ஆறாம்
வகுப்பில் படிக்கும் போது எனது ஓவிய ஆசிரியர் 2HB பென்சில் கொண்டு வந்து
படம் வரையச் சொல்வார். அப்போது 2HB என்றால் என்னெவென்று தெரியாது.
கடைக்குச் சென்று 2HB பென்சில் தாருங்கள் என்று கேட்பேன். கடைக்காரர் தரும்
பென்சிலை எடுத்துப் பார்த்தால் அதில் HB என எந்த இடத்திலும்
பொறிக்கப்பட்டிருக்காது. கடைக்காரரிடம் இதில் HB என்று எதுவும்
எழுதவில்லையே என்று கேட்டால், இது தான் 2HB பென்சில். வேணுமா? வேண்டாமா?
என்று கத்திக் கொண்டே கேட்பார்.
நானும் வாங்கிக்
கொண்டு வகுப்பறைக்கு வந்தால் ஓவிய ஆசிரியை இதுவா 2HB என்று முறைப்பார்.
எனக்கு வரைவதில் கொஞ்சம் ஈடுபாடு குறைவாக இருந்ததால் பென்சிலோடு கொண்ட
தொடர்பு வகுப்பறையிலேயே முடிந்து போய்விட்டது.
முப்பது வருடம் கழித்து இப்போது எனது மகன் HB6 பென்சில் கேட்கிறான்.
அவனுடைய ஓவிய ஆசிரியர் இப்போது அவனை துரத்துகிறார். வாழ்க்கை வட்டம் என
அவ்வப்போது நிரூபிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. இப்போது பென்சிலை
தேடுவது என் மகனல்ல. நான். கடை கடையாய் அலைந்து பார்த்தேன். HB6 என்ற
பென்சில் கிடைக்கவே இல்லை.
நடராஜ், அப்சரா, கேமல், மார்வெல், டிஷ்னி என வித விதமாக பென்சில்கள். சில
பென்சில்களில் 1HB, HB2 , 4HB என சிறிய எழுத்தில் பென்சிலில்
எழுதப்பட்டிருந்தது.
கடைசியாக இந்த HB எதைக் குறிக்கிறது என தேட ஆரம்பித்தேன். அப்போது தான் HB
என்பது பென்சில் பயன்படுத்தும் கிராபைட்டின் அளவு கோல் என புரிந்து
கொண்டேன்.