நவ கிரகங்களில் குரு பகவான் சுப கிரகம். குரு பகவான் ஒரு ராசியில் ஓராண்டு காலம் தங்கியிருப்பார்.
மீன ராசியில் ஆட்சி பெற்ற நிலையில் சஞ்சரிக்கும் குருபகவான் ஏப்ரல் 21ஆம் வெள்ளிக்கிழமை மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். குரு பகவானின் பார்வை சிம்மராசி, துலாம், தனுசு ராசிகளின் மீது விழுகிறது. குரு பெயர்ச்சியாலும் குருவின் பார்வையாலும் மேஷம் முதல் கன்னி வரை பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
குரு பகவான் பயணத்தால் மிதுனம், கடகம், சிம்மம், துலாம், தனுசு, மீனம் ராசிக்காரர்கள் அற்புதமான பலனை அனுபவிக்கப் போகின்றனர். அதே நேரத்தில் இந்த குரு பெயர்ச்சியால் மேஷம், ரிஷபம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ராசிக்காரர்களுக்கு பாதிப்பு வருமா என்று அஞ்ச வேண்டாம் சின்னச் சின்ன சங்கடங்கள் மட்டுமே வந்து செல்லும். குரு பகவான் பெரிய அளவில் சோதனைகளை தர மாட்டார்.
மேஷம்
இதுநாள்வரை விரைய ஸ்தானத்தில் சஞ்சரித்த குரு பகவான் மேஷ ராசியில் ஜென்ம குருவாக அமரப்போகிறார். மேஷ ராசிக்காரர்களே..ஜென்ம குரு என்று பயப்பட வேண்டாம் குரு அள்ளித்தரப்போகிறார். ஜென்ம குரு வனத்தினிலே என்று சொல்வார்கள். குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு 5,7,9ஆம் வீடுகளின் மீது விழுகிறது. உங்களுக்கு நிறைய நல்லது நடக்கும். திருமணம் கை கூடி வரும். குழந்தை பாக்கியம் கைகூடி வரும் பாக்கியங்கள் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. தொழிலில் ஏற்பட்டு வந்த தடைகளும் தாமதங்களும் நீங்கி வருமானம் அதிகரிக்கும்.
ரிஷபம்
குரு பகவான் உங்கள் ராசிக்கு 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் பயணம் செய்யப்போவதால் சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். நிறைய வருமானம் வரும். பணத்தை சேமிக்க பாடு பட்டாலும் முடியாது மருத்துவ செலவுகள் ஏற்படும். குருவின் சுப பார்வை உங்கள் ராசிக்கு நான்கு, ஆறு, எட்டாம் வீடுகளின் மீது விழுகிறது. நோய்கள் தீரும் கடன்கள் அடைபடும் கண்டங்கள் விலகும். வீடு வண்டி வாகனம் வாங்குவீர்கள். குரு பகவான் ஸ்தலங்களுக்கு சென்று வாருங்கள் பாதிப்புகள் நீங்கும். கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்படாமல் இருக்க மவுன விரதம் இருப்பது நல்லது விட்டுக்கொடுத்து செல்லவும்.
மிதுனம்
குரு பகவான் உங்கள் ராசிக்கு 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு மேன்மைகளை அள்ளித்தரப்போகிறது. வேலையில் சம்பள உயர்வும் புரமோசனும் கிடைக்கும். வேலை இழந்து தவித்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். தொழில் முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 3,5,7ஆம் வீடுகளின் மீது விழுவதால் சகோதரர்களின் உதவி கிடைக்கும். சகோதரர்களுக்கு உதவி செய்வீர்கள். திருமணம் சுப காரியம் நடைபெறும். குழந்தைக்காக தவம் இருப்பவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு குரு பகவான் உங்கள் ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் அமர்வதால் வேலை தொழிலில் அதிக கவனம் தேவை. குரு நான்காம் வீட்டினை பார்வையிடுவதால் சுப விரைய செலவுகள் ஏற்படும். வீட்டினை அழகுபடுத்த ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். தொழிலில் தடைகள் தாமதங்கள் ஏற்படும். பத்தில் குரு பதவி பறிபோய் விடுமோ என்று பயப்பட தேவையில்லை. குருவின் பார்வையால் பணம் தாராளமாக வரும். அதே நேரத்தில் எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகளும் தேடி வரும். சிலருக்கு வேலையில் சிக்கல் ஏற்பட்டாலும் புதிய வேலை கிடைக்கும். வியாழக்கிழமை விரதம் இருந்து குரு பகவானை வணங்க பாதிப்புகள் குறையும்.
சிம்மம்
சிம்மம் ராசிக்காரர்களுக்கு ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கும் குரு பாக்யங்களை அள்ளித்தரப்போகிறார். தடைபட்டு வந்த காரியங்கள் தடைகள் இன்றி நிறைவேறும். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் நல்ல வேலை கிடைக்கும். செய்யும் தொழிலில் முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும். பதவி உயர்வு ஏற்படும். குழந்தைகளினால் நன்மைகளும் பூர்வ புண்ணிய சொத்துக்களினால் வருமானமும் கிடைக்கும். சமூகத்தில் நல்ல மரியாதை மற்றும் புகழ் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நிறைய நன்மைகளும் சந்தோஷமும் அதிகரிக்க குருபகவானை வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து வணங்கலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு எட்டாம் வீட்டில் அமரும் குரு பகவான் உங்களின் கஷ்டங்களை போக்குவார். குரு பார்வையால் பணவரவு கூடும் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். உறக்கமின்றி தவித்த உங்களுக்கு சுகமான உறக்கம் வரும். வேறு வேலைக்கு இப்போதைக்கு முயற்சி செய்ய வேண்டாம். இருக்கிற பதவியை தக்க வைத்துக்கொள்ளுங்கள். இனிய பயணங்கள் கிடைக்கும். பாதிப்புகள் குறைய குருபகவானை வியாழக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வணங்குங்கள்.