியும்.

தொற்று தொடங்கிய முதல் வாரத்தில் எதிர்வீட்டில் ஒன்று நடந்தது. ஆண்டன் செகவ் பார்த்திருந்தால் ‘பால் பாக்கெட்’ என்று ஒரு சிறுகதை எழுதி இருப்பார். பக்கத்து ஃப்ளாட்காரர் முகத்தில் துணியைக் கட்டிக்கொண்டு கதவில் இருக்கும் பால் பாக்கெட்டை கைபடாமல் ஒரு குச்சியின் உதவியால் எடுத்து எப்படி மஞ்சளும் உப்பும் கலந்த வாளியில் போட்டார் என்பதுதான் கதை. இதுபோல என் மனைவி இரண்டாவது மாடியிலிருந்து தக்காளி வாங்கிய கதையும் இருக்கிறது.

‘கடுமையான நெருக்கடிக்குள்தான் காமெடி இருக்கிறது’ என்று சாப்ளின் சொல்லுவார். நெருக்கடி மிகுந்த இந்த நாட்களை மன அழுத்தமில்லாமல் எளிதாகக் கடந்து வருவோம். இந்தச் சூழலில் நமக்குத்தேவை நம்பிக்கை. சக மனிதனுக்கு நம்பிக்கையையும் நம்மால் முடிந்ததையும் கொடுப்போம்.

ஸ்பார்டகஸ் நாடகத்தில் ‘மண்ணிலிருந்து வந்தேன். மண்ணுக்கே திரும்புகிறேன்’ என்று ஒரு வரிவரும். அதன் வெவ்வேறு அர்த்தங்களை யோசித்துப் பார்க்கிறேன். ‘நமக்கான உணவை நாமே உருவாக்கும் அளவுக்கு ஒரு தற்சார்புப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடிந்தால் போதும். எத்தகைய வீழ்ச்சியில் இருந்தும் நம்மால் மீண்டு எழுந்துவிட முடியும் என்கிற நம்மாழ்வாரின் இயற்கை விவசாயம் குறித்துப் படித்துக்கொண்டிருந்தேன்.

இந்தப் பேரிடரை முன்வைத்து தமிழரின் மரபு சார்ந்த வாழ்வை, விவசாயத்தை, மரபு சார்ந்த மருத்துவத்தை நாம் புதுப்பிக்க வேண்டும். நம் கலாச்சாரம் சார்ந்த எளிமையான வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும்.

தனித்திருப்போம். கைகளைக் கழுவிக்கொண்டே இருப்போம். ஏனெனில் நம் கைகளில் கண்களுக்குத் தெரியாத கிருமிகள் இருக்கிறதோ இல்லையோ பல வருடங்களாக நாம் கொன்ற இயற்கையின் ரத்தம் கறையாக இருக்கிறது.
3/3

கட்டுரையாளர் குறிப்பு :
செழியன், சர்வதேச விருதுகளும் தேசிய விருதும் பெற்ற திரைப்பட இயக்குனர், ஒளிப்பதிவாளர், எழுத்தாளர். உலக சினிமா தொகுதிகள் உள்ளிட்ட திரைப்படம், மேற்கத்திய இசை குறித்த இருபதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர்

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H