
சென்னை: பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகள்
உள்பட 8 வகையான துணைத் தேர்வுகளை நடத்த தேர்வுத்துறைக்கு அரசு அனுமதி
அளித்து ஆணையிட்டுள்ளது. தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும்
தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச், ஏப்ரல்
மாதத்தில் பள்ளி மாணவர்களுக்கான பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2
வகுப்புகளுக்கான தேர்வுகள் நடப்பது வழக்கம். இந்நிலையில், கடந்த 2019-20ம்
கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் நடக்கும் என்று
அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில் பிளஸ் 2
தேர்வுகள் தொடங்கி நடந்தன. அதன்பின் பிளஸ் 1 வகுப்புக்கான தேர்வுகளும்
தொடங்கின. இதில் பிளஸ் 2 தேர்வுகள் கடந்த மார்ச் 24ம் தேதியுடன் முடிந்தன.
பிளஸ் 1 வகுப்புக்கான தேர்வுகள் 26ம் தேதியுடன் முடிய இருந்த நிலையில்
மார்ச் 25ம் தேதியில் இருந்து ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால், மார்ச்
26ம் தேதி நடக்க இருந்த பிளஸ் 1 வகுப்பு தேர்வும், 27ம் தேதி தொடங்க இருந்த
பத்தாம் வகுப்பு தேர்வும் ரத்து செய்யப்பட்டன.
பின்னர் பத்தாம்
வகுப்பு தேர்வு நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால் அந்த தேர்வு முழுமையாக
ரத்து செய்யப்பட்டது. பள்ளிகள் மூலம் தேர்வு எழுத பதிவு செய்திருந்த
மாணவர்கள் மட்டும் பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றதாக
அறிவிக்கப்பட்டனர். ஆனால், சுமார் 50 ஆயிரம் தனித் தேர்வர்களுக்கு தேர்வு
நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், செப்டம்பர் 21ம் தேதி முதல்
பத்தாம் வகுப்புக்கான துணைத் தேர்வுகள் நடக்கும் என்றும், பிளஸ் 1
தேர்வுகள் செப்டம்பர் 29ம் தேதி முதல் நடக்கும் என்றும், பிளஸ் 2 தேர்வுகள்
செப்டம்பர் 21ம் தேதி முதல் நடக்கும் என்றும் தேர்வுத்துறை அறிவித்து
அதற்கான அட்டவணைகளையும் கடந்த வாரம் வெளியிட்டது. தற்போதுள்ள கொரோனா தொற்று
காலத்தில் தேர்வுகளை பாதுகாப்புடன் நடத்துவது குறித்து பேரிடர் மேலாண்மை
சட்டத்தின் கீழ், மேற்கண்ட தேர்வுகளுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை
அரசு வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தற்போது
தமிழகத்தில் நிலவும் கொரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 31ம் தேதி வரை
பள்ளிகள் திறக்க அனுமதியில்லை என்பதால், தேர்வுத்துறையின் சார்பில் 10,
பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான துணைத் தேர்வுகளை நடத்தவும், 8ம் வகுப்பு
தனித்தேர்வர்களுக்கான தேர்வுகள், தொடக்க கல்வி பட்டயத் தேர்வு, இசைத்
தேர்வுகள், விளையாட்டுதுறை பட்டயத் தேர்வு, சமஸ்கிருத நுழைவுத் தேர்வு
உள்ளிட்ட 8 வகையான தேர்வுகளை செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடத்த
அரசுத்தேர்வுகள் இயக்குநர் அரசிடம் அனுமதி கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடித்ததை அரசு பரிசீலித்து தற்போது மேற்கண்ட தேர்வுகளை கொரோனா
பாதுகாப்பு விதிகளை கடைபிடித்து நடத்திக் கொள்ளவும், தொடர்ந்து விடைத்தாள்
திருத்தும் பணிகளை மேற்கொள்ளவும் அனுமதி வழங்கி ஆணையிடுகிறது.