
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளுக்கு சிவில் சர்வீஸ் தேர்வுகளை மத்தியப் பணியாளர் தேர்வு வாரியம் (யுபிஎஸ்சி) நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு அக்டோபர் 4-ம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கு எதிராக, இத்தேர்வுக்கு தயாராகி வரும் 20 பேர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். இவர்கள் தங்கள் மனுவில், 'நாட்டில் தொடர் மழையால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரோனா வைரஸ் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. எனவே சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வை 2-3 மாதங்களுக்கு தள்ளிவைக்க உத்தரவிட வேண்டும். சிவில் சர்வீஸ் தேர்வு என்பது பணியாளர்களை தேர்வு செய்வதற்கான தேர்வு என்பதால் அதனை தள்ளி வைப்பதால் கல்வி வளர்ச்சியில் எந்த பாதிப்பும் ஏற்படாது. கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளபோதும் தேர்வு மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை.
பொது போக்குவரத்து முழு மையாக இல்லாததால் இவர்கள் பாதிக்கப்படுவார்கள்' என கூறி யிருந்தனர்.
இவர்களின் மனு நீதிபதிகள் ஏஎம்.கான்வில்கர், சஞ்சீவ் கன்னா ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவுக்கு மத்திய அரசு மற்றும் யுபிஎஸ்சி பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை வரும் 28-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.