இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ள 'டோக்கனைசேஷன்' எனும் புதிய விதி அக்டோபர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதால், டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு தொடர்பான ஆன்லைன் பண பரிவர்த்தனையில் மாற்றங்கள் அமலாகவுள்ளன.
ரிசர்வ் வங்கியின் புதிய டோக்கனைசேஷனுக்கான விதிகளை உருவாக்குவதற்கான காலக்கெடு ஜூலை 1ஆம் தேதி என வகுக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் அது செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பல பெரிய வணிக நிறுவனங்கள் 'கார்டு-ஆன்-ஃபைல்' எனும் டோக்கனைசேஷன் விதிமுறைகளை ஏற்றுக் கொண்டுள்ளன. தற்போது வரை 19.5கோடி டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன.
என்ன சொல்கிறது ரிசர்வ் வங்கியின் புதிய விதி?
ஆன்லைன் பண பரிவர்த்தனையின்போது பயனாளர்களின் கார்டு விவரங்களைச் சம்மந்தப்பட்ட ஆன்லைன் நிறுவனங்கள் சேமித்துக்கொள்ள கடந்த ஆண்டு கட்டுப்பாடுகள் விதித்த ரிசர்வ் வங்கி, டோக்கனைசேஷன் எனும் நடைமுறையைக் கட்டாயமாக்கியது.
ஆன்லைன் பணப்பரிவர்த்தனையின்போது 'கார்டு-ஆன்-ஃபைல்'எனப்படும் கார்டு எண், கார்டின் காலாவதியாகும் தேதி உள்ளிட்ட விவரங்களை பல நிறுவனங்கள் சேமித்து வந்தன. பயனாளர்களின் பரிவர்த்தனை வசதியை எளிமைப்படுத்துவதற்காக இவை சேமிக்கப்பட்டாலும் பல தளங்களில் இத்தகைய விவரங்கள் சேமிக்கப்படுவதால் கார்டு விவரங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கும், திருடப்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. அதைத் தவிர்ப்பதற்காக டோக்கனைசேஷன் என்ற புதிய விதியை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்திருக்கிறது.
டோக்கனைசேஷன் என்றால் என்ன?
நுட்பமான தரவுகளை முக்கியமற்ற தரவுகளாக மாற்றும் நடைமுறையே டோக்கனைசேஷனாகும். இந்த டோக்கன் மூலம் பயனாளரின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டின் 16 இலக்க எண்ணை பயன்படுத்தவோ, திருடவோ முடியாத வகையில் டிஜிட்டல் வடிவில் மாற்றப்படும்.
பயனாளரின் கார்டு விவரங்களை உள்ளடக்கிய இந்த டோக்கனே இனி ஆன்லைன் நிறுவனங்களால் சேமிக்கப்படும். கார்டு விவரங்கள் மறைகுறியாக்கப்பட்ட (encrypted manner) முறையில் சேமிக்கப்படும்போது அவை திருடப்படுவதற்கான வாய்ப்புகள் குறைந்து விடும்.
என்ன மாதிரியான மாற்றத்தை நாம் சந்திப்போம்?
ஆன்லைன் தளங்களால் கார்டு விவரங்களை இனி எந்த வடிவிலும் சேமிக்க முடியாது.
ஆன்லைன் தளங்களில் முதன்முறையாக பயனாளர் ஒருவர் பரிவர்த்தனை செய்யும்போது அவரது 16 இலக்க அட்டை எண் மற்றும் சிவிவி விவரங்கள் கேட்கப்படும். மீண்டும் அதே தளத்தில் பரிவர்த்தனை செய்யும்போது 16 இலக்க எண் சேமிக்கப்பட்டிருக்கும். நாம் சிவிவி எண்ணை உள்ளீடு செய்து, வங்கியால் வழங்கப்படும் ஓடிபியையும் உள்ளீடு செய்வதே பரிவர்த்தனைக்கு போதுமானதாக இருந்தது.
ரிசர்வ் வங்கியின் புதிய விதியின்படி, இனி பயனாளர்கள் தங்களது கார்டின் அனைத்து விவரங்களையும் உள்ளீடு செய்யவேண்டும்.
நாம் அனைத்து விவரங்களையும் அளித்த பிறகு, சம்மந்தப்பட்ட ஆன்லைன் நிறுவனம் டோக்கனைசேஷன் நடைமுறைக்காக நம்முடைய ஓப்புதலைக் கேட்கும். நாம் ஒப்புதல் வழங்கியவுடன் நம்முடைய கார்டு நிறுவனத்திடம் டோக்கன் கோரப்படும்.
16 இலக்க எண்ணுக்கு மாற்றாக செயல்படும் அந்த டோக்கன் கிடைத்தவுடன் அதை நாம் பரிவர்த்தனை மேற்கொண்டிருந்த ஆன்லைன் நிறுவனம் சேமித்துக் கொள்ளும். மீண்டும் அந்தத் தளத்தில் நாம் பரிவர்த்தனை செய்யும்போது நம்முடைய சிவிவி விவரங்களையும், வங்கியால் வழங்கப்படும் ஓடிபி விவரங்களையும் உள்ளீடு செய்து பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.