கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் , மணிப்பூர் மாநிலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா தினசரி பாதிப்பு கனிசமாக அதிகரித்து வருகிறது.. ஏற்கனவே கொரோனா 3 அலைகளின் தாக்கத்திலிருந்தே பெரும்பாலான மக்கள் மீளாத நிலையில், தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவது 4வது அலையின் முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது. நாள்தோறும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 15% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மணிப்பூர் மாநில பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், " மாநிலத்தி கொரோனா தொற்றின் பரவல் விகிதம் 15 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. அதனால் பொது நலன் கருதி அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் பிற வாரியங்களுடன் இணைந்த தனியார் பள்ளிகள் ஜூலை 24ம் தேதி வரை மூடப்படும். இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் செயல்படுத்தப்பட வேண்டும்'என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மணிப்பூர் மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்படவில்லை.. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் அனைத்தும் ஜூலை 16ம் தேதி திறக்க திட்டமிடப்பட்டது. அதற்குள்ளாக கொரோனா பரவல் அதிகரித்து வருவதாலும், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தாததை கருத்தில் கொண்டும் மணிப்பூர் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மேலும் மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 59 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்,மூலம் கொரோனாவால் சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 216 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.








