ஆவணி மாதத்தில் சூரியன் சிம்ம ராசியில் பயணம் செய்வதால் சிம்ம மாதம் என்றும் அழைக்கப்படுகிறது.
"சிங்கத்திற்கு இணையான மாதமும் இல்லை...சிவபெருமானுக்கு மேம்பட்ட தெய்வம் இல்லை" என்று அகத்தியர் குறிப்பிட்டிருக்கிறார். விநாயகப் பெருமானின் திரு அவதாரம் நிகழ்ந்ததும் ஆவணி மாதத்தில் தான்.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் உலக மக்கள் எல்லாம் ஒன்று திரண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுகிறார்கள். பல்வேறு சிறப்புகள் கொண்ட இந்த மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு என்ன யோகபலன் என்பதை பார்ப்போம். ஆவணியில் யாருக்கெல்லாம் கல்யாண யோகம் கை கூடி வரப்போகிறது என தெரிந்து கொள்வோம்.
ஆவணி மாதம் விவசாயத்திற்கு உகந்த மாதம். உயிர் காக்கும் பயிரை விவசாயிகள் பேணி வளர்ப்பார்கள்.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் ஆவணி மூலத் திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
கருங்குருவிக்கு உபதேசம் செய்தது, நாரைக்கு முக்தி அளித்தது, தருமிக்கு பொற்கிழி தந்தது, பிட்டுக்கு மண் சுமந்தது போன்ற திருவிளையாடல்கள் நடந்ததும் இந்த மாதத்தில் தான்.
ஆகஸ்ட் 17ஆம் தேதி ஆவணி மாதம் பிறக்கிறது. செப்டம்பர் 18 ஆம் தேதி வரைக்கும் ஆவணி மாதம் உள்ளது.
ஆவணி மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் சூரியன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார்.
சிம்ம ராசியில் பயணம் செய்யும் புதன் ஆவணி மாசம் நான்காம் தேதி கன்னி ராசிக்கு இடம்பெயர்கிறார். ஆவணி 25ஆம் தேதி புதன் வக்ரகதி அடைகிறார். ஆவணி 32 ஆம் தேதி சூரியன் கன்னி ராசிக்கு இடம் பெயர்கிறார்.
மேஷம்
வீரத்தை அணிகலனாகக் கொண்ட செவ்வாயை அதிபதியாக பெற்றுள்ள மேஷ ராசி அன்பர்களே...
குடும்பத்தில்
உள்ளவர்களிடம் எந்த காரணம் கொண்டும் கோபமாக பேசாதீர்கள். அரசியல்வாதிகள்
எதையும் யோசித்து செய்வது நல்லது. மாணவர்கள் கல்வி குறித்த டென்ஷன்
ஏற்பட்டு விலகும். பெண்களுக்கு பண தேவை பூர்த்தியாகும். கலைத்துறையினருக்கு
எதிர்பார்த்தபடி பணவரத்து திருப்திகரமாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே
சுமூகமான உறவு நீடிக்க விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். பதவி உயர்வு
இடம் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு. புதிய ஆர்டர்கள் கிடைப்பதற்கு
வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் சில
தாமதங்கள் ஏற்படலாம். வாகனங்களை ஓட்டிச் செல்லும் போது கவனமாக நடந்து
கொள்ளுங்கள். திருச்செந்தூர் முருகனை வழிபடுங்கள். விருப்பமான காரியங்கள்
நிறைவேறும்.
ரிஷபம்
கலைநயம் மிளிரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷபராசி அன்பர்களே....
நீண்ட
நாட்களாக இருந்து வந்த மன கிலேசங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும். பணவரத்து
திருப்தியாக இருக்கும். தொழிலில் எதிர்ப்புகள் குறையும். வியாபாரத்தை
விரிவுபடுத்த புதிய முயற்சியில் இறங்குவீர்கள். நண்பர்கள் உறவினர்களிடம்
நல்லறவு நீடிக்க பாடுபடுவீர்கள். மாணவர்கள் டென்ஷன் குறைந்து பாடங்களில்
கவனம் செலுத்துவார்கள். நிலம் வாங்கி விற்கும் தொழிலில் சாதகமான பலன்
கிடைக்கும். சாமர்த்தியமான பேச்சால் வியாபாரத்தை வெற்றிகரமாக
நடத்துவீர்கள். அதிகாரிகளின் ஆதரவு ஊக்கத்தை கொடுக்கும். கணவன் மனைவி
இருவரும் மனம் விட்டு பேசி பிரச்சினையை தீர்த்துக் கொள்ளுங்கள். தொழில்
முன்னேற்றமான பாதையில் நடக்கும். மாணவர்கள் பதற்றமில்லாமல் பாடங்களை படிக்க
வேண்டும். திருவண்ணாமலை சென்று வாருங்கள். பெருமையும் புகழும்
அதிகரிக்கும்.
மிதுனம்
எதிர்ப்புகளை புத்திசாலித்தனத்தால் முறியடிக்கும் புதனை அதிபதியாகக் கொண்ட மிதுன ராசி அன்பர்களே...
எடுத்த
காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். திட்டமிட்டு தொழிலை நடத்தி முன்னேற்றம்
அடையச் செய்வீர்கள். வியாபாரம் தொடர்பான அலைச்சலில் இறுதியாக லாபம்
கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உழைப்புக்கு ஏற்ற பலனை
அடைவார்கள். பிள்ளைகளின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பீர்கள்.
எதிர்காலம் பற்றிய சிந்தனை சிக்கனத்தை கடைபிடிக்க வழித்தடம் அமைத்துக்
கொடுக்கும். சக ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்யாதீர்கள். ஏற்றுமதி
இறக்குமதி தொழில் ஏற்றமுடன் நடக்கும். கமிஷன் வியாபாரம் கணிசமான லாபம்
தரும். வண்டி வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கை தேவை. சாமர்த்தியமான
பேச்சால் காரிய வெற்றி கிடைக்கும். திருமோகூர் காளமேகப் பெருமாளை
வழிபடுங்கள். சூழும் துன்பங்கள் தூர ஓடும்.
கடகம்
வளர்ச்சிகளை சீராக அள்ளித் தருகின்ற சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே...
உறவினர்களால்
சில்லறை உபத்திரவங்களை சந்திப்பீர்கள். விருந்தினர்கள் வருகையால்
விரும்பத்தகாத வாக்குவாதங்கள் ஏற்படலாம். அரசியல்வாதிகள் அவசரப்படாமல்
செயல்பட்டால் வெற்றி நிச்சயம். மாணவர்களின் கல்வி தொடர்பான விஷயங்கள்
தாமதமாக நடக்கும். பெண்கள் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து
முடிப்பார்கள். கணவன் மனைவிக்கு இடையே இருந்த ஊடல் நீங்கி நெருக்கம்
உருவாகும். திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். ஆடம்பர
செலவுகளுக்கு அடுத்தவரிடம் கைநீட்டி கடன் வாங்குவீர்கள். பழைய பாக்கிகளை
வசூல் செய்வதில் வேகம் இருக்கும். பணிச்சுமை அதிகரிக்கும். தஞ்சை
பிரகதீஸ்வரர் பெருமானை வழிபடுங்கள். நெஞ்சத்து ஆசைகள் எல்லாம் நிறைவேறும்.
சிம்மம்
அரசரைப் போல் கோலோச்சும் ஆற்றல்மிக்க சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே...
நிதானமாக
செயல்பட்டு படிப்படியாக முன்னேற வேண்டும். அடுத்தவர்களுக்காக உத்தரவாதம்
கொடுக்காதீர்கள். விழிப்புடன் இருந்து வியாபாரத்தை நடத்துங்கள்.
எதிர்பார்த்த பணம் கைக்கு வர தாமதமாகும். கணவன் மனைவி இருவரும் ஒருவரை
ஒருவர் அனுசரித்து செல்ல வேண்டும். அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவை
பெற்று மனம் மகிழ்ச்சி அடைவார்கள். பிள்ளைகள் நன்கு படிப்பார்கள்.
அவர்களின் அறிவு திறன் அதிகரிக்கும். சகோதரர் வகையில் உதவி கிடைக்க
தாமதமாகும். சரக்குகளை வாங்கும் போதும் அனுப்பும்போது பாதுகாப்பாக இருக்க
வேண்டும். காளகஸ்திநாதரை வழிபடுங்கள். கஷ்டங்கள் பறந்தோடும்.
கன்னி
அறிவுத் திறனை அள்ளித்தரும் புதனை அதிபதியாகக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே...
வீட்டில்
சுப காரியங்கள் நடக்கும். உறவினர்களிடமோ நண்பர்களிடமோ பேசுகின்ற போது
வார்த்தைகளில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். சக மாணவரிடம் அன்பாக
பழகுங்கள். கலைத்துறையினருக்கு அதிக வாய்ப்புக்கள் கிடைக்கும். கணவன்
மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள்
கவனமாக பணிகளை மேற்கொள்வது அவசியம். தொழில்களில் கூடுதலான வருமானம்
பார்க்கலாம். ஆன்லைன் வர்த்தகங்களில் அதிக லாபம் கிடைக்கும். சின்ன
விஷயங்களில் பெரிய மன நிறைவு உண்டாகும். வியாபாரம் தொடர்பாக வெளியூர்
பயணங்கள் செல்வீர்கள். காரைக்குடி முத்துமாரியம்மனை வழிபடுங்கள். நிறைவான
செல்வம் பெறுவீர்கள்.
துலாம்
தர்ம அதர்மங்களுக்கு ஏற்ப பலன்தரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாம் ராசி அன்பர்களே...
கணவன்
மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் அகலும். பிள்ளைகளுடன் அன்பாக பேசி
பழகுங்கள். விவேகமாக செயல்பட்டு பெண்கள் வெற்றியடைவார்கள். அரசியல்
துறையினருக்கு சில சறுக்கல்கள் ஏற்படும். ஆசிரியர்கள் கூறுவதை கவனமாக
கேட்டு மாணவர்கள் நடந்தால் வெற்றி நிச்சயம். அடுத்தவர் பிரச்சனையில்
பெண்கள் தலையிடாமல் இருப்பது நல்லது. புதிய ஆர்டர்களை பெறுவதில் இருந்த
சிக்கல் நீங்கும். மற்றவர்களுக்காக வாதாடுவதை தவிர்த்து விடுங்கள். தொழில்
வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அரசாங்க அலுவல்கள் அனுகூலமாக
நடக்கும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண
பெருமாளை வழிபடுங்கள். சகல சௌபாக்கியங்களும் சித்திக்கும்.
விருச்சிகம்
போர்க்குணம் கொண்ட பூமிகாரகன் செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே...
பேச்சுத்
திறமையால் எளிதாக காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். வீண் அலைச்சலால்
டென்ஷன் உண்டாகும். நியாயமாக பேசுகிறோம் என்று விரோதத்தை விலைக்கு
வாங்காதீர்கள். எதிர்பாராத பண தேவை உண்டாகும். அதற்காக நெருங்கிய
நண்பர்களிடம் கடன் வாங்குவீர்கள். வியாபாரத்தில் இருந்த போட்டிகள்
குறையும். உங்களை விரோதமாக நினைத்தவர்கள் பின்னர் மனம் மாறி தேவையான
உதவிகளை செய்வார்கள். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். மாணவர்கள்
அக்கறையுடன் படித்து ஆசிரியர்களின் பாராட்டை பெறுவார்கள். வீட்டிற்கு
தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். கலை துறையினர் போட்டி போடலாம்,
பொறாமை கொள்ளக் கூடாது. பழனி முருகனின் பாதம் பணியுங்கள். கழனி செழித்து
செல்வம் பெருகும்
தனுசு
வினைப்பயனை அறுக்கின்ற வியாழ பகவானை அதிபதியாகக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே...
புதிய
முதலீடுகள் செய்து அதிக லாபத்தை பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் வெற்றி
பெற துணிச்சலாக முயற்சிகளை மேற்கொள்வார்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து
தடையில்லாமல் பணம் வந்து சேரும். குடும்பத்தில் ஏதோ ஒரு காரணத்தால் திடீர்
சச்சரவுகள் தோன்றலாம். வியாபாரம் எதிர்பார்த்த அளவு நடக்கும். அதே
நேரத்தில் செலவும் அதிகரிக்கும். மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது
மிகவும் நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டுமா... கோபத்தை குறைத்துக்
கொள்ளுங்கள். அரசியல்துறையினர், பிரபலங்களின் நட்பால் அதிக பயனை
அடைவீர்கள். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். வியாபாரத்தை
விரிவுபடுத்துவீர்கள். பட்டமங்கலம் சென்று வாருங்கள். தொட்டதெல்லாம்
துலங்கும்.
மகரம்
வியூகங்கள் மூலம் வெற்றிகளை காணும் மந்தனின் ஆதிக்கம் கொண்ட மகர ராசி அன்பர்களே....
கடந்த
கால உழைப்பின் பயனை இந்த மாதத்தில் அனுபவிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில்
உள்ளவர்களுக்கு அடிமட்டத்திலிருந்து நல்ல பலன் கிடைக்கும். வங்கியில்
இருந்து எதிர்பார்த்த லோன் தாமதம் இன்றி சாங்க்ஷனாகும். கடன் கொடுக்கும்
போது கண்டிப்பாக எழுதி வாங்கிக் கொள்ளுங்கள். தொழிலை விரிவு படுத்த நீண்ட
நேரம் கண் விழித்து வேலை பார்ப்பீர்கள். மாணவர்களின் மனக்குழப்பம் நீங்கி
தெளிவான சிந்தனை மேலோங்கும். கலைத்துறையினர் வெளிநாடுகளுக்கு சென்று கலை
நிகழ்ச்சிகள் நடத்துவார்கள். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு மன வருத்தம்
நீங்கும். திருநள்ளாறு தர்ப்ப ஆரணீஸ்வரரை வழிபடுங்கள். அவமிருத்த யோகம்
விலகும்.
கும்பம்
சாணக்கியத்தனத்தால் சாதனை புரியும் சனிபகவானை அதிபதியாகக் கொண்ட கும்ப ராசி அன்பர்களே...
வீடு
நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். நீண்ட காலமாக ஆசைப்பட்ட புதிய வாகனத்தை
வாங்குவீர்கள். திறமையான பேச்சின் மூலம் பெண்கள் காரியம் சாதிப்பார்கள்.
கணவன் மனைவி இருவரும் மனம் விட்டு பேசி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
பாம்புகள் வீட்டுக்குள் வருவதைப் போல் கனவுகள் வரும். வியாபாரம் விருத்தி
அடைந்து நல்ல லாபத்தை கொடுக்கும். தொழிலில் இருந்த மறைமுகமான எதிர்ப்புகள்
விலகும். சிலர் பழைய வீட்டை புதுப்பித்து அழகு செய்வார்கள். நிலம் வாங்கி
விற்கும் தொழிலில் இரு மடங்கு லாபம் கிடைக்கும். ஆன்லைன் வர்த்தகங்கள் அதிக
பலனை தராது. ஒத்தக்கடை யோக நரசிம்மரை வழிபடுங்கள். ஆயுள் விருத்தியாகும்.
மீனம்
பார்வையால் பலன்களை அள்ளித்தரும் குரு பகவானை அதிபதியாகக் கொண்ட மீனராசி அன்பர்களே...
கூட்டாக
ஆரம்பித்த தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமாக
சில நாட்கள் குடும்பத்தினரை பிரிய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக வேலை செய்து வேலைப்பளுவை
குறைப்பார்கள். குடும்பத்தில் கடந்த காலத்தில் இருந்த கருத்து வேறுபாடு
மறைந்து பாசம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் மேலிடத்தால்
கண்காணிக்கப்படும். பெரிய மனிதர்களின் உதவியால் அரசாங்க வேலை ஒப்பந்தங்களை
பெறுவீர்கள். வியாபாரத்திற்கு தேவையான நிதி உதவி தடை இல்லாமல் கிடைக்கும்.
மாணவர்கள் பெற்றோருக்கு பெருமை சேர்ப்பார்கள். அழகர் கோவில் கள்ளழகர்
பெருமானை வழிபடுங்கள். தொழில் விருத்தி அடையும்.
உங்கள் ஜோதிடர் கவிஞர்
அ.பெர்னாட்ஷா, காரைக்குடி.









