ஒடிசா மாநிலத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வுகளில் சிறப்பாக செயல்பட தேர்வு வழிகாட்டி நூல் வழங்கப்பட்டுள்ளது. இந்த நூல் பொதுத்தேர்வு எழுதும் 6,20,508 மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. பொதுத்தேர்வு வழிகாட்டி நூல்: இந்தியாவில் கொரோனா காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. நோய்த்தொற்று குறைந்து வருவதால் ஒடிசா மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டும் நோக்கில் பொதுத்தேர்வு வழிகாட்டி நூல் வழங்க உள்ளதாக அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எஸ்.ஆர்.தாஷ் கூறுகையில், ஒடிசா அரசு சார்பில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்த பாடங்களை எளிமைபடுத்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ‘பரிக்ஷா தர்பான்’ (தேர்வு வழிகாட்டி) நூலை 6,20,508 மாணவர்களுக்கு வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நூல் 700 பக்கங்களை கொண்டது. அதில் பொதுத்தேர்வுக்கு கேட்கப்படும் மாதிரி வினாக்கள் இருக்கும், மாணவர்கள் பொதுத்தேர்வு அழுத்தத்தை குறைக்க உதவும். எனவே அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் இந்த திட்டத்தை விரைவில் நடைமுறைபடுத்த அறிவிப்பு வெளியிட்டார்”, இவ்வாறு அவர் தெரிவித்தார்.