மேலும் நெல்லிக்காய் எளிதில் கிடைக்கக்கூடியது மற்றும் விலைக் குறைவில் கிடைக்கும். எனவே உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நினைப்பவர்கள், தங்களின் தினசரி உணவில் நெல்லிக்காயை சேர்த்தால் நற்பலன் கிடைக்கும். அதற்கு நெல்லிக்காயை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஜூஸ் தயாரித்தும் குடிக்கலாம்.
நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது நோயெதிர்ப்பு சக்தி மற்றும் மெட்டபாலிசத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இது வைரஸ் மற்றும் பாக்டீரியா போன்ற தொற்றுக்களால் ஏற்படும் சளி, இருமலைத் தடுக்கிறது. முக்கியமாக நெல்லிக்காயில் பாலிஃபீனால்கள் உள்ளன. இவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை எதிர்த்துப் போராடுவதோடு, தடுக்கவும் செய்கின்றன. ஆயுர்வேதத்தின் படி, நெல்லிக்காய் ஜூஸ் உடலின் செயல்பாட்டை சமநிலைப்படுத்துவதோடு, வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று தோஷங்களையும் சமநிலைக்கு கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
நெல்லிக்காயை எப்படி சாப்பிடுவது நல்லது?
பொதுவாக நெல்லிக்காயை அப்படியே சாப்பிட்டால், அதன் முழு பலனைப் பெறலாம். இது தவிர நெல்லிக்காய் ஜூஸ் தயாரித்து குடிப்பதன் மூலமும் அற்புதமான நன்மைகள் கிடைக்கும். அதுவும் தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம், உடலின் மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு உடல் சுத்தமாகும். இதன் விளைவாக செரிமான பிரச்சனைகள் தடுக்கப்படும், சருமம் சுத்தமாகவும் பொலிவோடும் காணப்படும், சருமம், தலைமுடி, கண்கள் போன்றவையும் ஆரோக்கியமாக இருக்கும். இப்போது ஒருவர் தினமும் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸைக் குடிப்பதால் உடலில் என்னென்ன மாற்றங்களை காணலாம் என்பதை சற்று விரிவாக காண்போம்.
உடல் எடை குறையும்
நெல்லிக்காய் ஜூஸை குடிப்பது உடல் எடையைக் குறைப்பதற்கு பெரிதும் உதவி புரியும். எப்படியென்றால், ஆய்வுகளின் படி, நெல்லிக்காய் ஜூஸில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், செரிமான மண்டலத்தை வலுவாக்க உதவி புரிகிறது மற்றும் உடலின் மெட்டபாலிச அளவை மேம்படுத்துகிறது. இது தவிர, தினமும் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸை குடிக்கும் போது, அது கொழுப்புக்களை எரிக்க உதவி புரிவதோடு, உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கிறது.
நச்சுக்கள் வெளியேறும்
ஒருவர் தினமும் காலையில் எழுந்ததும் முதல் வேளையாக ஒரு டம்ளர் நெல்லிக்காய் ஜூஸை குடிக்கும் போது, உடலின் மூலை முடுக்குகளில் தேங்கியிருக்கும் நச்சுக்கள் உடலில் இருந்து வெளியேற்றப்படுகிறது. எப்படியெனில், நெல்லிக்காயில் உள்ள நீர்ச்சத்து, உடலில் அதிகப்படியான சிறுநீரை உற்பத்தி செய்கிறது. இதன் விளைவாக சிறுநீரின் வழியே அந்த நச்சுக்கள் வெளியேற்றப்படுகின்றன.
கண் பார்வை மேம்படும்
நம் அனைவருக்குமே நெல்லிக்காய் கண்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது தெரியும். அதேப் போல் தான் நெல்லிக்காய் ஜூஸை குடிக்கும் போதும், கண்களின் ஆரோக்கியம் மேம்படும். ஏனெனில் நெல்லிக்காயில் கரோட்டீன் உள்ளது. இது கண் பார்வையை மேம்படுத்தும். எனவே உங்களுக்கு கண்களில் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று நினைத்தால், நெல்லிக்காய் ஜூஸைக் குடியுங்கள்.
ஆற்றல் மேம்படும்
நெல்லிக்காயை ஜூஸை ஒருவர் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கும் போது, அது உடலின் ஆற்றல் அளவை மேம்படுத்த உதவுகிறது. இதற்கு முக்கிய காரணம் நெல்லிக்காயில் உள்ள பல்வேறு ஊட்டச்த்துக்கள் தான். ஆகவே நீங்கள் உங்கள் உடலில் ஆற்றல் இல்லாதது போன்று உணர்ந்தால், உங்கள் ஆற்றலை அதிகரிக்க ஒரு டம்ளர் நெல்லிக்காயை வெறும் வயிற்றில் குடியுங்கள்.
நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
குளிர்காலத்தில் பலரும் பலவிதமான நோய்த்தொற்றுக்களால் சளி, இருமல் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுவார்கள். ஒருவருக்கு அடிக்கடி சளி பிடிக்கிறது என்றால், அவரது நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக உள்ளது என்று அர்த்தம். உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க நினைத்தால், ஒரு மாதம் தினமும் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸைக் குடியுங்கள். பின் நீங்களே உங்கள் உடலில் நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள். இதற்கு காரணம், நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி சத்து தான்.
நெல்லிக்காய் ஜூஸை எப்படி தயாரிக்க வேண்டும்?
நெல்லிக்காய் ஜூஸைக் குடிக்க சிறந்த நேரம் என்றால் அது காலை வேளை தான். அதுவும் நெல்லிக்காய் சாற்றினை எடுத்து, நீரில் கலந்து, வேண்டுமானால் அத்துடன் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிக்கலாம்.
குறிப்பு: நெல்லிக்காய் ஆரோக்கியமானது தான். ஆயினும், ஒவ்வொருவரும் குறிப்பாக ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டவர்கள் தங்களின் உணவில் ஒரு மாற்றத்தை செய்வதாக இருந்தால், அதை ஒரு மருத்துவரிடம் கலந்தாலோசித்த பின்னரே செய்ய வேண்டும் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.