மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் அற்புதங்களும் லீலைகளும் நிறைந்த அவதாரம் கிருஷ்ணா அவதாரம். கம்சனையும், சிசுபாலனையும், நரகாசூரனையும் வதம் செய்வதற்காக அவதாரம் எடுத்தவர் கண்ணன். சின்னக்கண்ணன் ஆவணி மாதம் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்துடன் கூடிய நல்ல நாளில் அவதரித்தவர்.
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த தினத்தை ஸ்ரீ ஜெயந்தி என்றும், கோகுலாஷ்டமி என்றும் கொண்டாடப்படுகிறது. நள்ளிரவு நேரத்தில் சிறையில் அவதரித்த கண்ணனின் பிறந்தநாளை ஜென்மாஷ்டமியாக நாடு முழுவதும் கொண்டாடுகின்றோம். இந்த ஆண்டு ஆகஸ்ட் 18 மற்றும் 19 ஆம் தேதி நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
சின்னக்கண்ணன் அழைக்கிறான்
கிருஷ்ணர் தனக்காக இல்லாமல் பிறருக்காக வாழ்ந்தவர். அதனால்தான் இவரை கண்ணா,முகுந்தா என்று பல பெயர்களில் அழைக்கிறோம். கண்ணைப் போல காப்பவன் என்றும், முகுந்தா என்றால் வாழ்வதற்கு இடம் அளித்து, முக்தி அளிப்பவன் என்றும் நம்புகிறோம். கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் பகவான் கிருஷ்ணர் நம் வீட்டிற்கு வந்து அருள்பாலிப்பதே கோகுலாஷ்டமியின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. அதனால் தான் கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டை கழுவி சுத்தம் செய்து, அரிசி மாவால் கோலமிட்டு, மாவிலை தோரணங்களால் அலங்கரிகிறோம். வாசலில் தொடங்கி பூஜை அரை வரை குழந்தையின் கால் தடங்களை அரிசி மாவால் பதிக்கிறோம். ஆலிலை கிருஷ்ணன் தனது பிஞ்சு பாதங்களை அடிமேல் அடி வைத்து வீட்டுக்குள் தத்தித்தத்தி நடந்து வருவதாக ஐதீகம்.
பூஜை செய்ய நல்ல நேரம்
ஜென்மாஷ்டமி
திருக்கணித பஞ்சாங்கப்படி ஆகஸ்ட் 18ஆம் தேதி வியாழக்கிழமையும்
வாக்கியப்பஞ்சாங்கப்படி 19ஆம் தேதி வெள்ளிக்கிழமையும் கொண்டாடப்படுகிறது.
கிருஷ்ணர் அவதரித்ததாக அஷ்டமி திதி தொடங்கும் ஆகஸ்ட் 19ம் தேதி நள்ளிரவு
1.48 மணிக்கு தொடங்கி, ஆகஸ்ட் 20 நள்ளிரவு 2.47 மணி வரை
கடைப்பிடிக்கப்படுகிறது.
பூஜை செய்ய காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை
நல்ல நேரம் ஆகும். கெளரி நல்ல நேரம் நண்பகல் 12.15 மணி முதல் 1.15 மணி வரை,
மிகவும் உகந்ததாகப் பார்க்கப்படுகிறது. கிருஷ்ணர் இரவில் தான் பிறந்தார்
என்பதால் பலரும் இரவில் பூஜை செய்வது வழக்கம். மாலை 05.10 மணி முதல் இரவு
06.10 மணி வரைக்கும் இரவு 08.10 மணி முதல் 09.10 மணி வரைக்கும் பூஜை செய்ய
நல்ல நேரமாகும்.
கண்ணனை அழைப்போம்
கிருஷ்ண
ஜெயந்திக்கு முதல்நாளில் வீடுகளை சுத்தம் செய்ய வேண்டும். பூஜை செய்யும்
நாளில் வாசலில் இருந்து பூஜை அறை வரைக்கும் அரிசி மாவில் குட்டிக்குட்டி
பாதங்கள் வரைந்து கண்ணனை அழைக்க வேண்டும். வீட்டின் நுழைவாயிலில் குழந்தை
நடந்து வந்தது போன்ற பாதச்சுவட்டினை அரிசி மாவால் பதியச் செய்ய வேண்டும்.
கிருஷ்ணர் சிலைக்கு பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். அதில் துளசி
இருந்தால் இன்னும் சிறப்பு. பிறகு கிருஷ்ணருக்கு பிடித்த தயிர், வெண்ணை,
அவல் கண்டிப்பாக வைக்க வேண்டும். சீடை, முருக்கு, லட்டு போன்ற இனிப்பு
உணவுகளை வைக்க வேண்டும். கிருஷ்ணர் பிறந்தது நள்ளிரவு என்பதால் பூஜையை
மாலையில் செய்ய வேண்டும். பாத கோலம் போட்டு அலங்கரித்தால் குட்டிக்கண்ணன்
நம் வீடு தேடி வருவான் என்பது நம்பிக்கை.
வீட்டில் குழந்தைகளுக்கு
கண்ணன் ராதை வேடம் போட வேண்டும். பக்கத்து வீட்டு சிறுவர் சிறுமிகளை
பூஜைக்கு அழைத்து அவர்களுக்கு கண்ணனின் லீலைகளை சொல்லும் கதைகளை கூற
வேண்டும்.
கண்ணனை வழிபட்டால் என்ன பலன்
கிருஷ்ண ஜெயந்தி நாளில் கண்ணனை வழிபட குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகிழ்ச்சி தங்கும், அகந்தை அகலும், மூர்க்க குணம் குழந்தைக்கு ஏற்படாது. இளைஞர்களுக்கு அரசியல் ஞானம் உண்டாகும், நிர்வாக திறன் அதிகரிக்கும், மாமனார் வழியில் சொத்துக்கள் கிடைக்கும், திருமணத் தடைகள் அகலும், செல்வம் பெருகும், வயல்களில் விளைச்சல் அதிகரிக்கும், ஆடு, மாடுகள் பல்கி பெருகும், கடன் தீரும், பகைமை ஒழியும், நண்பர்கள் கூட்டு தொழில் செய்தால் வெற்றி பெறுவார்கள், புகழ் கூடும், குடும்பத்தில் அமைதியும் நிம்மதியும் அதிகரிக்கும்.
By Jeyalakshmi C Oneindia








