தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2020-2021 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்குக் கடந்த ஜூலை 20-ம் தேதி முதல் http://tngptc.in, http://tngptc.com ஆகிய இணையதளங்கள் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாணவர்கள் மேற்கண்ட இணையதளங்கள் வழியாகவும், தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள அரசு சேவை மையங்கள் வழியாகவும் விண்ணப்பித்து வருகின்றனர்.
இதுகுறித்து கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் வி.ராஜேந்திரன் கூறியதாவது:
இங்கு சேரும் மாணவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளாக ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை, மடிக்கணினி, இலவசப் பேருந்து பயண அட்டை, பாடப் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. உதவித்தொகை மூலமாக மாணவர்கள் தங்களுடைய படிப்புக்கான செலவைச் சமாளித்துக் கொள்ள முடியும்.
தனியார் நிறுவனங்களில் டிப்ளமோ படித்தவர்களின் தேவை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதனால் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படித்தவர்கள் பெரிய நிறுவனங்களில், நல்ல சம்பளத்தில் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். வேலைவாய்ப்பு முகாம்கள் மூலமாகவும் அவர்களுக்கு வழிகாட்டப்பட்டு வருகிறது.
இதேபோல் டிப்ளமோ முடிப்பவர்கள் தொடர்புடைய இன்ஜினீயரிங் படிப்புகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்ந்து, அடுத்த 3 ஆண்டுகளில் இன்ஜினீயரிங் பட்டமும் பெற முடியும். எனவே மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.








