கொரோனா தொற்றுநோயின்போது உலகமே ஸ்தம்பித்து போயிருந்த நிலையில் பள்ளிகளும் மூடப்பட்டன. இதனால் ஆன்லைன் வகுப்புகள் மூலம்தான் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.
இதனிடையே சீனாவின் குவாங்சௌ என்ற நகரைச் சேர்ந்த லுவோ என்ற ஓவிய ஆசிரியர் ஒருவர் ஆன்லைன் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தபோது, அவருடைய திரையில் பூனை தெரிந்த காரணத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஆன்லைன் வகுப்பு எடுத்துக்கொண்டிருக்கும்போது அவர் வளர்க்கும் பூனை கேமராவில் தெரிந்துள்ளது. இதனால் வகுப்பு எடுக்கும்போது பூனை திரையில் தோன்றியதற்காகவும், அதற்கு முந்தைய வகுப்புக்கு 10 நிமிடங்கள் தாமதாக வந்தற்காகவும், ஆன்லைன் வகுப்புகளை நடத்துகின்ற கல்விசார் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று லூவை பணியிலிருந்து நீக்கியிக்கிறது.
இந்நிலையில் லுவோ என்ற அந்த ஓவிய ஆசிரியர் அந்நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்து இழப்பீடு வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி லியாவோ யாஜிங்,"முதலாளிகள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும் என்று சொன்னால், அவர்கள் அலுவலகத்திலிருந்து பணியாற்றுவதைப் போன்ற எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கக் கூடாது" என்று அவர் கூறியிருக்கிறார். மேலும் நிறுவனங்களின் விதிகள் நியாயமானதாகவும் ஏற்புடையதாகவும் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, தற்போது ஓவிய ஆசிரியரனா லுவோவிற்கு அந்நிறுவனம் 40,000 யுவான், அதாவது இந்திய மதிப்பில் 4.7 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்கியுள்ளது.