உண்ண உணவுகூட தராமல், அடிப்படை வசதி ஏற்படுத்திக் கொடுக்காமல் இரு நாள்கள் பணி செய்தாக வேண்டும் என்றால் தேர்தல் பணி எப்படி நியாயமாகும்? - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


உண்ண உணவுகூட தராமல், அடிப்படை வசதி ஏற்படுத்திக் கொடுக்காமல் இரு நாள்கள் பணி செய்தாக வேண்டும் என்றால் தேர்தல் பணி எப்படி நியாயமாகும்?

உணவு, கழிப்பிடம், போக்குவரத்து... தேர்தல் பணி ஆசிரியர்களுக்கு இதைக்கூட செய்யாதா தேர்தல் ஆணையம்?

தேர்தல் பணி முக்கியமானதுதான். ஆனால் உண்ண உணவுகூட தராமல், அடிப்படை வசதி ஏற்படுத்திக் கொடுக்காமல் இரு நாள்கள் பணி செய்தாக
வேண்டும் என்றால் இது எப்படி நியாயமாகும்?
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் ஆணையம் தமிழக அரசிடம் கேட்ட தொகை எவ்வளவு தெரியுமா? 621 கோடி ரூபாய். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்க வேண்டியிருப்பதாலும், நோய்த்தொற்றை தவிர்க்க வாக்குச் சாவடிகளின்

எண்ணிக்கை 68,000-லிருந்து 95,000 ஆக உயர்த்தப்பட்டிருப்பதாலும் இம்முறை செலவினங்கள் அதிகரிக்கும் என்று கடந்த ஜனவரியிலேயே தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ குறிப்பிட்டிருந்தார்.

வாக்காளர் பட்டியல் தயாரிப்பு முதற்கொண்டு வாக்குப்பதிவு பெட்டியை பத்திரமாகக் கொண்டு சேர்ப்பதுவரை இதன் செலவினங்களில் அடங்கும். தேர்தல் பணிக்காக அழைக்கப்பட்டிருக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு சம்பளம், இன்னபிற இத்யாதி செலவுகள் எல்லாம் இதில் அடங்கும்.

கோடிக்கணக்கில் செலவு செய்து தேர்தலை ஆணையம் நடத்தினாலும், அதை களத்தில் இருந்து நடத்திக்காட்டுவது அரசுப் பள்ளி ஆசிரியர்களும் ஊழியர்களும்தான். ஆனால் அவர்களுக்கான உணவு வசதியையோ, பாதுகாப்பு வசதியையோ, போக்குவரத்து வசதியையோ தேர்தல் ஆணையம் செய்து தருவதே இல்லை. `ஒவ்வொரு முறை தேர்தல்

வரும்போதும், போருக்குச் சென்று செத்துப் பிழைத்து வருவதுபோலத்தான் இருக்கிறது எங்களது நிலை' என்று ஆசிரியர் தரப்பு வெடித்துக் குரலெழுப்புகிறது.

`என்ன பிரச்னைகள்?' என்று கேட்டதுதான் தாமதம். கோவையைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் படபடவென பொரிந்து தள்ளிவிட்டார். அவர் சொன்னதை அப்படியே இங்கே தருகிறேன்.

அதற்கு முன்பு வாக்குப்பதிவு பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படும் நடைமுறை குறித்த சிறு விளக்கத்தையும் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் நடத்தும் அதிகாரியாக மாவட்ட ஆட்சியர் செயல்படுவார். அவரது மேற்பார்வையில் அவரது
 
மாவட்டத்திலுள்ள அரசுப் பணியாளர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிகள் ஒதுக்கப்படும். தேர்தல் பணியை கட்டாயம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். மறுக்கமுடியாது. மறுத்தால் அவர்களுக்கு `மெமோ’ வழங்கப்படும்.

ஒரு தொகுதிக்குள் இருக்கும் ஆசிரியர்களும், பணியாளர்களும் அதே தொகுதிக்குள் தேர்தல் பணி செய்யக்கூடாது என்பது தேர்தல் விதிமுறைகளில் ஒன்று. அதனால் அவர்கள் பழக்கப்படாத வேறொரு தொகுதிக்கு தேர்தல் பணிக்காக அனுப்பி வைக்கப்படுவார்கள். அது நகரமாக இருக்கலாம். கிராமமாக இருக்கலாம். மலைப்பகுதியாகக்கூட இருக்கலாம்.

தேர்தலுக்கென்று 5 நாள்கள் ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும். தேர்தலுக்கு முந்தைய முதல் மூன்று வாரங்களில் மூன்று பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். எப்படி தேர்தலை நடத்த வேண்டும், வாக்குப்பதிவு பெட்டியை எப்படி இயக்க வேண்டும், பிரச்னை ஏற்பட்டால் எப்படி சரி

செய்யவேண்டும், வாக்காளர் பட்டியலில் எப்படி வாக்காளர் பெயரை சரிபார்ப்பது. வாக்களிக்க அனுமதிப்பது, வாக்குப்பதிவு முடிந்ததும் எப்படி முத்திரையிடுவது என அனைத்தும் சொல்லித் தருவார்கள். வாக்களிக்கும் நாள், அதற்கு முந்தைய நாள் என இரு நாள்கள் களத்தில் இருந்து பணியாற்ற வேண்டும்.

தேர்தலுக்கு முதல் நாள் ஆட்சியாளர் அலுவலகத்தில் காத்திருந்து, தற்காலிகப் பணியாணை பெற்று வாக்குச்சாவடி இருக்கும் பள்ளிக்குச் செல்ல வேண்டும். மறுநாள் வாக்குப்பதிவு முடிந்து வாக்குப்பெட்டிகளை தேர்தல் ஆணையம் எடுத்துச் செல்லும் வரை அங்கேயே காவல் இருக்க வேண்டும். அதன் பிறகே தேர்தல் பணி நிறைவடையும். கொரோனா பரவல் காரணமாக இம்முறை தேர்தலில் வாக்களிக்கும் நேரத்தையும் அதிகரித்திருக்கிறார்கள். இதுவும் ஆசிரியர்களிடமும் அரசு ஊழியர்களிடமும் கலக்கத்தை அதிகரித்திருக்கிறது.

இனி அந்த ஆசிரியை சொன்னது அப்படியே இங்கே...

``கொரோனா நோய்த்தொற்று பரவும் காலத்தில் பெண் ஊழியர்கள் பேருந்தில் பயணம் செய்து, மூன்று நாள்கள் பயிற்சி முடித்து, ஏப்ரல் 5-ம் நாள் ஆணையினை பெற காலை 10 மணிக்கு ஆட்சியர் அலுவலகம் செல்ல வேண்டும். அங்கிருந்து சொந்தப் பயண ஏற்பாட்டில் மதியம் 12 மணிக்குள்

வாக்குச்சாவடியை அடையவேண்டும். வாக்குச்சாவடி அடைவதற்கு அன்று மாலை ஐந்து மணி ஆகிவிடும். ஆனால் போடுவார்கள் பாருங்களேன் ஒரு சட்டம்... மதியம் 12 மணிக்குள் வாக்குச் சாவடிக்குள் இருக்க வேண்டும் என்று. அதனால் அவசர அவசரமாக எப்படியோ ஒருவழியாக வாக்குச்சாவடிக்கு வந்தடைவார்கள்.

உண்ண உணவில்லாமல், தங்க எவ்வித வசதியும் இல்லாமல், போதிய அளவிலான பாதுகாப்பில்லாமல், குடிக்க குடிநீர்கூட இல்லாமல், அன்று இரவு முழுதும் கொசுக்கடியில் தூக்கம் வருகிறதோ இல்லையோ தேர்தல் பொருள்களை பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் பெண் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் இருப்பார்கள்.
 

அடுத்த நாள் காலையில் 5.00 மணிக்கு எல்லாம் வாக்குச்சாவடியில் 50 மாதிரி வாக்குப்பதிவு நடத்த ஆரம்பிக்க வேண்டும். 50 ஓட்டுகள் பதிவுசெய்ய ஏஜென்ட்கள் யாரும் வராமல் எப்படித் துவங்குவது? அவர்களுக்கு யார் சொல்வது?” என்ற கேள்வியை முன்வைத்தார்.

மாதிரி வாக்குப்பதிவு என்பது, வேட்பாளர்களின் முகவர்களை வைத்துக்கொண்டு 50 வாக்குகளை பதிவு செய்து காண்பிக்க வேண்டும். வாக்கு அளிக்கும் சின்னத்தில் வாக்கு விழுகிறதா? இவருக்குத்தான் வாக்களித்தோம் என்ற உடனடி பதிவிறக்கச் சீட்டு வருகிறதா? பதிவுச் சீட்டுகளின் எண்ணிக்கையும் வாக்குகளின் எண்ணிக்கையும் சரியாக இருக்கிறதா? இவற்றையெல்லாம் பரிசோதித்துக் காட்ட வேண்டும். முடிவுகளைச் சொல்லவும், மீண்டும் இயந்திரத்தை தயார் செய்வதற்கு அதிக நேரம் எடுக்கும். இதற்குப் பெயர்தான் மாதிரி வாக்குப்பதிவு.

மீண்டும் அந்த ஆசிரியை தொடர ஆரம்பித்தார்.

``தேர்தல் நேரம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை. அதாவது 12 மணி நேரம். அதுவும் ஒருசில வாக்குச்சாவடிகளில் 1,000 வாக்காளர்களுக்கு மேல் இருப்பார்கள். இடையில் இயற்கை உபாதைகளுக்குக்கூட செல்ல வழியில்லாமல் பணியாற்ற வேண்டும்.

அதிலும் காலை, மதியம் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் எங்களுக்கான உணவை யார் தருவார்கள் என்று எதிர்பார்ப்புடன் காத்திருக்க வேண்டும். தேர்தல் ஆணையம் மண்டல அலுவலர்கள் மூலமாக, அல்லது உள்ளூர் கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமாக இதுவரை உணவு வழங்கியதாக சரித்திரம் இலலை.

நகர்ப்புறங்களில் ஒரு சில இடங்களில், ஒரு சில நல்ல நண்பர்கள், நல்ல வாக்குச்சாவடி முகவர்கள், கிராமங்களில் நம்மீது அக்கறை கொண்ட ஒரு சில நல்ல உள்ளங்கள், நமக்காக உணவு தருவார்கள். பெரும்பாலான இடங்களில் உணவுக்குப் பெரும்பாடுதான்.

வாக்காளர்களின் நலன் மட்டுமே கருதி அன்று பொது விடுமுறை விட்டும்கூட, காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கவிருக்கிறது என்றதும், ஒரு சில வாக்காளர்கள் `நாங்கள் வேலைக்குச் செல்ல வேண்டும், விரைவில் வாக்குப்பதிவை துவங்குங்கள்' என்று உரிமையுடன் வருவார்கள். ஏழு மணிக்கு வாக்குச்சாவடி வாக்குப் பணி துவங்கும் முன் நாம் எத்தனை சீர் முறைகளை செய்ய வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியாது.

மாதிரி வாக்குப்பதிவு முடித்ததும் அதனை கிளியர் செய்வதற்கு குறைந்தது 20 நிமிடங்கள் ஆகும். பிறகு அதனை சீல் செய்வதற்கு 20 நிமிடங்கள் ஆகும். அத்தனையும் ஒரு விதமான படபடப்புடன் செய்ய வேண்டும். எந்த ஒரு

தவறும் நேராத வண்ணம் செய்ய வேண்டிய சூழ்நிலை எங்களுக்கு. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை வாக்குச் சாவடிக்குள் வரும் ஒவ்வொரு பத்திரிகை, போலீஸ்காரர், கட்சிக்காரர்கள் அனைவருக்கும் வாக்குப் பதிவான விவரங்களை வழங்குவது அவசியமாகிறது.

இந்த 2021 தேர்தலில், கடைசி ஒரு மணி நேரம் நோய்த் தொற்று பாதித்த நோயாளிகளுக்கான நேரம் என்று சொல்கிறார்கள். வாக்காளர்களின் 100% வாக்கு, வாக்களிப்பவர்களின் நலன் மட்டுமே பார்க்கத் தெரிந்த தேர்தல் ஆணையம், வாக்குச் சாவடிக்குள் அமர்ந்திருக்கும் அலுவலர்களும் மனிதர்கள்தான் என்பதை உணர்ந்திருந்தால் மாலை 5 மணிக்கெல்லாம் வாக்குப்பதிவு நிறைவுபெறச் செய்து இருக்கும்.

எங்களுக்காக குரல் கொடுக்க எந்தக் கட்சிக்காரர்களும் வரப்போவதில்லை. அங்கு எந்த சங்கத்தின் பேச்சும் எடுபடப் போவதில்லை. தேர்தல் முடிந்து அத்தனை விபரங்களையும் 17சி-ல் பதிவு செய்து முகவர்களுக்கு அளித்துவிட்டு முத்திரைப் பணிகள் எல்லாம் முடித்துவிட்டு மிகுந்த பசியுடன், எப்போது மண்டல அலுவலர் வருவார் என்று விடிய விடிய காத்திருந்து, அனைத்தையும் அவர்கள் வசம் ஒப்படைத்துவிட்டு, எவ்வித பாதுகாப்பும் இன்றி இரவு வேளைகளில் பெண் ஆசிரியர்கள் வீடு திரும்ப வேண்டும்.

அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் இந்தப் பணியை ஐந்தாண்டுகளுக்கு மூன்று முறை போர்க்களத்திற்கு செல்வதுபோல், போர் வீரர்களைப்போல் அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்தாலும் எங்களது பரிதாபமான நிலையை, எங்களுக்கு உள்ள இடர்பாடுகள் பற்றி முன்னெடுத்துச் செல்ல, எங்களது சிரமங்களைக் குறைக்க எவரும் இல்லை” என்றார் காட்டமாக.

விருதுநகரைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் பகிர்ந்த கொண்ட தகவல் இன்னும் வருத்தமாக இருந்தது.

``அறிமுகமே இல்லாத இடத்தில் தேர்தல் பணி போடுவார்கள். அங்கு சென்றால் ஆண் ஆசிரியர்களும் இருப்பார்கள். பெண் ஆசிரியர்களும் இருப்போம். அரசுப் பள்ளிகளின் நிலை உலகறிந்ததாயிற்றே. அதிலும் கழிப்பிட வசதிகளைக் கேட்கவா வேண்டும். ஆண்கள் எனில் சமாளித்துக்கொள்வார்கள். பெண்கள் நாங்கள் எங்கே செல்வது?

விடிகாலையில் 4 மணிக்கு எழுந்து, அந்த இருட்டில் புழு, பூச்சி, பாம்பு, பல்லி இருக்குமோ என்று பயந்து பயந்து சென்றுவிட்டு வருவோம். ஆண்கள் எழுவதற்குள் குளித்து முடித்து பள்ளியிலேயே ஆடை மாற்றிக்கொள்வோம். இத்தனையையும் தாங்கிக்கொள்ளலாம் என்றாலும்கூட, மாதவிடாய் தினங்கள் என்றால் சிரமங்கள் இன்னும் அதிகரிக்கும்.

இவ்வளவு செலவு செய்யும் தேர்தல் ஆணையம், தேர்தலுக்காக அப்பள்ளிகளில் கழிப்பிட வசதியை புதிதாக ஏற்படுத்த வேண்டாம். இருப்பதை சரிசெய்து கொடுத்தால் எங்களுக்கு மட்டுமல்ல,
 
 அப்பள்ளிகளில் படிக்கவரும் குழந்தைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். அல்லது மொபைல் டாய்லெட் வசதி ஏற்படுத்திக் கொடுக்கலாம்.

முதல் நாளே வீட்டிலிருந்து கிளம்பிவிடுவோம். வாக்குச் சாவடிக்குள் மதியமெல்லாம் சென்றுவிட வேண்டும். அங்கே ஒரு ஏற்படும் செய்து வைத்திருக்க மாட்டார்கள். நாம்தான், டேபிள் எடுத்துட்டு வாங்க... பேனை சரி செய்து கொடுங்க... வெளிச்சம் போதவில்லை, அது இல்லை இது இல்லை என்று ஒவ்வொன்றாகப் பார்த்து செய்ய வேண்டும். முடிப்பதற்குள் இருட்டிவிடும்.

நகரமென்றால் கடைகளில் சொல்லி உணவு வாங்கிக்கொள்ளலாம். கிராமம் எனில் அதோ கதிதான். பல முறை நான் பட்டினியாகத்தான் இருந்திருக்கேன். தேர்தல் பணிகளின்போது. சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்கள் போன்றோருக்கெல்லாம் மிகவும் சிரமம்.

வாக்குப்பதிவு முடிந்து எல்லோரும் சென்ற பிறகு, பெட்டிக்கு சீல் வைத்து அந்தப் பெட்டியை எடுத்துச்செல்லும்வரை நள்ளிரவானாலும் நாய் போல காத்துக்கிடக்க வேண்டியதுதான். பெட்டியை எடுத்துச் சென்றுவிட்டால், `நீ இருந்தாலும் சரி, செத்தாலும் சரி எங்களுக்கென்ன...' என்பதுபோல தேர்தல் பணிக்குழு எங்களை அந்த இடத்திலேயே கழற்றிவிட்டுவிடும்.


அந்த நள்ளிரவில் எப்படி நாங்கள் எங்களது ஊருக்குப் பயணிப்பது, பத்திரமாக வந்து சேர்வது? வயதான அப்பா, அம்மா, பள்ளி செல்லும் பையன் என எனது குடும்பத்தையே இருநாள் தனியே விட்டுவிட்டுத்தான் இப்பணிக்கு வந்தாக வேண்டும். அவர்களுக்கு ஏதேனும் ஆனால்கூட எங்களால் செல்ல முடியாது. காரணம் இது தேர்தல் பணி. எங்களுக்குப் பிடிக்காத பணி என்றால் இந்தத் தேர்தல் பணிதான்” என்றார்.

நீலகிரியிலுள்ள தலைமை ஆசிரியர் ஒருவர் இது குறித்து சொன்னது யோசிக்க வைக்கக்கூடியதாக இருந்தது.

``சமவெளிப்பகுதிகள் எனில் ஆசிரியர்கள் ஏதாவதொரு வாகனத்தைப் பிடித்து சென்று விடுவார்கள்.

மலைப்பகுதியென்றால் யோசித்துப் பாருங்கள். மிருகங்களின் பயம் இருக்கும். வேறு வழியே இல்லை. நாங்கள் போய்த்தான் ஆகவேண்டும். என்னவோ செய், ஏதோ செய், ஆனால், நீ அங்கே இருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சொல்லிவிடும்.

பட்டதாரி ஆசிரியரை, அங்கே தலைமை ஆசிரியருக்கு மேலதிகாரியாகப் போட்டுவைக்கும் அவலமெல்லாம் நடக்கும். இம்முறை சமையலர், அலுவலக உதவியாளர் போன்றவர்களை எல்லாம் தேர்தல் பணியில் ஈடுபடுத்துகிறார்கள். அவர்களுக்கு சரியாக எழுத வராது. அவர்களைக்கொண்டு 17சி படிவத்தை நிரப்ப இருக்கிறார்கள். இது எங்கு போய் முடியுமோ தெரியவில்லை. இரண்டு நாள்களுக்கும் எங்களுக்கு சோறு, தண்ணி இருக்காது. எவ்வளவோ செலவு செய்யும் தேர்தல் ஆணையம், தனது பணியாளர்களுக்கு உணவைத் தரலாம். அடிப்படை வசதிகளை செய்து தரலாம்” என்றார்.

சோழிங்கநல்லூரிலுள்ள ஆசிரியரிடம் பேசியபோது, ``வாத்தியாருங்க நிறைய சம்பளம் வாங்குறாங்க. இந்த வேலைய செஞ்சா என்னவாம் என்று குரல் கொடுப்பவர்கள்தான் இங்கே அதிகம். எங்களுக்குத் தேர்தல் பணி சம்பளமே வேண்டாம். எத்தனையோ வேலையற்ற பட்டதாரிகள் இருக்கிறார்கள். தன்னார்வலர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த பணியை ஒதுக்கிக்கொடுத்தால் அவர்களுக்கு அது பயனுள்ளதாக இருக்கும்.

ஆனால் அதை செய்ய மாட்டார்கள். ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்பதுபோல, அரசுக்கு எந்தப் பணி என்றாலும் ஆசிரியர்கள்தான் இளைத்தவர்கள். மக்கள் தொகை கணக்கெடுப்பா, ரேஷன் கடை கணக்கெடுப்பா, மக்கள் தொகை பதிவேடா, வாக்காளர் சேர்ப்பு முகாமா, தடுப்பூசி முகாமா... இழுத்துட்டு வா அந்த அரசுப்பள்ளி ஆசிரியரை... என்றுதான் சொல்வார்கள். கல்விப்பணி பாதிக்குமே ... மாணவர்கள் பாதிப்புக்குள்ளாவார்களே... அதைப் பற்றியெல்லாம் கவலை இல்லை இவர்களுக்கு.


இம்முறை கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் கடைசி ஒரு மணி நேரம், அதாவது 6 முதல் 7 மணி ஓட்டுபோடலாம் என்கிறார்கள். அப்போது நாங்கள் முழு கவசத்தோடு இருக்க வேண்டும். அவர்களும் முழு கவசத்தோடு வரவேண்டும் என்கிறார்கள். இவர்களுக்கு தபால் வாக்குப்பதிவு கொடுக்கலாமே. அவர்களால் நோய் பரவலும் கட்டுப்படும். காகிதத்தில் கொரோனா உயிரி 10 நாள்களுக்கு மேல் இருக்காது. தேர்தல் முடிவுகள் 25 நாள்கள் கழித்துத்தானே வெளிவரப்போகிறது" என்று வருத்தப்பட்டார்.


திருநெல்வேலியில் இருக்கும் அரசு ஊழியர் ஒருவரிடம் பேசியபோது, ``என்னோடு பணியாற்றும் ஊழியர் ஒருவர் 15 நாள்களுக்கு முன்னதாக உடல்நலக் குறைவிற்காக சிகிச்சை மேற்கொண்டார். உடலும் மனமும் தயாராகவில்லை. அவருக்கும் தேர்தல் பணி ஒதுக்கி இருக்கிறார்கள். உடல்நிலை மோசமாக இருக்கும்போது பணிக்கு எப்படி செல்லமுடியும் என்று கேட்டதற்கு, சம்மந்தப்பட்ட அதிகாரிகள், ``அதெல்லாம் முடியாது நீங்க பணிக்கு போய்த்தான் ஆகவேண்டும்." என்று கோபமாக பேசி அனுப்பியிருக்கிறார்கள். அவருக்கு வந்த ஆணையை ரத்து செய்ய அங்கும் இங்கும் அல்லாடிக்கொண்டிருக்கிறார்" என்று தனது வருத்தத்தைப் பதிவு செய்தார்.

புதுக்கோட்டையிலுள்ள ஆசிரியர் ஒருவர், ``பல லட்சம் செலவு செய்து பள்ளிக்கு வர்ணம் அடித்து வைத்திருப்போம். தேர்தல் விழிப்புணர்வு வாசகம், வாக்காளர் விவரம் என்றெல்லாம் போஸ்டர்களை ஒட்டி நாசம் செய்துவிடுவார்கள். பணி முடிந்ததும் அப்படியே விட்டுவிட்டுச் சென்றுவிடுவார்கள். அதை மறுபடியும் நாங்கள்தான் சரிசெய்தாக வேண்டும். இதற்காக தனியே மூங்கில் தட்டிகளை வைத்தால் என்ன? டிஜிட்டல் முறையில் கொடுத்தால்தான் என்ன?” என்றார்.

 
`தேர்தல் பணி முக்கியமானதுதான். ஆனால் உண்ண உணவுகூட தராமல், அடிப்படை வசதி ஏற்படுத்திக் கொடுக்காமல் இரு நாள்கள் பணி செய்தாக வேண்டும் என்றால் இது எப்படி நியாயமாகும். பணியாற்ற மாட்டோம் என்று எப்போதும் ஆசிரிய சமூகம் சொன்னது இல்லை. அடிப்படை வசதிகளை, நள்ளிரவில் எங்களுக்கு பாதுகாப்புடன் கூடிய போக்குவரத்து வசதிகளை செய்து கொடுங்கள் என்றுதானே கேட்கிறோம். 600 கோடிக்கு மேல் செலவு செய்யும் தேர்தல் ஆணையம் இதையும் செய்து தருவதுதானே நியாயமாக இருக்கும்?' என்கிறார்கள் ஆசிரியர்கள்.


இம்முறையேனும் தமிழக தேர்தல் ஆணையம் இந்தச் பிரச்னையை சரிசெய்யுமா?


- மோ.கணேசன்

நன்றி விகடன்

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H