கரோனா தொற்று அச்சத்தால் நாடு முழுவதும் மார்ச் 16-ம் தேதி அன்று பள்ளிகள்
மூடப்பட்டுள்ளன. இதனால் பொதுத்தேர்வுகளை மத்திய, மாநிலப் பள்ளிக் கல்வி
வாரியங்கள் நடத்த இயலாத நிலை ஏற்பட்டது. இதனால் அனைத்து மாணவர்களுக்கும்
தேர்ச்சி அளிக்கப்பட்டு அவர்களின் முந்தைய மதிப்பெண்களை வைத்து மதிப்பீடு
செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் புதிய கல்வியாண்டான ஜூன் 1-ம் தேதி முதல் பள்ளிகள்
திறக்கப்படவில்லை. கோவிட் பரவல் காலத்தில் ஏற்பட்டுள்ள கல்வி வேலை நாட்கள்
குறைப்பால், பாடத்திட்டத்தைக் குறைக்க வேண்டும் என்று மாணவர்கள்,
பெற்றோர்கள், கல்வியாளர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது.
இதைத் தொடர்ந்து தனியார் பள்ளி வாரியமான சிஐஎஸ்சிஇ, 9 முதல் 12-ம் வகுப்பு
வரை படிக்கும் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை 25 சதவீதம் குறைத்தது. இதைத்
தொடர்ந்து தற்போது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை 30 சதவீதம் வரை குறைத்துள்ளதாக
மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர்
பொக்ரியால், ''நாடு மற்றும் உலகம் முழுவதும் நிலவி வரும் அசாதாரண சூழலில்
சிபிஎஸ்இ, தன்னுடைய பாடத்திட்டத்தை மீளாய்வு செய்து, பாடத்தின் அளவைக்
குறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 9-ம் வகுப்பு முதல் 12-ம்
வகுப்பு மாணவர்களுக்கு 30 சதவீதம் வரை பாடத்திட்டத்தைக் குறைத்து
அமல்படுத்த வேண்டும். எனினும் முக்கியப் பாடங்களின் கருத்துருக்கள்
இருத்தல் அவசியம்’’ என்று தெரிவித்துள்ளார்.