
கொரோனாவுக்கு எதிரான யுத்த களத்தில் நாமும் பங்கேற்போம்
கொரோனா, இன்று உலகுக்கு எதிராக ஒற்றை
ஆளாக நின்று மனித குலத்தையே அழிப்பதற்காக சவால் விடும் கண்ணுக்கு தெரியாத
வைரஸ், ஆம்! மனிதகுலம் இதுவரை சந்திக்காத ஒரு பேரழிவு. இந்த கிருமியை
அழிக்க எப்படியாவது மருந்து கண்டுபிடித்து விட வேண்டும் என்று மருத்துவ
விஞ்ஞானிகள் உலகம் முழுவதும் இரவு பகலாக ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆலோசனை
மருந்து கண்டுபிடிக்கும் வரை இந்த நோயை கட்டுக்குள் கொண்டு வருவது எப்படி?
என்று உலக நாடுகள் எல்லாம் ஆலோசனை நடத்திக் கொண்டு இருக்கின்றன. இந்த
வைரசானது தொற்றுநோய் என்பதால், ஒருவரை விட்டு ஒருவர் விலகி இருந்தால்
மட்டுமே நோயை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதை உலக நாடுகள் உணர்ந்தன.
அதன்பிறகுதான் அனைத்து நாடுகளும் ஊரடங்கு, அறிகுறி உள்ளவர்களை
தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரமாக கையாண்டு வருகிறது.
அதில் ஓரளவு வெற்றியும் கிடைத்துள்ளது. அரசு என்னதான் நடவடிக்கை
எடுத்தாலும் கொரோனா வைரசுக்கு எதிரான இந்த போரில் ஒவ்வொருவரும்
போர்வீரர்களாக தான் திகழ வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற முடியும்.
கலெக்டர் எச்சரிக்கை
குமரி மாவட்டத்தில் இந்த வைரசின் தாக்கம் ஓரளவு கட்டுக்குள் உள்ளது என்ற
சொல் நமக்குள் நிம்மதியை தந்தாலும், இனி பரவாது என்று கூற முடியாது என
கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறியதை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவும்
முடியாது. அந்த அளவுக்கு இந்த வைரஸ் வீரியம் மிக்கது. எனவே மத்திய- மாநில
அரசுகள், குமரி மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் கூறும்
விழிப்புணர்வு நடவடிக்கைகளை நிச்சயமாக மேற்கொண்டால் கொரோனா வைரசை விரட்டி
விடலாம்.
* தமிழக அரசு கூறுவது போல் விழித்திரு... விலகி இரு... வீட்டில் இரு... என்பதை நிச்சயமாக கடைபிடிக்க வேண்டும்.
* தங்களுக்கு தேவையான காய்கறிகள், மளிகை சாமான்கள் உள்ளிட்டவற்றை வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே வாங்க வேண்டும்.
* அப்படி பொருட்கள் வாங்க செல்லும் போது ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும். மற்றவர்கள் தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது.
முககவசம் கட்டாயம்
* வீட்டை விட்டு வெளியே வரும் நபர் மோட்டார் சைக்கிளிலோ, நடந்தோ செல்லும் போது கட்டாயம் முககவசம், கையுறை அணிய வேண்டும்.
* மோட்டார் சைக்கிளில் ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும்.
* பொருட்களை வாங்க சென்ற இடத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
நாம் மட்டும் அதனை செய்யாமல் மற்றவர்களையும் சமூக இடைவெளியை கடைபிடிக்க
சொல்ல வேண்டும்.
* அதேபோன்று வியாபாரிகள் பொருட்களை விற்பனை செய்யும் போது கையுறை, முககவசம்
கட்டாயம் அணிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் மக்களுக்காக அத்தியாவசிய
பொருட்களை விற்பனை செய்யும் நீங்கள், உங்களையும் பாதுகாத்து கொள்ள
முடியும்.
* கடைகளுக்கு வந்து விட்டு வீட்டுக்கு செல்லும் போது, கைகளை நன்றாக கழுவ
வேண்டும். முடிந்தால் உடல் முழுவதும் சோப்பு போட்டு குளித்து விட்டு
சென்றால் இன்னும் நல்லது.
விழிப்பாக இருங்கள்
* நோய் நம்மை தாக்காது என்று யாரும் அலட்சியமாக இருக்க கூடாது. நம்மை
அறியாமலே நம் மீது கொரோனா வைரஸ் தொற்றி இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே
ஒவ்வொருவரும் விழிப்பாக இருக்க வேண்டும்.
* வீட்டை விட்டு வெளியே வரும் நபர் விழிப்பாக இருந்தால் மட்டுமே நம்மையும்,
நம் குடும்பத்தையும், நம் நாட்டையும் கொரோனா பிடியில் இருந்து காப்பாற்ற
முடியும்.
எனவே அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் முழு ஒத்துழைப்பு கொடுத்து
கொரோனாவுக்கு எதிரான யுத்த களத்தில் நாமும் பங்கேற்போம்! கொரோனாவை
ஒழிப்போம்.