கொரோனாவின் ருத்ரதாண்டவம், சென்னையை புரட்டி எடுத்து வருகிறது. இதில், கோலிவுட்டின் மையமான கோடம்பாக்கம், வளசரவாக்கம், வடபழனி சுற்றுவட்டார பகுதிகளில், பாதிப்பு அதிகமாக உள்ளது.
இந்நிலையில், தமிழ் திரையுலகில் இயக்குனர்கள் மிஷ்கின், விக்னேஷ்சிவன், நடிகை நயன்தாரா போன்ற சிலர், கொரோனா அறிகுறியால், தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன் இயக்குனர் பாரதிராஜா, நடிகை ஸ்ருதிஹாசன், கமல் உள்ளிட்டோர் பாதுகாப்பு கருதி, தங்களை தாங்களே தனிமைப்படுத்தினர். எழும்பூரில் தனிமையில் இருப்பதாக கூறப்படும், நயன்தாரா சமீபத்தில் தான், 'மூக்குத்தி அம்மன்' படத்தில் நடித்து முடித்திருந்தார்.
சமீபத்தில் மறைந்த, ஏ.எல்.ராகவனும், முதலில் மாரடைப்பால் இறந்ததாக கூறினர். பின், கொரோனா தொற்று இருந்ததாக, இரவு தெரிவித்தனர். அவரது மனைவி எம்.என்.ராஜத்திற்கும், கொரோனா தொற்று உறுதியாகி, சிகிச்சை பெற்று வருகிறார்.
அதேபோல, இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் சமீபத்தில் பதிவிட்ட, 'வாட்ஸ்- ஆப்' பதிவில், 'நிறைய பேர் கொரோனா தொற்றால் பாதித்து, பல லட்சம் ரூபாய் செலவழித்து, சிகிச்சை பெறுகின்றனர். இல்லாதவர்களின் நிலை சிரமமாக உள்ளது. அதனால், அனைவரும் பாதுகாப்போடு இருங்கள். கொரோனாவை விட, தனிமையே நம்மை கொன்று விடும்' என, கூறியிருந்தார்.








