ஜிப்மரில் நர்சிங் மற்றும் மருத்துவம் சார்ந்த இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு மையங்கள் புதுச்சேரியில் ரத்தாகியுள்ளன. இதுகுறித்து ஆளுநர், முதல்வரிடம் புகார் தரப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் ஜவஹர்லால் மருத்துவப் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஜிப்மர்) தற்போது நர்சிங்
மற்றும் மருத்துவம் சார்ந்த இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளான
பிஎஸ்சி, எம்எஸ்சி, எம்பிஎச், பிஜிடி, பிஜிஎப், பிபீடி மற்றும் பிஎச்டி
படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வரும் செப்டம்பர் 1-ம் தேதி
கடைசி நாளாகும். வரும் செப்டம்பர் 22-ம் தேதி மதியம் 2 முதல் மாலை 3.30 வரை
தேர்வு நடக்கிறது. இப்படிப்புகளுக்கு புதுச்சேரியில் தேர்வு எழுதும்
மையங்கள் இல்லை என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி யூனியன் பிரதேச அனைத்து சென்டாக் மாணவர்கள் பெற்றோர்கள் நலச்சங்கம் தலைவர் நாராயணசாமி கூறியதாவது:
''புதுச்சேரி மாநிலத்தில் இயங்கும் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் நர்சிங்
மற்றும் மருத்துவம் சார்ந்த இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்பிற்கான
விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டு 21 மாநிலங்களில் தேர்வு எழுதும் மையங்கள்
அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் புதுச்சேரியில் தேர்வு எழுதும் மையம் உண்டு
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், மாணவர்கள்
ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது புதுச்சேரிக்கான தேர்வு எழுதும் மையங்களைக்
குறிப்பிடவில்லை. இதனால் மாணவர்கள், பெற்றோர்கள் மன உளைச்சலுக்கு
ஆளாகியுள்ளனர். மேலும் குறிப்பேட்டில் மாணவர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தேர்வு எழுதும் இடத்தை எந்தக் காரணத்தைக் கொண்டும் மாற்றியமைக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளது.
இதனால் புதுச்சேரி மாணவர்கள் வெளிமாநிலத்தில் சென்று தேர்வு எழுதும் அவலநிலை உருவாகியுள்ளது, அதிக அளவு கரோனா தொற்று பரவி வரும் நிலையில் புதுச்சேரி மாணவர்கள் வெளியில் சென்று தேர்வு எழுதுவது என்பது பாதுகாப்பற்றதாக இருக்கும். இதைக் கருத்தில் கொண்டு புதுச்சேரி அரசும், ஜிப்மர் நிர்வாகமும் உடனடியாக இதில் தலையிட்டு புதுச்சேரி மாணவர்கள்
அனைவருக்கும் புதுச்சேரியில் தேர்வு எழுத மையங்களை அமைத்திட வேண்டும். இது
தொடர்பாக ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி மற்றும் அதிகாரிகளிடம்
மனு தந்துள்ளோம்''.