10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 437 மதிப்பெண்கள் பெற்ற மாற்றுத்திறனாளி மாணவன் க்ரித்தி வர்மாவை நேரில் சந்திக்க நடிகர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஜூனூர் கிராமத்தை சேர்ந்த கஸ்தூரி என்பவரின் மகன்
க்ரித்தி வர்மா. நெடுமருதி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் இவர்,
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 437 மதிப்பெண்கள் எடுத்து பள்ளி அளவில்
முதலிடம் பிடித்தார். மாணவன் க்ரித்தி வர்மா, நான்கு வயது இருக்கும் பொழுது
மின்சாரம்
தாக்கியதில் தனது இரண்டு கைகளையும் இழந்துள்ளார்.
இதையடுத்து தன்னம்பிக்கையுடன் படித்த க்ரித்தி வர்மா, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார். இந்த செய்தி ஊடகங்களில் வெளியான நிலையில், உடனடியாக அந்த மாணவனை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவனுக்கு வாழ்த்து கூறியதுடன் அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.
இந்நிலையில் மாணவன் க்ரித்தி வர்மாவை நேரில் சந்திக்க நடிகர் விஜய் விருப்பம் தெரிவித்துள்ளார். இதனால் கிருஷ்ணகிரி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் மூலம் அவர் மாணவனுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து இன்று மாணவன் க்ரித்தி வர்மாவை விஜய் மக்கள் இயக்கத்தினர் நேரில் சந்தித்து வாழ்த்து கூறினர்.